மீள்பதிப்புக் குறிப்பு:சுதந்திர இந்தியாவின் தொடக்கக் காலகட்டத்தில் நாடு எதிர்கொண்ட மிக முக்கியப் பிரச்சினையான 'மொழிப் பிரச்சினை' குறித்து, பாரதப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் ஆற்றிய மிகச் சிறந்த மொழி ஆராய்ச்சி உரையின் அரிய வரலாற்றுப் பதிவு இது. 1949 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 தேதியிட்ட 'சிவாஜி' இதழில் வெளியான இக்கட்டுரை, சமஸ்கிருத மொழியை இந்தியாவின் மாபெரும் இலக்கியப் பொக்கிஷமாக நேரு அவர்கள் போற்றும் அதே வேளையில், அது தற்காலத்தில் ஒரு உயிருள்ள மக்கள் மொழியாக (Living Language) மாற முடியாது என்ற யதார்த்தத்தையும் அழுத்தமாக விவரிக்கிறது. அத்துடன், சட்டம் இயற்றுவதாலோ அல்லது வடமொழிச் சொற்களை வலுக்கட்டாயமாகப் புகுத்துவதாலோ ஒரு பாஷை வளர்ந்துவிடாது என்றும், அகில இந்திய பாஷை என்பது பாமர மக்களின் பயன்பாட்டுக்கேற்ப எளிமையாகவும் காலத்திற்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடியதாகவும் அமைய வேண்டும் என்றும் அவர் வழங்கிய ஆலோசனைகள் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. கால ஓட்டத்தில் பழைய இதழ்களின் பக்கங்களுக்குள் சிதைந்து போகக்கூடிய இத்தகைய அரிய வரலாற்று மற்றும் மொழியியல் ஆவணங்களை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் நோக்கோடும், கல்விப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.
இந்தியாவின் மொழிப் பிரச்னை — மொழிப்பண்பும் மக்கட்பண்பும்
பிரதமர் நேருவின் மொழி ஆராய்ச்சி
"இந்தியாவில், சிறப்பு வாய்ந்த நமது மாகாண பாஷைகளின் வளர்ச்சியில் நாம் அக்கறை காட்டுவது மிகவும் சரியான காரியமாகும். ஆனால் அகில இந்திய பாஷையொன்றும் நமக்கு இருக்கவேண்டும். ஆங்கில பாஷைக்கு சர்வலோக அந்தஸ்து ஏற்பட்டிருப்பதனாலும், தற்போது இந்தியாவில் பெருவாரியான மக்களுக்கு அது தெரிந்திருப்பதனாலும், நம்முடைய வருங்கால நடவடிக்கைகளில் இந்த பாஷை ஒரு முக்கியமான ஸ்தானம் வகிக்கப்போகிறதென்றே நான் நம்புகிறேன்.
ஆயினும், ஆங்கிலமோ வேறேதேனும் அன்னிய பாஷையோ அகில இந்திய பாஷையாக இருக்கமுடியாது. அகில இந்திய பாஷையாக இருக்கக்கூடியது ஒரே பாஷைதான். அது ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி, அல்லது வேறேதாவது பெயரில் அது வழங்கினால் அந்தப்பாஷை. அதி முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையைப் பரிசீலனை செய்கையில் இந்த அடிப்படையான உண்மைகளை நாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் காரணங்களைக்கொண்டோ, தற்சமயம் மனதில் ஏற்படும் விருப்பு வெறுப்புகளைக் கொண்டோ, தீர யோசிக்காமல் இது விஷயத்தில் அவசரப்பட்டுச் செய்யும் எந்த முடிவும் பாதகம் விளைவிக்கக்கூடுமென்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். ஆகவே, எந்தவிதமான கட்டுப்பாட்டிலும் சிக்கிக்கொள்ளாமல் காரியங்களை ஆற அமரச்செய்துகொண்டு போவது மிகவும் நல்லது. பாஷை என்பது ஒரு நுட்பமான கருவி. அதன் நயங்களைச் சிறந்த அறிவாளிகள் வகுத்திருக்கிறார்கள். சாமான்ய மக்களின் உபயோகத்திலே அது உரம் பெறுகிறது. அது ஒரு புஷ்பம்போல் வளருகிறது. வெளிப் பலவந்தம் அளவுக்கு மிஞ்சிப்போனால் அது வளர்ச்சி குன்றிப்போகிறது. அல்லது தவறாக முறுக்கிக்கொண்டு விடுகிறது.
விவாத சாரம்
"இந்த பாஷைப் பிரச்னை இப்பொழுது இந்தியாவில் கவனிக்கப்பட்டுவரும் முறையையும் விவாதிக்கப்பட்டுவரும் முறையையும் பார்க்க நான் பெரிதும் வருத்தமடைகிறேன். இந்த விவாதங்களில் பாண்டித்தியத்தை அதிகமாகக் காண முடியவில்லை, கலாசார ஞானமோ பின்னங் குறைவாய்த்தானிருக்கிறது, எதிர்காலத்தைப்பற்றிய கவனமோ சிந்தனையோ இல்லவேயில்லை. பத்திரிகைகளில் எழுதப்படுவதையே கொஞ்சம் விஸ்தரித்து விட்டால் அதுவே பாஷையாகிவிடும் என்று கருதப்படுகிறது.
தவறான தேசீய உணர்ச்சி கொண்டவர்களோ, பாஷையை சாத்தியமான அளவுக்குக் கட்டுப்படுத்திக் குறுகியதாக ஆக்கிவிட வேண்டுமென்று கோருகின்றனர். அதை விஸ்தரிப்பதற்குச் செய்யப்படும் எந்த முயற்சியையும் இத்தகைய தேசியத்துக்கு இழைக்கப்படும் பாதகமென்று கூறிவிடுகின்றனர். மித மிஞ்சிய சொல்லலங்காரமும், சிக்கலான நீண்ட வார்த்தைப் பிரயோகமுமே ஒரு பாஷையை அழகுபடுத்துவதாகப் பலர் கருதிவருகின்றனர்.
இத்தகைய பாஷையில் விறுவிறுப்பையோ கண்ணியத்தையோ காணமுடிவதில்லை. கருத்தாழம் கேவலம் மேல் போக்கான பாஷையென்ற அபிப்பிராயமே ஏற்படுகிறது. எதுகை மோனையும் சீர்தளையும் மட்டும் கவிதையாக ஆகிவிடாது. அதேபோல தெளிவற்ற கடினவார்த்தைகளைச் சேர்த்தெழுதிவிட்டால் அதுபாஷையாகிவிடாது. சகஜமாய் வழங்கும் ஆங்கில வார்த்தைகளை மொழிபெயர்க்கச் சமீபகாலத்தில் நடந்துவரும் முயற்சிகள் பெருங்கேலிக் கூத்தாகவேயிருக்கின்றன. இந்த மனப்பான்மையே நீடிக்குமானால், கருத்தை வெளியிடுவதற்குள்ள மிக நேர்த்தியானதொரு சாதனத்தைக் கொலை செய்வதற்குே ஒப்பாகும்.
பழைய பொக்கிஷம்
"இந்தியாவின் மிகப்பெரிய பொக்கிஷம் எது, மூதாதையர் இந்தியாவுக்கு விட்டுச் சென்றிருக்கும் மாபெரும் செல்வம் எது, என்று என்னையாராவது கேட்டால், சமஸ்கிருத பாஷையும், இலக்கியமும் அவற்றில் பொதிந்துகிடக்கும் விஷயங்களுந்தான் என்று நான் தயக்கமின்றிக் கூறுவேன். இது நமக்குக் கிடைத்திருக்கும் மகோன்னதமான பிதுரார்ஜிதமாகும். இது நம்மிடையே இருந்துவரும் வரையில், இது நம்மக்களின் வாழ்க்கைக்கு வழி துலக்கும்வரையில் இந்தியாவின் மூலாதாரமான மேதையும் இருந்துவரும்.
சம்ஸ்கிருதம் மிகப் பழமையானதொரு பொக்கிஷமாகப் பண்டைக்கலாசாரத்தின் உருவமாக இன்னும் உயிரோடிருந்துவருகிறது. இவ்வளவு பழமையானதொரு பாஷை இந்த அளவுக்கு ஜீவனோடு இருந்துவருவது மிகவும் ஆச்சரியந்தான். சம்ஸ்கிருத பாஷைப் பயிற்சியை வளர்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ஆராய்ச்சிகள் நடத்தி, அனேகமாய் மறந்துபோய்க்கிடக்கும் இந்த பாஷையில் புதைந்துகிடக்கும் செல்வங்களையெல்லாம் வெளிப்படுத்தும் வேலையில் நம்முடைய பண்டிதர்களை ஈடுபடுத்த நான் விரும்புகிறேன்.
லட்சியம் என்ன?
"பாஷை விஷயத்தில் தீவிர தேசிய வாதம் பேசும் நாம் பேச்சளவில் இதற்கு மரியாதை செலுத்துவதுடன் நின்றுவிடுவதையும், அரசியல் நோக்கங்களுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வதையும் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு பாஷை இறுதியாக வளர்ச்சி பெறுவது அதன் இயற்கை வளத்தினால்தான்; சட்டங்கள் இயற்றுவதாலோ தீர்மானங்கள் நிறைவேற்றுவதாலோ எந்த பாஷையும் வளர்ச்சி பெற்றுவிடாது. ஆகையால், ஒரு பாஷைக்குச் செய்யப்படும் உண்மையான சேவை அந்த பாஷையின் மதிப்பையும், உபயோகத்தையும், இயற்கை வளத்தையும் வளர்ப்பதேயாகும்.
சம்ஸ்கிருதம் எவ்வளவு சிறந்த பாஷையாக இருப்பினும் சரி, செய்ய வேண்டிய கடமைப்படி அதைப் பரப்ப நாம் எவ்வளவுதான் விரும்பினாலும் சரி, அந்த பாஷை ஒரு உயிருள்ள பாஷையாக ஆகவே முடியாது. ஆனால், அந்த பாஷை இதுவரை இருந்துவந்ததுபோல், ஒளி பலவற்றிற்கு அடிப்படையாகவும் உட்பொருளாகவும் இருந்துவரவேண்டும். இதைத் தவிர்க்கமுடியாது. ஆனால் இதை வலுக்கட்டாயமாகப் புகுத்த முயற்சிப்பது அத்தியாவசியமுமல்ல; விரும்பத்தக்கதுமல்ல. அவ்வித முயற்சியால் விபரீதமான பலன்களே ஏற்படக்கூடும்.
நாம் வளர்க்கவேண்டிய அகில இந்திய பாஷை, காலத்திற்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடியதாயும், புதிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாயும் இருக்கவேண்டுமென்பது முக்கிய அம்சத்தில் மக்களின் பாஷையாக இருக்கவேண்டுமேயொழிய, பாண்டித்தியம்பெற்ற ஒரு சிறு கோஷ்டியின் பாஷையாக இருக்கக்கூடாது. அந்த பாஷை கண்ணியமுடையதாகவும் சக்தி நிறைந்ததாகவும் இருக்கவேண்டும். அத்துடன், இயற்கைக்கு விரோதமான போக்கையும், மேலெழுந்தவாரியான கருத்துக்களையும், அலங்காரத்தையும் அறவே ஒழிக்கும் வகையில் கடுமையான முயற்சியும் இருக்கவேண்டும்.
அதன் அடிப்படையும், அதன் பொருள் செறிவில் பெரும்பாகமும் சம்ஸ்கிருதத்தை ஆதாரமாகக் கொண்டவையாகத்தான் இருக்கவேண்டியிருக்கும். ஆனால், மற்ற மூலங்களிலிருந்து, குறிப்பாகப் பாரசீக பாஷையிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும் மற்ற அன்னிய பாஷைகளிலிருந்தும் கூட எடுத்த பல வார்த்தைகளும், சொற்றொடர்களும் கருத்துக்களும் இதில் அடங்கியிருக்கும்.
துறைச் சொற்கள் விஷயத்தில், சாதாரணமாக வழக்கிலிருந்துவரும் வார்த்தைகள் அனைத்தையுமே முதலில் நாம் எடுத்துக் கொண்டுவிடவேண்டும். புதிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கும்போதுங் கூட, சாதாரணமாக எல்லாராலும் உபயோகிக்கப்படுவதும் புரிந்துகொள்ளக்கூடியதுமான வார்த்தைகளையே கூடியவரையில் நாம் அனுசரிக்கவேண்டும். துறைச் சொற்கள் விஷயத்தில், சாத்தியமான வரையில், வளர்ந்துகொண்டேவரும் உலக பாஷையைவிட்டு நாம் ஒதுங்கிப்போய்விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
பாஷையைப்பற்றி நாம் இவ்வளவு பிரமாதமாக சர்ச்சை செய்கிறோம், ஆனால், சரியான அகராதி ஒன்றுகூட நமக்குக் கிடையாது. உலகத்திலுள்ள பெரிய பாஷை எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் எத்தனை அகராதிகளும் கலைக்களஞ்சியங்களும் அவைபோன்ற நூல்களும் இருக்கின்றன. நியாய ஸ்தலத்தில் பேசப்படுவதையும் பள்ளிக்கூடப் பாட புத்தகங்களில் கையாளப்படுவதையும் வைத்தே நாம் பாஷையை மதிப்பிடுகிறோம். நம்முடைய அகராதிகளும் பள்ளிச் சிறுவர்களுக்கெனத் தயாரிக்கப்பட்டவைதான். ஆதலால் நாம் செய்யவேண்டிய முதல் காரியம், சம்ஸ்கிருத பாஷைக்கும் நம்முடைய தற்கால பாஷைகளுக்கும், திருத்தமான முறையில் விரிவான அகராதிகளைத் தயாரிப்பதேயாகும்.
லிபி விஷயம்
எழுத்தை எடுத்துக்கொண்டால் நாகரி எழுத்தே முதன்மை பெறும் என்பது தெளிவு. ஆனால், கலாசாரத்தையொட்டியும்சரி, அரசியலையொட்டியும்சரி, ஒன்றையே வற்புத்துவது தவறென்று நான் கருதுகிறேன். ஆதலால், கோரப்படும் இடங்களில் உருது எழுத்துக்களையும் அங்கீகரித்துக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
எல்லாரும் இந்த இரண்டுவகை எழுத்துக்களையுமே கற்றுக்கொள்ளவேண்டுமென்று நாம் சொல்ல முடியாது, அது தாங்கமுடியாத பளுவாகிவிடும். ஆனால், தஸ்தாவேஜுகளையும் பிறவகைப்பத்திரங்களையும் தயாரிப்பதற்கும், போதிய எண்ணிக்கையுள்ளவர்கள் கோருமிடங்களில் பள்ளிக்கூடங்களில் போதனைக்கும் உருது எழுத்துக்களை அங்கீகரிக்கவேண்டும். ரோமன் எழுத்துக்களை நாம் அதிகமாகக் கையாளமுடியுமென்று எனக்குத் தோன்றவில்லை."
நன்றி
சிவாஜி இதழ்(1949 பிப்ரவரி 20)
