ஆய்வாளர் குறிப்பு:
ஒரு காலத்தில் உலக அளவிலும் இந்திய அளவிலும் தகவல் தொடர்புத் துறையின் இன்றியமையாத அங்கமான தபால், தந்தி மற்றும் தொலைபேசித் துறைகள் அடைந்த அசுர வளர்ச்சியைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைக்கும் மிக அரிய வரலாற்றுப் பதிவு இது. 1953 ஆம் ஆண்டு வெளியான 'சென்னை ஜில்லா ஆபரேட்டர்ஸ் ஃபோரம்' (ஆங்கிலம்) இதழைத் தழுவி, குமாரி எஸ். நீலாயதாட்சி அவர்களால் எழுதப்பட்டு, 1954 வரை உள்ள தகவல்களைத் தாங்கி வெளிவந்த இக்கட்டுரை தமிழ் ஆவணப் பரப்பில் மிக முக்கியமானது. இன்றைய அதிவேக டிஜிட்டல் மற்றும் இணையக் காலகட்டத்தில், நமது முன்னோர்கள் பயன்படுத்திய தபால் முறையின் பின்னணியையும், இந்தியாவின் ஐந்தாண்டுத் திட்டக் காலத்துத் தொலைத்தொடர்பு இலக்குகளையும் தற்காலத் தலைமுறையினர் எளிதாக ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளும் நோக்கில், முற்றிலும் கல்வி மற்றும் வரலாற்றுத் தரவுப் பணிக்காக இக்கட்டுரையை இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன். இது நமது நாட்டின் நிர்வாக மற்றும் சமூகக் கட்டமைப்பு வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாகும். ஆனால், இன்று அலைபேசியில் OTP-க்கு மட்டுமே பயன்படுத்தப்படும் மேசேஜ் பக்கம் போல, தேய்ந்து போயிருக்கின்றது இந்தத் துறை என்பது வருத்தத்திற்குரியது.
தபால் வளர்ச்சி
(குமாரி எஸ். நீலாயதாட்சி)
(உலக அளவிலும் இந்திய அளவிலும் தபால், தந்தி, தொலைபேசித் துறை 1954 வரை அடைந்த வளர்ச்சியைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கும் மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவு இது!)
தபால் அனுப்பும் முறை எத்தனையோ நாளாக இருந்து வருகிறது. கி. மு. 6-ஆம் நூற்றாண்டிலே பர்ஷியாவைச் சைரஸ் என்ற மன்னன் ஆண்டுவந்த காலத்திலேகூட இந்த முறை பழக்கத்தில் இருந்தது. அப்போது சிதியப் போர் நடந்து வந்தது. குதிரைகளை வெவ்வேறு இடங்களில் தயாராக வைத்திருப்பார்கள். அவைகளில் ஆட்கள் ஏறித் தபாலை அங்கங்கே கொண்டு சேர்ப்பார்கள். இதுவரையில் தபாலைப்பற்றிக் கிடைத்த விவரங்களுள் இதுதான் மிகப் பழமையானது. சீனாவிலும் இப்படித் தபால் அனுப்பும் முறை இதையும்விட நெடுநாளாக இருந்துவருகிறதென்று மார்க்கோ போலோ என்ற இத்தாலிய யாத்திரிகர் குறிப்பிட்டிருக்கிறார்; அப்போது சீனாவில் 25 மைல்களுக்கு ஒரு தபால் நிலையம் விகிதம் மொத்தம் 10,000 நிலையங்கள் இருந்தனவாம்; 2,00,000 குதிரைகள் இதற்காகப் பயன்பட்டு வந்தன. ரோம் சாம்ராஜ்யம் தழைத்திருந்த காலத்திலும் இந்த மாதிரி தபால் முறை இருந்தது.
ஐரோப்பாவில் கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் சார்லிமான் என்ற சக்கரவர்த்தி காலத்தில், இந்த மாதிரி முறை பழக்கத்தில் இருந்து வந்தது. வட ஐரோப்பாவில் வியாபாரிகளும், லம்பார்டி, ஆஸ்திரியா இவைகளின் சிற்றரசுகளும் இப்படியே தபால் அனுப்பத் தம் தம் எல்லைகளில் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். கி. பி. 15-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு மன்னனான 11-ஆம் லூயி பழைய தபால் முறையை மீண்டும் புதுப்பித்தான். இங்கிலாந்திலும் கி. பி. 13-ஆம் நூற்றாண்டில் ஜான் என்ற மன்னன் காலத்தில் இந்த முறை அமலில் இருந்தது.
தபால் — செலவு
1683-இல் ராபர்ட் மர்ரே என்பவர் லண்டனுக்குள் பென்னித் தபால் பட்டுவாடா முறையை ஆரம்பித்தார். ஒரு ராத்தலுக்கு மேற்படாத கனமுள்ள கடிதம், பார்ஸல் இவைகளையும் பத்துப் பவுனுக்கு மேற்படாத தொகையையும் அனுப்ப ஒரு பென்னி என்றும், அங்கிருந்து 10 மைல் வட்டாரத்துக்குள் அனுப்புவதாக இருந்தால் இரண்டு பென்ஸ் என்றும் நிர்ணயித்திருந்தார்கள்.
1830-இல் ரெயில் பாதை போட்டதும் அந்த அந்த ஜில்லாவைச் சேர்ந்த தபால்களை அங்கங்கே ரெயில்மூலம் அனுப்பிப் பட்டுவாடா செய்யவேண்டியதாயிற்று. 1838-இல் இதற்கென்றே ஒரு சட்டம் விதித்தார்கள். தபால் ஆபீஸ் அதிகாரிகளுக்கு இது பிடிக்கத்தான் இல்லை. ஆனால் வேறு வழி இல்லை என்று தெரியவே ரெயில் மூலமே அனுப்ப இசைந்தார்கள்.
1837-இல் ஒரு கடிதத்துக்குச் சராசரி 9 பென்ஸ் தபால் செலவாயிற்று; 18-ஆம் நூற்றாண்டில் இருந்ததற்கு இது இரண்டுமடங்கு அதிகமாகும். இப்படிக் கட்டணம் ஏராளமாக இருக்கவே தனிப்பட்டவர்களுக்கு அதிகமாகக் கடிதம் எழுத உற்சாகம் ஏற்படவில்லை. வியாபாரிகள்கூட ஆட்களை அமர்த்திக்கொண்டு அவர்கள் மூலம் தபால் அனுப்பி வந்தார்கள். இது சட்டத்தை மீறிய செயல் என்றாலும் மும்முரமாக நடந்து வந்தது. சர்க்கார் இதை எப்படித் தடுப்பது என்று தெரியாமல் திகைத்தார்கள். பொது மக்கள் அங்கங்கே கூடித் தபால் முறையைச் சீர்திருத்த வேண்டும் என்று கிளர்ச்சி செய்யலானார்கள்.
கடைசியில் 1837-இல் ரோலண்டு ஹில் என்பவர் இது சம்பந்தமாக ஆராய்ந்து, 'தபால் ஆபீஸ் சீர்திருத்தம்' என்று ஒரு புத்தகம் வெளியிட்டார். இதில் புள்ளி விவரங்களை மிகவும் நன்றாகவும் ஒழுங்காகவும் தெளிவாகவும் கொடுத்திருந்தார். 'ஒரு கடிதத்தைத் தபாலில் அனுப்பச் சராசரி $\frac{1}{12}$ பென்னியே ஆகிறது; 200 மைலுக்கு மேற்பட்டால் இன்னும் அதைவிடச் சற்றேதான் செலவு மிகுதியாகும். தபாலை ஒன்றாகத் திரட்டுவதற்கும் பட்டுவாடா செய்வதற்கும் தான் இப்படிச் செலவாகிறது' என்று நிரூபித்துக் காட்டினார்.
ஓர் அவுன்ஸ் கனத்துக்கு மேற்பட்ட கடிதங்களுக்கெல்லாம், எங்கே அனுப்பினாலும் ஒரே அளவு கட்டணந்தான் வேண்டும் என்று அதில் யோசனை சொல்லியிருந்தார். அதற்குமுன் தூரத்துக்குத் தக்கபடி கட்டணத்தொகை வேறுபட்டு வந்தது. இப்படியெல்லாம் செய்தால் தபால் இலாகாவில் வீண் செலவு எவ்வளவோ குறையும் என்று சிக்கன முறைகளையும் எடுத்துக் காட்டினார்.
பொது மக்கள் இதை மிகவும் உற்சாகத்தோடு வரவேற்றார்கள். ஆனால் அதிகாரிகள், ‘இது நடக்கவே நடக்காது. மனக்கோட்டை' என்றெல்லாம் சொல்லி அதைத் தாக்கினார்கள். ஆனால் அநுபவமுள்ள வியாபாரிகளுக்கு ஹில் சொல்வது சரி என்றே பட்டது. அவர்கள் கிளர்ச்சி செய்யவே 1840-இல் இங்கிலாந்து முழுவதும் ஒரே மாதிரி பென்னித் தபால் முறை அமலுக்கு வந்தது.
முதல் பென்னித் தபால் ஸ்டாம்புக்குரிய அமைப்பைத் தயாரித்தவர்கள் மெஸ்ஸர்ஸ் பேகன் பெட்சு என்ற கம்பெனியார். சார்லஸ் ஹெல்த் என்பவர் இதை எஃகில் செதுக்கித் தர 60 கினி செலவாயிற்று. முதலில் கறுப்பு நிறத்திலும், பிறகு பழுப்பாகவும், பின்னால் சிவப்பு நிறத்திலும் இதை அச்சிட்டார்கள். 1860-இலேயே ஸ்டாம்புகளைச் சேகரிப்பதில் சிலருக்கு மோகம் ஏற்பட்டது; பழைய ஸ்டாம்புகளை இப்படிச் சேகரித்து விற்றுச் சில பேர் அப்போதே ருசி கண்டுவிட்டார்கள்.
1874-இல் ஐரோப்பாவுக்கு அனுப்பும் கடிதங்களுக்கு ஒரே மாதிரியாக 2$\frac{1}{2}$ பென்ஸ் என்று தபால் கட்டணம் விதித்தார்கள். 1892-இல் உலகிலுள்ள பிற நாடுகளுக்கும் அதே கட்டணந்தான் என்று நிர்ணயித்தார்கள். 1881-இல் போஸ்டல் ஆர்டர் மூலம் தொகை அனுப்புவது, 1883-இல் பார்ஸல் தபால் அனுப்புவது, 1885-இல் 6 பென்னி தந்தி முறை இவைகளை அமலுக்குக் கொண்டுவந்தார்கள். முதல் உலக மகாயுத்தத்தினால் தபால் கட்டணம் அதிகரித்தது. 1919-இல் 1$\frac{1}{2}$ பென்ஸாக இருந்த கடிதக்கட்டணம் 1920-இல் 2 பென்ஸாகி விட்டது. ஆனால் 1922 இல் மறுபடியும் 1$\frac{1}{2}$ பென்னியாகக் குறைந்தது.
1846-இல் முதல் முதலாகப் பிரிட்டிஷ் தந்திக் கம்பெனியை நிறுவினார்கள். 1863-இல் தந்திக் கருவிகளைத் தயாரிப்பதைத் சர்க்காரின் ஏகபோக உரிமையாக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். விரைவில் இதற்கான மசோதா ஒன்றைக் கொண்டு வந்தார்கள். தனிப்பட்ட கம்பெனிகளுக்கு இதற்காக 72,00,000 பவுன் தரவேண்டியிருந்தது.
1876-இல் கெல்வின் பிரபு அமெரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு முதல் முதலாக டெலிஃபோன் ஒன்றைக் கொண்டு வந்தார். 1880-இல் லண்டன் ஹைகோர்ட்டு உத்தரவுப்படி ‘டெலிஃபோனும் தந்தியைப் போல் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலின் அதிகாரத்துக்கு உட்பட்டதே’ என்று முடிவாயிற்று. 1878-இல் தான் மைக்ரொஃபோன் கண்டுபிடித்தார்கள். முதலில் பிரிட்டிஷ் தபால் ஆபீஸ் தன் அதிகாரத்தைச் செலுத்தத் தீவிர முயற்சிகள் ஒன்றும் எடுக்கவில்லை. ஆகவே, தனிப்பட்ட பல டெலிஃபோன் கம்பெனிகள் முளைத்தன. அவைகளைக் கட்டுத் திட்டப்படுத்தப் போய் எல்லாம் குழப்பமாக முடிந்தது. 1912-இல்தான் இங்கிலாந்திலுள்ள எல்லா டெலிஃபோன் கம்பெனிகளையும் ஒன்றாக இணைத்துத் தபால் இலாகா அதிகாரத்தின்கீழ்க் கொண்டு வந்தார்கள். அதுமுதல் ஒழுங்காகவும் அதிகச் செலவில்லாதபடியும் எல்லா வேலைகளும் நடந்து வருகின்றன.
1895-இலே தான் பிரிட்டிஷ் தபால் ஆபீஸ்களில் முதல் முதலாகத் தந்தியில்லாக் கம்பிப் போக்குவரத்துக்கான வசதிகளை ஏற்படுத்தினார்கள். 1901-இல் மார்க்கோனி அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு அப்பால் முதல் முதலாக வொயர்லஸ் சமிக்ஞைகள் அனுப்பமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார். 1904-இல் இதையெல்லாம் சர்க்காரே முழுவதும் ஏற்று நடத்த வேண்டும் என்று வொயர்லஸ் டெலிகிராபி சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். இதனால், ‘தபால் ஆபீஸின் அநுமதி இல்லாமல் யாரும் வொயர்லஸ் கருவி வைத்திருக்கக்கூடாது; அப்படி வைத்திருந்தால் அது சட்டவிரோதம்' என்று முடிவாயிற்று. பின்னால் முக்கியமான எல்லா நாடுகளும் கூடி, இது சம்பந்தமாக ஒத்த முடிவுக்கு வந்தன.
இப்போது டெலிவிஷன் வந்துவிட்டது; இது சம்பந்தமான பொறுப்புக்களையும் தபால் ஆபீஸ் ஏற்க வேண்டியிருக்கும்.
இந்தியாவிலும் இதே ரீதியில்தான் தபால் இலாகா வளர்ந்தது. 1854-இலேயே இங்கேயும் அதற்கான முயற்சிகளையெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். இந்தியாவில் இன்று மொத்தம் 30,000 தபால் ஆபீஸ்களுக்கு மேலே இருக்கின்றன.
1914-18-இல் இந்தியாவுக்குள் கடிதப் போக்குவரத்துக்குக் கார்டு ஒன்றுக்குக் காலணாவும், ஒரு தோலா கனத்துக்கு மேற்படாத கவர்களுக்கு அரை அணாவும் தபால் கட்டணம் என்று ஒரே அளவாக நிர்ணயித்தார்கள். ஆனால் பின்னால் செலவு அதிகமானதால் கார்டுகளுக்கு $\frac{1}{2}$ அணா, கவர்களுக்கு $\frac{3}{4}$ அணா, 1 அணா, 1$\frac{1}{2}$ அணா, 2 அணாவும் கட்டணமாக விதித்தார்கள். அதே மாதிரி மணியார்டர் கமிஷனையும் உயர்த்தினார்கள்.
1943 வரையில் தனிப்பட்ட பல டெலிஃபோன் கம்பெனிகள் இருந்து வந்தன. பிறகு சர்க்காரே இவைகளை எடுத்துக் கொண்டார்கள். இப்போது சர்க்கார் தபால் தந்தி இலாகா டைரக்டர்-ஜெனரலே அவைகளைக் கவனித்து வருகிறார்.
இப்போது இந்தியா முழுதும் 10,000-க்கு மேற்பட்ட ஜனத்தொகை கொண்ட எல்லா நகரங்களுக்கும் டெலிஃபோன் வசதி ஒழுங்காக அமைந்திருக்கிறது. மத்திய டிரங்க் டெலிஃபோன் மூலம் இந்திய யூனியனிலுள்ள நகரங்களில் வசிப்பவர்களோடெல்லாம் பேசலாம். அதேமாதிரி பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, மலாயா முதலிய இடங்களுக்கும் இங்கிருந்து டெலிஃபோன் வசதி உண்டு.
ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ்த் தபால் இலாகா பின்னும் அபிவிருத்தி அடையும். 2000-க்குக் குறையாத ஜனத்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தபால் ஆபீஸ் ஏற்படுத்துவது என்றும், 5000-க்குக் குறையாத ஜனத்தொகை கொண்ட கிராமங்களுக்குத் தந்தி - டெலிஃபோன் வசதிகளைச் செய்து கொடுப்பதென்றும் தீர்மானித்திருக்கிறார்கள்.
(மூலம்: சென்னை ஜில்லா ஆபரேட்டர்ஸ் ஃபோரம் (ஆங்கிலம்: 1953), சென்னை.)