ஆய்வாளர் குறிப்பு:
இந்தியாவின் தேசியக்கீதத்தை வடிவமைத்து, உலகப் புகழ்பெற்ற கவியரசர் ரவீந்திரநாத தாகூர் அவர்களின் உன்னதமான தத்துவச் சிந்தனையில் உருவாகி, த. நா. ஸேனாபதி அவர்களின் தூயத் தமிழ் நடையில் மொழிபெயர்க்கப்பட்டு, 1954-ஆம் ஆண்டு 'மஞ்சரி' இதழில் வெளியான மிக அரிய சிறுகதை இது. பக்தி மற்றும் வழிபாட்டுச் சடங்குகளுக்குள் மட்டும் இறைவனைத் தேடித் தன்னை வருத்திக் கொள்ளாமல், சக மனிதர்களோடு கலந்து, உலகத்து இயற்கை வாழ்வோடு இணைந்து வாழ்வதே ஆன்மாவின் உண்மையான 'விடுதலை' என்பதை இக்கதை மிக ஆழமாக உணர்த்துகிறது. கால ஓட்டத்தில் மறைந்து போகக்கூடிய இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க பழங்கால இலக்கியப் பொக்கிஷங்களை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் நோக்கோடும், தூயத் தமிழ் மொழி மற்றும் கல்வி ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன். இக்கதை நவீன சமூகத்தின் ஆன்மீக மற்றும் வாழ்வியல் பார்வையைச் செப்பனிட உதவும் ஒரு சிறந்த தத்துவப் படைப்பாகும்.
விடுதலை
மூலம்: ரவீந்திரநாதர்
தமிழ்: த. நா. ஸேனாபதி
(தாகூரின் மிக உன்னதமான தத்துவக் கதை இது. வழிபாட்டுச் சடங்குகளுக்குள் இறைவனை அடைத்து வைக்காமல், மனிதர்களோடு கலந்து இயற்கையோடு வாழ்வதே உண்மையான 'விடுதலை' என்பதை இக்கதை உணர்த்துகிறது.)
பழைய வைஷ்ணவ பதாவளி இலக்கியத்தின் சுவையில் இளவயது முதல் ஈடுபட்டவர் கவியரசர். அவருடைய கவிதைமணம் கமழும் இந்தக் கதையை அநுமதி பெற்று இங்கே மொழிபெயர்த்துத் தந்திருக்கிறோம்.
தன் கனவில் கண்ட கண்ணனை எதிர்நோக்கியிருந்தாள் ஒரு பேதைத் தலைவி. பூந்தோட்டத்தின் மூலையிலே ஒரு மேடை அமைத்தாள்; அதிலே அவன் உருவத்தை மண்ணிலே அமைக்க உட்கார்ந்தாள். அவள் மனத்தில் இருந்த அந்த உருவத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிப் பார்க்கும்போது அவள் கண்களில் நீர் வரும். ஆனால் மண்பொம்மை உருவாக உருவாக மனத்தில் இருந்த கண்ணன் உருவம் மங்கி வந்தது. தன் மேலேயே அவளுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. பின்னும் கடுமையாக உடலை வருத்திக் கொண்டாள். பழமும் நீருமே உட்கொண்டாள்; புல்லையே படுக்கையாகக் கொண்டு நோன்பு நோற்றாள். உள்ளத்தில் இருந்த அந்த உருவத்தைச் செய்து முடிக்க முடிக்க உள்ளம் வெறிச்சென்று ஆகிவந்தது. 'அப்படி ஒன்றும் நாம் பிரமாதமாகச் செய்து முடித்துவிடவில்லை' என்று அவளுக்குத் தோன்றியது. இன்னும் சிறப்பாகச் செய்து விடவேண்டும் என்று முயன்றாள். ஆனாலும் கனவில் கண்ட உருவுக்கும் அதற்கும் உள்ள வேற்றுமை மிகுதியாகிக் கொண்டே வந்தது.
அந்த உருவத்துக்குத் தன் நகைகளை எல்லாம் போட்டுக் பார்த்தாள். நூறு தாமரை மலர்களுக்கு மேல் எடுத்து வந்து அதனை அர்ச்சித்தாள். மாலை நேரத்தில் அதன் எதிரே மணமிகுந்த தைலவிளக்கு ஏற்றினாள். அது தங்கக் குத்து விளக்கு. தைலத்தின் விலையோ அதிகம். நாளுக்கு நாள் உருவத்தின் கழுத்தில் நகைகளை மிகுதியாகப் போட்டுக் குவித்தாள். பூஜைப் பொருள்கள் மேடையை மட்டும் என்ன, உருவத்தையே மறைத்துவிட்டன.
2
ஒரு சிறுவன் அப்போது அந்தப் பக்கம் வந்தான். “என்னுடன் விளையாட வருகிறாயா?” என்றான்.
“எங்கே?”
“இங்கேதான். இந்த மேடையின் அருகில்.”
பேதை பரபரப்போடு, “ஊஹும், இங்கே யாரும் விளையாடவே கூடாது” என்றாள். அவன் போய்விட்டான்.
இன்னொரு பையன் அங்கே வந்தான்; “பூப் பறித்துக்கொள்கிறேனே” என்றான்.
“எங்கே?”
“இதோ இந்த மேடை அருகில் இருக்கும் சண்பக மரத்திலிருந்துதான்.”
பேதை அந்தப் பையனை அடித்து, “இங்கே யாரும் பூப் பறிக்கக்கூடாது. போ!” என்று விரட்டினாள். அவன் போய்விட்டான்.
மற்றொரு பையன் அங்கே வந்தான். “மாலை நேரமாகிவிட்டது. இருட்டி வருகிறது. வழி தெரியவில்லை. இந்த விளக்கைக் கொஞ்சம் கொடு” என்றான்.
“எந்த விளக்கு?”
“இதோ, இந்த மேடையில் இருக்கிறதே; இதுதான்.”
பேதைத் தலைவி சீறி எழுந்து அந்தப் பையனையும் அடித்து, “சீ, போ! நான் ஒன்றும் தர மாட்டேன்” என்று விரட்டிவிட்டாள்.
3
அந்தச் சிறுவர்கள் எல்லோரும் போனதும் இன்னொரு சிறுவர் கூட்டம் அங்கே வந்தது. அவர்கள் ஆடியும் பாடியும் வருவதைச் சற்று நேரம் கண் கொட்டாமல் பேதை பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு திடுக்கிட்டு, “ஐயோ! இவரை மறந்தே போய்விட்டேனே!” என்று, தான் செய்த தலைவனின் உருவத்தைப் பார்த்து நாணித் தலை குனிந்து கொண்டாள்.
தேர்த் திருநாள் நெருங்கியது. அந்த ஊரில் வயதான தாத்தா ஒருவர் இருந்தார். அவர் அந்தப் பெண்ணைப் பார்த்து, “ஏன் அம்மா, தேர் பார்க்க வரவில்லையா?” என்றார்.
பேதை, “ஊஹும். நான் எங்கேயும் போகப் போவதில்லை” என்றாள். தாத்தா போய்விட்டார்.
பிறகு அவள் தோழி வந்தாள். “திருநாள் பார்க்க வரவில்லையாடி?” என்றாள்.
“ஊஹும். எனக்கு வர நேரமில்லை” என்றாள் பேதை.
அவள் தம்பி வந்து கூப்பிட்டான். “என்னையும் தேர்த் திருநாளுக்கு அழைத்துக்கொண்டு போயேன், அக்கா” என்றான்.
“ஊஹும். முடியாது. நான் பூஜை செய்ய வேண்டும்.”
4
இரவு அங்கேயே கண் அயர்ந்தாள் பேதை. அதற்கிடையே கூட ஜனங்கள் போய் வரும் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. சில பேர் வண்டியிலும் போனார்கள்; சில பேர் நடந்தும் போனார்கள்; சிலபேர் முதுகில் மூட்டை இருந்தது; சிலர் கை வீசிக்கொண்டு போனார்கள்.
விடியற்காலை. அவள் தூக்கம் கலைந்து எழுந்திருந்தாள். வழிப்போக்கரின் பாட்டும் சரி, பறவைகளின் இன்னொலியும் சரி, அன்று ஏனோ அவள் காதில் விழவில்லை. சட்டென்று, “நாமும் புறப்பட்டுப் போகலாம்” என்று கொஞ்சம் தூரம் போனாள். ஆனால் உடனே, ‘ஐயோ! பூஜை பண்ணவேண்டுமே! அதை விட்டு எப்படிப் போவது?’ என்ற நினைவு வந்தது. திரும்பி வந்தாள், மேடைக்கு அருகே.
ஆனால் அங்கே அவள் செய்து வைத்த கண்ணனின் உருவமோ மேடையோ இருந்தால்தானே! வழிப்போக்கர் போய்ப் போய், அது ஒற்றையடிப் பாதையாகிவிட்டது!
'ஐயோ! அது போய்விட்டதே!' என்று முதலில் தோன்றியது அவளுக்கு. உடனே, 'போனால் போகட்டுமே! நாம் நினைத்த மாதிரியே அது அமையவில்லை. தொலையட்டும்' என்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டாள்.
அப்போது அவள் சின்னஞ்சிறு தம்பி வந்தான்; “என்னைத் திருநாளுக்கு இப்போதாவது அழைத்துக்கொண்டு போயேன்” என்றான்.
“சரி, வா” என்று சொல்லிக்கொண்டே மேடையும் உருவமும் இருந்த வழியாகவே அவள் புறப்பட்டாள்.
அவள் தன் கனவில் கண்ட கண்ணன் உருவம் இப்பொழுது எங்கே பார்த்தாலும் அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவள் மனத்தில் ஏதோ பெரிய தளையிலிருந்து தான் விடுதலை பெற்றது போல் மகிழ்ச்சி பொங்கியது.
நன்றி
மஞ்சரி இதழ்(1954)