மீள்பதிப்புக் குறிப்பு:
    இந்திய வரலாற்றுப் பரப்பில் மராட்டியப் பேரரசு உருவாவதற்குக் காரணமாய் அமைந்த மிக முக்கியத் திருப்புமுனையான 'பிரதாப்கட் போர்' நிகழ்வை சுவாரசியமாக விவரிக்கும் ஒரு அரிய வரலாற்று ஆவணப் பதிவு இது. 1489 முதல் 1686 வரை ஆண்ட பீஜப்பூர் ஆதில் ஷாஹி சுல்தானகத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து, மராட்டிய மண்ணில் 'சுயாட்சி' அமைக்க முயன்ற மாமன்னர் வீர சிவாஜி அவர்களைத் தந்திரமாகச் சிறைபிடிக்க வந்த ஆப்கன் படைத்தளபதி அப்ஸல்கானின் ரகசியச் சூழ்ச்சிகளைச் சிவாஜி எவ்வாறு முறியடித்தார் என்பதை இக்கட்டுரை விரிவாக எடுத்துரைக்கிறது. அப்ஸல்கானின் இரும்புப் பிடிக்குள்ளான போதும், சற்றும் தளராமல் தனது கையில் மறைத்து வைத்திருந்த 'புலிநக' ஆயுதத்தால் அவனை வீழ்த்தி மராட்டியப் படைகளுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த சிவாஜியின் போர்த்திறன் இன்றும் வியப்புக்குரிய ஒன்றாகும். கால ஓட்டத்தில் பழைய வரலாற்றுப் புத்தகங்களின் பக்கங்களுக்குள் முடங்கிக் கிடக்கக்கூடிய இத்தகைய வீர வரலாற்றுக் கதைகளை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் நோக்கோடும், கல்வி மற்றும் ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.                    

    வீர சிவாஜியின் புலிநகப் போர் 

பீஜப்பூர் அரசாங்கம்

                        வரலாற்றில் பீஜப்பூர் சுல்தானகம் 1489 முதல் 1686 வரை ஆதில் ஷாஹி வம்சத்தால் ஆளப்பட்டது. முகலாயர் வீழ்ச்சியின் இறுதி காலம். அதனால் பீஜப்பூர் பகுதியானது சுல்தான் கீழ் இருந்து தானாகவே தன்னாட்சி பெற்றது. இந்த ப் பீஜப்பூர் பகுதிக்குக் கீழ் இருந்த சிற்றரசர்களில் ஒருவராகத் தான் மராட்டிய மாமன்னர் வீர சிவாஜி ஆட்சி செய்து வந்தார். இருப்பினும், இவர்களிடமிருந்து தனியாக சுயாட்சி செய்ய விரும்பியே சிற்றரசர்கள் கோரிக்கை வைத்தனர். பீஜப்பூர் அரசாங்கத்திற்கு இது தலைவலியாக இருந்தது. 

பீஜபுரி அரசாங்கத்தின் நிலைமை

        அவுரங்கசீப்பிடமிருந்து சிறிதும் எதிர்பாராத விதமாக விமோசனம் கிடைத்தது குறித்து பீஜபுரி அரசாங்கத்தினர் அமோகமாகச் சந்தோஷமடைந்தனர். மொகலாயர் பிற்காலத்தில் ஏதோ ஒருநாள் திரும்பவும் படையெடுத்து வரத்தான் போகிறார்கள் என்ற பயம் இருந்த போதிலும், அப்போதைக்கு மூச்சுவிட அவகாசம் கிடைத்தது அவர்களுக்கு இன்பகரமாகத் தான்ிருந்திருக்க வேண்டும்.
    இப்போது பீஜபுரி பட்டத்தில் பத்தொன்பது வயதுப் பையன் சுல்தானாக ஆட்சி நடத்திவந்தான். அரசாங்க விஷயங்கள் எல்லாவற்றையும் அவன் தாயே கவனித்து வந்தாள். அவுரங்கசீப் விஷயம் இவ்வாறு ஒத்திப் போன பிறகு, நாட்டின் மத்திய அரசவைக்கு அடங்காது புரட்சி செய்துவந்த சிற்றரசர்களை அடக்குவதே அடுத்த வேலையாக இருந்தது. இத்தகைய சிற்றரசர் கோஷ்டியில் சிவாஜியின் பெயர்தான் முன்னணியில் இருந்தது.
    1659-ஆம் ஆண்டில் அம்மாதரசி தன் அரசவையில் முக்கிய பிரதானிகளை வரவழைத்து ஒரு கூட்டம் கூட்டினாள். அவளது மைத்துனன் அப்ஸல்கான் என்பவன் முதலில் தனது உதவியைக் கொடுக்க முன்வந்தான். அப்ஸல் ஒரு ஆப்கன்; அவன் ஒரு மகத்தான வாள்வீரனென்றும், திறமை மிகுந்த படைத்தலைவன் என்றும் பிரசித்திபெற்றவன்.

அப்ஸல்கானின் சபதம்

    அப்ஸல்கான் பகிரங்கமாக தர்பாரின் முன்னர் தன் திறமைகளைப் பற்றிப் பேசி வந்தான். தான் குதிரையிலிருந்து இறங்காமலே அந்தச் "சிறு ஹிந்துத் திருடனை"ச் சிறைப்பிடித்து விடுவதாகக் கூறினான். ஒரு கூண்டில் அவனை எலியைப்போல அடைத்து, பீஜபுரிக்கு இட்டு வந்து மக்களெல்லோரும் அவனைக் கண்டு நகைக்குமாறு செய்வதாகப் பேசினான்.
    ஆனால், உண்மையில் சிவாஜியிடம் அவனுக்கு ஏராளமான பயம் இருந்தது. மலைச் சிகரத்திலிருந்து கொண்டு மாயவேலைகள் செய்த அந்த சிவாஜி தன்னை எவ்வாறு மடக்கி விடுவானோ என்ற அச்சம் அவனுக்கு உண்டு. சிநேகிதனைப்போல் நடித்துத்தான் சிவாஜியைக் பிடிக்க முடியும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருந்தார்கள். அப்ஸல்கான் பெரும் கொடுமைகளை இழைத்து, கோயில்களை இடித்துத் தள்ளி, சிவாஜியைப் பிடித்து அடைக்க ஒரு கூண்டுடன் படையெடுத்துக் கிளம்பினான்.

சிவாஜியின் கனவும் துணிச்சலும்

    சிவாஜியின் கோட்டையில் அப்ஸல் கானின் வருகை குறித்து ஏராளமான பீதி பரவியிருந்தது. மராத்திய பிரதானிகள் அப்ஸல்கானுடன் சிவாஜி சமாதானம் செய்துகொள்வதே மேலெனக் கருதினார்கள். இரவு முழுவதும் சபை நடந்தது, ஆனால் ஏதும் முடிவு ஏற்படவில்லை.
    பின்னிரவில் சில மணிநேரம் தூங்குவதற்கென்று சென்ற சிவாஜி ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில் "போர் தொடுப்பதே மேல்" என்ற விஷயம் அவனுக்கு வற்புறுத்தப்பட்டது. திரும்பவும் சிவாஜி சபைக்கு வந்து சண்டை போட்டே ஆகண்டுமென வற்புறுத்தினான்.

பிராமணத் தூதனின் ரகசியம்

    இந்த நிலையில் அப்ஸல்கானிடமிருந்து எதிர்பாராத விதமாக ஒரு தூதன் சிவாஜியிடம் வந்தான். இந்தத் தூதன் ஒரு பிராமணன். அன்று இரவு சிவாஜி அந்தப் பிராமணன் தங்கியிருந்த அறையில் புகுந்து, அவனது கையில் தன் உயிர் இருப்பதாக மன்றாடி, அப்ஸல்கானின் ரகசியத் திட்டம் உண்டா என்று வினவினான். ஏராளமான பணம் தருவதாக வாக்களித்து, அப்ஸல்கான் கோயில்களை அழித்த கதையையும் ஞாபகப்படுத்தினான். அந்தப் பிராமணன், சிவாஜியைத் தந்திரமாகச் சிறைபிடிக்க இருந்த திட்டத்தைக் கூறிவிட்டான்.
    உடனே, சிவாஜி ஒரு தந்திரம் செய்தான். தான் ரொம்பவும் பீதியுற்றிருப்பதாகவும், வீரன் அப்ஸல்கான் தன்னைச் சந்திக்க பிரதாப்கட் கோட்டைக்குக் கீழ்புறத்திலிருக்கும் இடத்திற்கு வரவேண்டுமென்றும் தூதன் மூலம் கூறி அனுப்பினான். அப்ஸல் இந்த நிலையைக் கண்டு சிரித்துவிட்டுச் சரியென்று ஒப்புக்கொண்டான். சிவாஜியின் வீரர்கள் ஏராளமாகச் சூழ்புறத்திருந்த புதர்களில் மறைந்திருந்தார்கள்.

நேருக்கு நேர் மோதல் 

    அப்ஸல்கான் மறுநாள் காலையில் கம்பீரமாக மூன்று சிறந்த வீரர்களுடன் சந்திப்பிடத்துக்குப் பிரயாணமானான். சிவாஜியும், அப்ஸலும் எதிரெதிரே நின்றார்கள். சிவாஜி அப்ஸல்கானுக்கு மகத்தான உபசாரங்கள் செய்தான். கடைசியில் இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொள்ள வேண்டிய கட்டம்.
    அப்ஸல்கானது அரவணைப்புக்குள் சிவாஜி வந்தவுடனே, அப்ஸலின் இரும்புப் பிடி மெதுவாகப் பின்பக்கமாகச் சுழன்று வந்து சிவாஜியின் கழுத்தை நெருக்க ஆரம்பித்தது. சிவாஜி நிலையை உணர்ந்தான். தனது வலது கைக்குள் அவன் தயாராகப் புலி நகத்தைச் சேர்த்து வைத்திருந்தான். வலது கரத்தை மாத்திரம் கஷ்டப்பட்டு விடுவித்துக் கொண்டு கையை உயர்த்தி, ஓங்கி ஒரு குத்துக் குத்தினான். அப்ஸல்கான் 'ஒ' வென்று அலறிக்கொண்டு கீழே சாய்ந்தான்.
    உடனே, சிவாஜியின் படைவீரர் பாய்ந்து ஓடிவந்தனர். ஒருவன் அப்ஸல்கானின் தலையைச் சீவி, வாள் முனையில் எடுத்து நிறுத்தினான். சிவாஜி இந்தக் கட்டத்தில் தன் சங்கை எடுத்து ஊதினான். உடனே புதர்களில் மறைந்திருந்த சிவாஜியின் படைவீரர்கள் அத்தனை பேரும் பாய்ந்து, அப்ஸல்கானது படைத் தளத்தில் இருந்தவர்களின் மேல் விழுந்து நிர்மூலமாக்கினர். அப்ஸல்கானது வீழ்ச்சியும், சேனையின் படுதோல்வியும் பீஜபுரியை எட்டியபோது எல்லோரும் வியப்புக்குள்ளாயினர்.
            (இன்றுவரை, மராட்டிய மக்களால் பெரிதும் விதந்தோதப்படும் வீர வரலாற்றுக் கதைகளில் இந்த நிகழ்வும் இடம் பெறுகின்றது.)