ஆய்வாளர் குறிப்பு:
            ரஷ்யா என்பது வல்லரசு நாடு என்பதும், அதில் பல்வேறு புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கின்றனர் என்பதும் தெரியும். அதில் ஒருவரான புகழ்பெற்ற சோவியத் எழுத்தாளர் இல்யா எர்ன்பர்க் அவர்களின் விறுவிறுப்பான எழுத்து நடையில், கே. எஸ். பி. அவர்களால் மிக நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 1950-க்கு முந்தைய அரிய தமிழ் இதழில் வெளியான உன்னதமான போர்க்காலக் கதை இது. உலகப் போரின் கோரப் பின்னணியில், மனித உயிர்களின் அவலங்களையும், அதற்கிடையே தவிக்கும் லிசா என்ற நாட்டிய மங்கையின் கலை மற்றும் காதல் போராட்டத்தையும் இக்கதை மிக உருக்கமாக விவரிக்கிறது. அசல் படைப்பாளர்களுக்கும் இதழாசிரியர்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில், காலத்தால் அழியக் கூடிய நிலையில் இருந்த இத்தகைய அரிய இலக்கியப் பொக்கிஷங்களை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் நோக்கோடும், கல்வி மற்றும் வரலாற்று ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன். இக்கதை வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், போர் எவ்வளவு கொடூரமானது என்பதையும் மனிதநேயத்தின் தேவையையும் தற்காலச் சமூகத்திற்கு உணர்த்துகிறது.

 (யுத்தத்தின் பின்னணியில் கலை மற்றும் காதலின் உன்னதத் தத்துவத்தை விளக்கும் மிக உருக்கமான ருஷியக் கதை இது!)

நடிகை(ருஷியக் கதை)

மூலம்: இல்யா எர்ன்பர்க்

தமிழ்: கே. எஸ். பி.
இன்று பிரபலமாக விளங்கும் முக்கிய ஸோவியத் எழுத்தாளருள் ஒருவர் இந்த ஆசிரியர். விறுவிறுப்பும் ஒட்டமும் நிறைந்திருக்கும் இவர் நடையில்.
"உன்னைப் போர்முகத்துக்கு மாற்றியிருக்கிறோம்!" என்று நாடகக் காரியதரிசி சொன்னதும் லிசாவின் கண்கள் அகல விரிந்தன. அவள் முகத்திலே சந்தேகக் குறிகள் தோன்றி மறைந்தன.
தினமும் அழகிய நகரங்களும் நூற்றுக்கணக்கான தாய்மார்களும் குழந்தைகளும் கண்ணீர் விட்டுக்கொண்டே சாகும் இடத்தில் லிசா நடனமாடவேண்டும்! 'கடமைக்காக இதை நான் ஒப்புக்கொள்கிறேன்!' என்று அவள் தன் டயரியில் குறித்துக் கொண்டாள்.
அவள் அப்போது ஒரு சின்ன நகரத்திலே நாட்டியம் ஆடி வந்தாள். சாந்தம் நிறைந்த அந்த இடத்திலே இப்போது ஈ காக்கை கூடப் பயத்தால் தலை நீட்டவில்லை. நகரத்திலிருந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. அவர்களுடைய உற்றார் உறவினர்கள் போர்முகத்திலே இருந்தனர். தபால்காரர்களின் காலடிச் சத்தத்தைக் கண்டு, 'எந்த நிமிஷம் எந்தக் கெட்ட செய்தி வருமோ?' என்று அவர்கள் நடுங்கினர். சேனை பின்வாங்கிக் கொண்டிருந்தது. மக்கள் செய்தி இலாகா ஆபீசைச் சூழ்ந்துகொண்டனர். ஆணா, பெண்ணா, மேஜர்களின் மனைவிகள், பள்ளிக்கூடத்தல் படிக்கும் குழந்தைகள் - எல்லாருடைய முகத்திலும் பீதியும் நடுக்கமுமே தெரிந்தன.
நாடகக் கொட்டகையில் பழைய கதைகளையே நடித்தார்கள். ‘ஏன்?’ என்று லிசா தன்னையே கேட்டுக்கொண்டாள்.
‘உலகத்தை அறிந்தால், எல்லாரும் உன்னை மதிப்பார்கள். உனக்குச் சாவே கிடையாது!’ என்ற அமர வாக்கியத்தை அவள் ஞாபகப்படுத்திக் கொண்டாள்.
இரவில் ஒழிந்த நேரங்களில் லிசா கொட்டகைக்குச் சென்று மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று உற்றுக் கேட்பாள். பல பேருடைய பேச்சு ஒரே மாதிரியாக இருந்தது. 'என் கணவர் போர்முகத்திலே என்ன ஆனாரோ!' என்றுதான் பல பெண்கள் புலம்பினர். லிசா தள்ளாடிக்கொண்டே தன் அறைக்குச் சென்றுவிடுவாள்.
அப்போதுதான் அவளுக்குத் தன்னைப்பற்றிய நினைவு வரும். இந்தத் தொழிலுக்கு அவள் எப்படி வந்தாள்?
ஏங்கும் உள்ளத்தோடு அவள் பழைய நிகழ்ச்சிகளை எண்ணுவாள். அவள் பிறக்கும்போதே நாட்டிய மங்கையாகத்தான் தோன்றினாளா?
இல்லவே இல்லை. எத்தனையோ முறை ஆசையோடு அவள் தாய், "லிசா, கொஞ்சம் நாட்டியமாடேன்!" என்று கெஞ்சியிருக்கிறாள். அப்போதெல்லாம் பிகு செய்துகொண்டு வாசற்புறம் சென்றுவிடுவாள் லிசா. சிறுவயது முதலே அவள் நாட்டியக் கலை பயின்றது என்னவோ வாஸ்தவம்தான். ஆனால் வாழ்க்கை முழுவதுமே நாட்டியமாட நேரிடும் என்று அவள் அப்போது நினைக்கவில்லை!
லிசாவைத் தனியே விட்டுவிட்டு, அவள் தாய் கண் மூடினாள். லிசாவுக்கு அப்போது மண வயது. யுத்தத்துக்கு முன்பு புரோனின் என்ற எஞ்சினியரை அவளுக்குக் கொடுப்பதாகப் பேச்சு நடந்தது.
ஒரு நாள் மாலை லிசா அவனைப் பார்க்கிலே சந்தித்து, அவன் அழகிலே மயங்கினாள். அவன் அவள் கரங்களைத் தாங்கிக்கொண்டபோது, அவன் உள்ளத்திலே அமிர்தம் பாய்ந்தது. அவள் குறும்புப் புன்னகையோடு அவனைப் பார்த்தாள். 'நாட்டியமாட நேரிடும்!' என்று அவள் அப்போது எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதற்கப்புறம் அவனை அவள் சந்திக்கவே இல்லை!
துயரம் நிரம்பிய அவள் உள்ளத்துக்கு நாட்டியம் ஆறுதல் அளித்தது. ஆனால் உண்மையிலே நடிகையாக அவள் விரும்பவில்லை. எத்தனையோ முறை மேடையை அவள் சபித்திருக்கிறாள். ஆனால் நாட்டியமாடத் தொடங்கியதும் அவள் முகத்திலே பரவசம் தாண்டவமாடும். துயரம் எங்கோ ஓடி ஒளிந்துகொள்ளும்!
நாடகக் கம்பெனியார் அவளுக்குத் திறமை இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் தான் எதையோ பறிகொடுத்து விட்ட நினைப்புத்தான் லிசாவுக்குத் தோன்றும். தன்னுடைய வறண்ட வாழ்க்கைச் சம்பவங்கள் அவள் கண்முன்னே தோன்றி, 'காதல் பனித்துளியைப்போல, இளம் பெண்ணின் வாழ்க்கை அபாயம் நிறைந்தது!' என்று எச்சரிக்கும். உலகத்திலே 'காதல்' என்ற சொல்லுக்கு இடமே இல்லை என்று லிசாவுக்குத் தோன்றும். கலையிலே அவளுக்கு விருப்பம் குறைந்தது. 'உண்மையான கலைக்கு இடமில்லை!' என்று அவள் டயரியில் குறித்துக்கொண்டாள்.
இப்போது அவள் போர் முகத்துக்குப் போயாக வேண்டும்! உதட்டிலே புன்னகையைப் படர விட்டுக்கொண்டே அவள் நடந்தாள். அவள் இதயம் கனத்தது. 'போரிலே மன்றாடும் வீரர்களுக்கு என் நாட்டியம் மகிழ்ச்சியூட்ட முடியுமா?' - லிசாவுக்கு உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டியது.
நடிகர் கூட்டம் கிளம்பியது. குதிப்பும் கும்மாளமுமாகக் கிளம்பினவர்கள், அமைதியோடு நடந்தனர். பாழடைந்த வீடுகள், கருகி உதிரும் மரங்கள், மூடுபனி, சாம்பலாகும் உடல்கள் - இவற்றைச் கண்ணெதிரே அவர்கள் கண்டார்கள்.
அருகிலிருந்த ஒரு குடிசையில் அன்றிரவு அவர்கள் முகாம் போட்டார்கள். கண் தசைகள் சுருங்கிப்போன வயதான கிழவி ஒருத்தி நடிகர்களுக்குத் தன் சோகக் கதையைச் சொன்னாள்.
"பாழும் பனியிலே இரவு படுத்தவன்தான் என் மகன். காலையிலே விறைத்துப் போயிருந்தது அவன் உடல். மூச்சு எப்போதோ நின்றுவிட்டது!" - கிழவி கும்மட்டியை மூட்டினாள்.
லிசாவுக்கு வயிற்றைக் குமட்டி எடுத்தது. கிழவியின் மகனைப் பற்றிய செய்தி அவளை உலுப்பி விட்டது. 'என்ன யுத்தம், என்ன கொடுமை! மனிதத்தன்மைக்கு இங்கே இடமே இல்லையா?' என்று அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள். அவளுக்கு அன்றிரவு சரியான தூக்கமே வரவில்லை.
மறுநாள் காலையில் எழுந்தபோது ஒரு புறம் பிணங்களின் குவியலும், மறுபுறம் பாழடைந்த வீடுகளும் முடங்கிப்போன குதிரைகளும் அவள் கண்களில் பட்டன. காயமடைந்தவர்களை ‘ஸ்ட்ரெச்சரில்’ தூக்கிச் சென்றார்கள். குளிர் தாங்காமல் உஷ்ணத்துக்காகத் தன் இரு கைகளையும் ஒரு சோல்ஜர் உரசிக் கொண்டான். அவனுடைய உதடுகள் வெலவெலவென்று நடுங்கின. லிசாவுக்குக் கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. நடிகர் கூட்டம் கிளம்பியது.
అன்று ஒரு பள்ளிக்கூட ஹாலில் நாட்டியம் நடந்தது. ஜெர்மானியர்கள் அந்த இடத்தில் தங்கள் ஆயுதங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். நடிகர்கள் உடையணிந்து கொள்ளும் அறைகளில் துப்பாக்கிகள் தொங்கின. பூட்சையும் ஜாக்கெட்டையும் கழற்றிவிட்டு, நீண்ட கவுனை லிசா அணிந்துகொண்டாள். அவள் கரங்கள் நடுங்கின. உதட்டை அவள் கடித்துக் கொண்டாள்.
அவளுடைய நாட்டியத்தைக் கண்டு மக்கள் வியந்தனர். அதில் முக்கால்வாசிப் பேர்கள் தொழிலாளிகள். யுத்தத்தில் பல வேலை அவர்களுக்கு. நாளைக்கு அவர்களுடைய உயிர் சாசுவதமில்லை!
லிசாவின் மெய் சிலிர்த்தது. காதலுக்கும் மனிதத்தன்மைக்குமுள்ள வேற்றுமையை அவள் உணர்ந்தாள். காதலைப் பற்றி இனி அவளுக்குக் கவலையில்லை. அவள் எதிரே கைகட்டி உட்கார்ந்திருக்கும் கூட்டத்திலே அவள் மனிதத் தன்மையைக் கண்டாள்.
சடசடவென்று அவர்கள் கை தட்டினார்கள். லிசா மெல்ல நகைத்தாள். அவள் உள்ளத்திலே மகிழ்ச்சி நிரம்பியது. ரத்தம் தேவையான உடலுக்குத் தன் உடலிலிருந்த ரத்தத்தைக் கொடுத்தாற்போல அவள் மகிழ்ந்தாள். அறைக்குத் திரும்பியபோது முந்திய நாள் அவ்வளவு சோர்வு இல்லை. உடல் முழுவதும் லேசாக இருந்தது.
நாட்கள் ஊர்ந்தன. லிசா ஆஸ்பத்திரிகளிலே, காட்டின் மத்தியிலே, விமான நிலையத்திலே - பல இடங்களிலே நடனமாடினாள். துப்பாக்கிச் சத்தமும் பீரங்கிகளின் இடி முழக்கமும் அவளுக்கு மரத்துவிட்டன. வழக்கப்படி ஒரு 'கிளப்'பில் அவள் தேநீர் குடித்துக் கொண்டிருந்தாள்.
வயதான ஒரு ஜெனரல், "நான் ஒரு பழைய நாட்டிய ரசிகன். பட்டினத்திலே ஒரு நடனம் பார்க்க நான் தவறியது கிடையாது!" என்றான்.
எதிர்பாராத விதமாக ஒரு வாலிபனை அவள் அன்று சந்தித்தாள். போரிலே 'பைலட்'டாக அவன் வேலை செய்பவன்.
"நீங்கள் என் முதற் காதலை ஞாபகப்படுத்துகிறீர்கள்?" என்றான் அவன், லிசாவின் முகத்தைப் பார்த்தபடியே. லிசாவுக்கு அவனைப் பிடித்துவிட்டது. அவர்கள் எல்லையின்றிப் பேசினார்கள்.
"உங்கள் பெயரென்ன?" என்று கேட்டாள் லிசா.
"டோரனின்!"
நாட்டியம் முடிந்ததும் வழக்கப்படி டோரனினைச் சந்திப்பது அவள் வழக்கமாகிவிட்டது. கொஞ்சங் கொஞ்சமாக அவனைப் பற்றிய தகவலை அவள் அறிந்தாள். போருக்கு முன்பு அவன் ரசாயனம் பயின்றவன். அவர்கள் பல விஷயங்களைப்பற்றி அலசி அலசிப் பேசினார்கள். தாய்மை, குழந்தைப் பருவம், காதல், இலக்கியம் எல்லாம் அவர்கள் பேச்சிலே குறுக்கிட்டன.
லிசா டோரனினைச் சந்தித்து ஒரு வாரந்தான் ஆயிற்று. நடிகர்களுக்கு ஒதுக்குப் புறத்தில் நல்ல இடமாக ஒன்று பார்த்துக் கொடுத்தான் டோரனின். அவன் முகத்திலே நல்ல களை சொட்டவில்லை என்றாலும், லிசாவுக்கு அவனைப் பிடித்துவிட்டது.
'என் வாழ்க்கையிலே எத்தனையோ மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் டோரனினைப்போல் ஒருவரை..! அவர் நடிகரல்ல, உண்மைதான்! நல்ல அழகர் என்றும் அவரைச் சொல்ல முடியாது. ஆனால் ஆழம் நிரம்பிய அந்தக் கண்கள், அவர் சரளமான பேச்சு!' லிசா தன் நினைப்பை உறுதியாக்கிக்கொண்டாள்.
“உன்னை லிசா என்று அழைத்தால் கோபித்துக்கொள்ள மாட்டாயே?” என்றே ஒரு நாள் அவன் கேட்டுவிட்டான்.
“என்ன, நாளைக்கு நீங்கள் வெளியூர் போகிறீர்களாமே!” என்று அவள் கவலையோடு கேட்டாள்.
அகன்ற அவன் மார்பிலே தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மினாள் லிசா.
தன் இருப்பிடத்துக்குத் திரும்பியபோது லிசாவுக்கு உலகமே சூனியமாகத் தென்பட்டது. இப்போது போர் மும்முரங்கூட ஓய்ந்திருந்தது. “என்ன லிசா, என்னவோ போல இருக்கிறாய்? போர்கூட நின்றுவிட்டதாமே!” என்று ஒரு நடிகன் கேட்டான்.
லிசா ரோஷத்தோடு, “மனிதர்கள் உயிருக்கு அங்கே மன்றாடுகிறார்கள்! உனக்கு எவ்வளவு திமிர், இப்படிச் சொல்ல?” என்றாள். நாடகக் கொட்டகை சோபையற்று விளங்கியது. கை தட்டலும் மக்களின் ஆரவாரமும் லிசாவுக்கு அடியோடு வெறுத்துவிட்டன. ஒரு காலத்தில் அவள் இந்தக் கை தட்டலுக்காகத் தவங் கிடந்தாள்! ஆனால் இன்று— அவளுக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. எத்தனையோ எழுதலாமே என்று அவள் பேனாவைக் கையிலெடுத்தாள்.
'எதை எழுதுவது, யாருக்கு எழுதுவது?' அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தன் உணர்ச்சிகள் அனைத்தையும் கொட்டி அவள் ஒரு கடிதம் எழுதினாள். என்ன தோன்றியதோ, அடுத்த கணமே அதை அவள் சுக்கு நூறாகக் கிழித்து எறிந்தாள்.
அன்று அவளுக்கு டோரனினிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது.
“வாழ்க்கை விசித்திரமாக இருக்கிறது, லிசா! நீ என்னைப் போர்முகத்திலே சந்தித்ததால் மயங்கியிருக்கிறாய். ஆனால் போர் முடிந்து நான் அங்கே வந்தால் உன் கருத்து வேறு விதமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நீ ஓர் உயர்ந்த நடிகை. நான் சாதாரண ரசாயன நிபுணன் . . !” கடிதத்தை மேலே படிக்கவில்லை அவள்!
அவளுடைய மார்பு விம்மியது. 'டோரனின் எழுதியிருப்பதும் உண்மைதான். நான்தான் அவரைக் கண்டு ஏமாந்து போயிருக்கிறேன்' என்று அவள் சமாதானம் கூறிக்கொண்டாள். ஆனால் அடுத்த கணமே, ‘என்னை அவருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. அதனால்தான் இப்படிக் கடிதம்...!’ என்ற எண்ணம் தோன்றியது.
இந்த மனப் போராட்டத்திலேயே லிசா ஒரு வாரத்தைக் கடத்தினாள். லிசாவால் மன வேதனையைத் தாங்க முடியவில்லை. பரபரவென்று அவள் டோரனினுக்கு எழுதலாளாள்:
“அன்புள்ள . . நான் உங்களை மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன். உங்கள் காதலுக்காக நாட்டியத் தொழிலை வேண்டுமானாலும் விட்டுவிடுகிறேன். கலை இல்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் உங்களைப் பிரிந்து..!”
'கலைக்கும் எனக்கும் அவ்வளவுதான் சம்பந்தம்!' என்று கடிதத்தை அவள் தபாலில் சேர்த்தாள்.
பொறுமை ஒரு பெரிய கலை. கடிதத்துக்குப் பதில் வருமென்று லிசா நாள் கணக்கில் காத்திருந்தாள். தபால்காரன் வெறுங்கையைக் விரித்துக்கொண்டே சென்றான். அவள் தவித்தாள்; கண்ணீர் விட்டாள்.
அன்று அவளுக்கு நாட்டியமே பிடிக்கவில்லை. மிகவும் மோசமாகவே நடித்தாள். டோரனின் செத்துவிட்டான் என்று அவள் தீர்மானித்தாள். வாழ்க்கை அவளுக்கு வெறுத்துவிட்டது. மனித யந்திரம்போல அவள் உடையணிந்தாள்; நடித்தாள்; சாப்பிட்டாள்!
கடைசியில் தபால்காரன் அவளைத் தேடிக்கொண்டு ஒரு நாள் வந்தான். லிசா பரபரவென்று கடிதத்தைப் பிரித்துப் படிக்கலானாள்:
“உனக்குக் கெட்ட செய்தி வருகிறது. உன் காதலன் டோரனின் ஆஸ்பத்திரியில் குத்துக் காயங்களோடு மாண்டு விட்டான். அவனைக் காப்பாற்ற நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம், பயனில்லை. முடிவு வரையில் அவன் தைரியமாக இருந்தான். இந்தக் கைக் கடிகாரத்தை உங்கள் காதல் சின்னமாக உனக்கு அனுப்பச் சொன்னான்.
“நான் ஒரு தள்ளாத நர்ஸாக இந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறேன். இந்தச் சமயத்தில்...
உனக்கு ஆறுதல் சொல்ல வேண்டியவள், துயரத்தை உண்டாக்குகிறேன்.”
லிசாவுக்குப் பைத்தியம் பிடித்திருக்கக்கூடும். ஆனால் அவள் அவ்வளவு கோழையாகிவிடவில்லை. மூன்று நாள் வரையில் அவள் நாடகத்துக்குச் செல்லவில்லை. புண்பட்ட உள்ளத்தைக் கொஞ்சங் கொஞ்சமாகத் தேற்றிக்கொண்டாள்.
நாலாவது நாள் அவள் தியேட்டருக்கு வந்தாள். எங்கிருந்தோ அவளுக்குத் தைரியம் பிறந்தது. முந்தின தினத்தைவிட நன்றாக நடித்துவிட்டாள்.
“லிசா, உலகத்தை நீ அறிந்துவிட்டாய். உனக்கு இனிச் சாவே கிடையாது!” என்று உருக்கமாக டைரெக்டர் கூறினார். மக்கள் கை குலுக்க அவளைச் சூழ்ந்து கொண்டனர்.
“லிசா, நீ உண்மையான சிறந்த நடிகை!” என்று காரியதரிசி நாத் தழுதழுக்கக் கூறினார். லிசா எதையும் காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. அறைக்குத் திரும்பியதும் முதல் வேலையாக அந்த நர்ஸின் கடிதத்தை நூறாவது முறையாகப் படித்தாள். இனிமேல் காதலைப் பற்றி அவளுக்குக் கவலையில்லை. நூற்றுக்கணக்கான பேரின் மனிதத்தன்மையை அவள் இதயம் பெற்றுவிட்டது.
டோரனினுடைய கைக்கடிகாரம் பன்னிரண்டை நோக்கி வேகமாக ஓடியது. “நாட்டியம் என் கலை, வாழ்க்கை, காதல் மூன்றும்!” என்று லிசா முணுமுணுத்தாள்.