மீள்பதிப்புக் குறிப்பு:
    20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் (1939-இல்) தமிழ்நாட்டுச் சமுதாயத்தில் நிலவிய வாலிபர்களின் மனோபாவங்களையும், ஒழுக்க விழுமியங்கள் குறித்த விவாதங்களையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்யும் ஒரு உன்னதமான சமூக விழிப்புணர்வு ஆவணக் கட்டுரை இது. அன்றைய புகழ்பெற்ற 'மாதர் மறுமணம்' இதழில் பி. தனுஷ்கோடி அவர்களால் எழுதப்பட்ட இப்பதிவு, தேசியக் கவி பாரதியார் போற்றிய உண்மையான காதலின் தத்துவத்தை விவரிப்பதோடு, சமகால இளைஞர்கள் 'கண்டதும் காதல்' என்ற பெயரில் காமக் குழப்பங்களுக்கு ஆளாவதையும், சினிமா மற்றும் ஆடம்பர மோகத்தால் குடும்ப உறவுகளையும் எளிய பெண்களின் வாழ்வையும் சிதைப்பதையும் எதார்த்தமான சான்றுகளுடன் நயமாகச் சாடுகிறது. கால ஓட்டத்தில் பழைய இதழ்களின் பக்கங்களுக்குள் மறைந்து போகக்கூடிய இத்தகைய அரிய சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்து, தூய வாழ்வியல் நெறிகளை உணரும் நோக்கோடும், கல்வி மற்றும் வரலாற்று ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.

 வாலிபர்களுக்கு

காதலா? காமமா? 

(பி. தனுஷ்கோடி)
(1939-ஆம் ஆண்டு  ‘மாதர் மறுமணம்’ என்ற இதழில் வெளிவந்துள்ள இக்கட்டுரையின் வரிகளுள் இடம்பெற்றுள்ள வாலிபர்கள் குணங்களில் இன்றுவரையும் எந்த மாற்றமும் இல்லை என்பதை இக்கட்டுரையை வாசிக்கும் பொழுது கட்டாயம் உணரலாம்)
காதல்! காதல்! காதல்! காதல் போயின், காதல் போயின், சாதல்! சாதல்! சாதல்!—என்று அன்று தேசீயக் கவி பாரதியார் கூறினார்.
அதில் எவ்வளவு உயர்வு இருக்கின்றது? தத்துவம் நீதி காணப்படுகின்றது? ஆனால் நம் நாகரிக வாலிபர்கள் இதனின் கருத்தை--பெருமையை சரிவர அறிந்து நடப்பதில்லை. மாறாமல் தப்பர்த்தம் செய்து கொள்கின்றனர். பிறவியின் பயன் ஒருவரிடம் காதல் கொண்டுதான் தீரவேண்டும் என்பது அவர்களின் கொள்கை. தன்னை ஒருவள் விரும்பாவிடினும் சரி, வழியில் போகும் ஒரு அழகியைக் காதலித்து, அதற்கான உபாயங்கள் எல்லாம் செய்யவேண்டும். அவன் காதலித்த ஸ்திரீயை ஏற்கனவே வேறொருவன் காதலித்திருந்தால், அதற்கான போராட்டம், கொலையில் கூட முடிகிறது. இதுதான் “காதலின்றேல் சாதல்” என்பது அவர்கள் திருவாக்கு. ஆனால் இதை ஒருநாளும் “காதல்” என்று ஒப்புக்கொள்ள முடியாது. அபிமான ஸ்திரீ அல்லது துராக்ரகம் என்றுதான் கூறவேண்டும். சாதாரண மாக எனக்கு ஏற்பட்ட இரண்டொரு அனுபவங்களைக் கூறுகிறேன்.

கண்டதும் காதல்

‘ஜாலி’யாக நாலு நண்பர்களுடன், சினிமா பார்க்கவோ, கண் காட்சிசாலைக்காவது, கோயில்களுக்காவது, கடற்கரைப் பக்கமாவது செல்லுகிறேன்.
அங்கு பட்டு சேலைகள் உடுத்தி அழகிய ஆபரணங்களை அணிந்து, சுத்தமாகவும், நாசூக்காகவும், புன்முறுவலுடனும், ஓர் யுவதி அவன் கண்களில் படுகிறாள். அவ்வளவு தான் மின்சார சக்திபோல் அவன் உடலில் காதல் சக்தி பாய்கிறது.
மறுநாளே அவன், "என்ன பிரதர்! நேற்று அவளைப் பார்த்தது முதல், எனக்கு அவள் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. இனி அவளை விட்டு ஒரு க்ஷணமும் பிரிந்து இருக்க முடியாது” என்று கூறுகிறான்.
இது என்ன விளையாட்டு? என்றால், இதுதான் "கண்டதும் காதல்” லாம்! ஐயோ பாவம்! அந்த யுவதியை இதற்கு முன் பார்த்தே இருக்கமாட்டான். அவள் யார் என்பதை அறிந்து கொள்ளவும் முயற்சிக்கமாட்டான். ஆனால் அதற்குள் உயிர் போகும் நிலையில் காதல் ஏற்பட்டுவிடுகிறது. என்ன விசித்திரம்!
விவாகமாகி புது குடித்தனம் செய்யும் குடும்ப ஸ்திரீயாயிருக்கலாம். (நேயர்களே! இதனால் எவ்வளவு ஆபத்து என்பதை யோசியுங்கள்.) ஒருவேளை விவாகமாகாத கன்னியாயுமிருப்பாள். அன்றி விவாகமாகி விதந்துவாயும் இருப்பாள்.
அத்தகைய அபலைகளின் மீது எவ்வளவு அனர்த்தங்கள் நேரிடுகின்றன? “ஏண்டா! அது போனால் போகிறது. என்ன ஜாதி யென்பதை கவனித்தாயா?” என்று கேட்டால், கன்னத்தில் அடிப்பதுபோல் பதில் சொல்லுகிறான்.
“அதைப்பற்றி நவர்மெண்ட்! கலியாணம் செய்துகொள்ளாவிட்டாலும், அவளுடன் எப்படியாவது இன்பம் அனுபவித்துத்தான் ஆகணும்! இல்லாவிட்டால் என் உயிரைப்பற்றி அக்கரையிரில்லை......”
இதற்கு என்ன சொல்வது? இதுதான் பாரதியார் போதித்த காதலும், சாதலும் போலும்!

என் மனைவி கர்நாடகம்

அது போகட்டும் ஒருவன் சொல்கிறான். “என் மனைவி சுத்த கர்நாடகம்! சமையல் சரியாக சமைக்கத் தெரியாது. நாலு பேரைப் போல் நன்றாக இருக்கத்தெரியாது. ஒரு நல்ல புடவை எடுத்துக்கொடுத்தால் உடுத்திக்கொள்ள வல்லை, முகத்தில் ஒரு புன் சிரிப்பு இல்லை. எப்பொழுது பார்த்தாலும், அழுக்கடைந்த முகம், கையெல்லாம் சாணி, காலெல்லாம் தூசி— சேறு, ஐயையோ மூக்கிலிருந்து சளி, அந்த சளி வாயில் விழுவதுகூடத் தெரியாது................கண்றாவி! கண்றாவி! இந்தப் பீடையைக் கட்டிக்கொண்டு எப்படி ஐயா அழுவது?”
அவனை ஒரு அப்பாவி அசடு என்றுதான் சொல்லவேண்டும். தன் மனைவியின் முகத்தை- அழுகை, மூக்குச் சளியுடனும், தூங்கி எழுந்த முகத்துடனும், கையில் சாணி வட்டி விளக்குமாறுடன் (துடைப்பம்) இருக்கும் பொழுதுதானா பார்த்து ரசிக்கவேண்டும்?
குளித்துவிட்டு, தலை சீவிக்கொண்டு, அழகிய ஆடை ஆபரணங்களுடன் ஒழுங்காக இருக்கும்போது பார்த்தால், அவளே தேவ கன்னிகையைப்போலவும், ரதியைப் போலவும் காக்ஷியளிப்பாளே.
அதை விட்டுவிட்டு பிறர் மனைவியின் பேரிலும், இளம் விதவைகள் பேரிலும், தாஸிகள் மீதும் ஆசையை வைத்துக்கொண்டு மனையாளைப் பார்த்தால் எப்படியிருக்கும்? கோரமாக—அசிங்கமாகத்தான் புலப்படும். மற்றபடி நாலுபேரைப்போல் நன்றாக இருக்கத் தெரியாது என்பதெல்லாம் வெறும் பித்தலாட்டம்; பொய். உண்மையில் சொல்லுகிறேன். எந்த ஒரு பெண்ணும் தன் வாழ்க்கையில் அசூசையுடனோ, குரூரமுடனோ இருக்க விரும்பமாட்டாள். மாறாக, இயற்கை அழகுடன் பன் மடங்கு செயற்கையுடன் சேர்த்து வசீகர அழகியாக விளங்குவாள். அவ்வித அழகின் சக்தியால் தன் புருஷனை மகிழ்விக்க ஆசைப்படுவாள்.
இதைத் தவிர, மனைவியை வேண்டுமென்றே குறைகூறிக்கொண்டு அடுத்த வீட்டு, எதிர்வீட்டுப் பெண்களிடம் தன் காமத்தை செலுத்துகின்றனர் என்பதை மறுக்கமுடியுமா?

காதலே இல்லை ஆனால்...

மற்றொருவன் கூற்றைப் பாருங்கள்: “என் வாழ்க்கையில் காதல் என்ற விதையே ஊன்றவில்லை. அப்படி என்னை காதலிப்பவளும் ஒருவரும் இல்லை. ஆனால், சில பெண்களைப் பார்க்கும்பொழுது, எனக்கு என்னை யறியாமலே ஒருவித காம உணர்ச்சி உண்டாகிறது. ஆகவே அப் பெண்களை அடைய விரும்புவதில் தப்பு ஒன்றுமில்லையே?”
நல்ல கேள்விதான். சாதாரணமாக வசீகரம் பொருந்திய பெண்களைப் பார்க்கையில், கலியாணமாகாத காளையர்களுக்கு இயற்கை உணர்ச்சி பீறிட்டு எழும்புவது சகஜந்தான். ஆனால் அதை வீண் விரயம் செய்வது கூடாது. வாழ்க்கைப் போராட்டத்தில் காதல் இன்றிருந்து நாளை செல்வதல்ல. காதலை வெறும் காமமாக்கிவிடக் கூடாது. அவ்விதம் செய்வது உடலுக்கும் கெடுதல்; பிறரைக் கெடுத்த தோஷமும் ஏற்படுகிறது. அவ்விதம் இயற்கையாக உணர்ச்சி ஏற்படுவதை 'தன்னடக்கம்' என்னும் சக்தியால் தடைசெய்ய வேண்டும். நேரிய முறையில் அவளை விவாகம் செய்து கொள்ள முயற்சிக்கலாம். அவ்விதம் கிட்டவில்லையாயின் அதை மறந்துவிடுவதே உத்தமம். அவசரப்பட்டு தன்னடக்கம் எனும் சக்தியிழுந்துவிட்டால், அவன் மனிதனே அல்ல.

நான் என்ன செய்யட்டும்?

“நான்பாட்டுக்கு ஒருநாள் சாலையின் வழியே சென்று கொண்டிருந்தேன். அப்போது ஓர் இளம் யுவதி-மிகவும் ஏழ்மை குடும்பப் பெண் தான்- என் எதிரே வந்தாள். இதற்கு முன் நான் அவளைப் பல தடவைகளில் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்பொழுதுமட்டும், புதிய தேஜசுடனும் கண்டேன். அதே நிமிஷம் என் உடலில் ஓர் உணர்ச்சி பாய்ந்தது. அவளுக்கும் அப்படித்தான் இருந்ததோ என்னவோ, உடனே புன்னகை பூத்தவள் தன் ஆடைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டாள். அவளின் இச் செய்கை என் காமத்தை அதிகரிக்கச் செய்தது. அது மட்டும் ஒரு தனி விடுதியாக இருந்திருப்பின் என் ஆவேசம் கட்டுக்கொள்ளாதுபோயிருக்கும்”
“பின் அவளிடம், என் தன்னடக்கம் எப்படி வெற்றி பெறும்? அவள் மாய்கையில் வீழ்ந்தேன். இருவரின் கற்புக்கும் பங்கம் ஏற்பட்டது. இதற்கு நான் என்ன செய்யட்டும்? நீங்கள்தான் சொல்லுங்களேன்”— என்று தன்னடக்க வாதி ஒருவர் கூறினார்.
இளங் குமரிகளின் கட்டு குலையா உறுப்புகளைப் பார்த்த மாத்திரத்தில், வாலிப காளைகள் அவற்றை பெற இச்சிப்பது இயற்கையே. அவ்வாறு நடப்பதும் தவறு எனச் சொல்ல முடியாது. ஆனால், அவள் தன்னால் விவாகம் செய்யப்படக்கூடியவளாக இருக்கவேண்டும். அனாவசியமாக தன்னடக்கம் என்னும் சக்தியை விரயம் செய்வது தகாது. அப்படிச் செய்வது, காமவெறியன்-பித்துக்கொள்ளி-வரமோஹினி பிடித்தவன் என்ற இழிவான பட்டத்தை சேர்த்துக்கொள்வதாகும்.
நவீன வாலிப காதலர்களின் போக்கு, எதையும், சரிவர ஆராயும் திறன் இன்றி, குருட்டு ஆடு கிணற்றில் விழுந்தால் நாமும் தான் விழவேண்டும் என்ற கணக்காகச் செல்கின்றனர்; அவன் ஏன் அப்படிச் செய்கிறான்? அந்தப் பெண்ணுடன் ஏன் அப்படி ரகஸியம் பேசுகிறான்? அவனுக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்? என்பதைப்பற்றியே மற்றவனுக்கு யோசனையுண்டாகிறது.
அடே! அவன் அப்படிச் செய்வது தவறு. அவன்தான் அப்படிச் செய்தால் நாமும் அப்படிச் செய்யவேண்டும் என்பது என்ன கட்டளை? நாம் நேரான வழியில் ஒழுங்காகப் போவோமே! என்ற கருத்துக்களே ஏற்படுவதில்லை.
வீட்டில் பெற்றோர்களும், உறவினர்களும் சேர்ந்து ஓர் அழகியை கலியாணம் செய்து வைத்திருப்பர். ஆனால் அது இந்த நவீன வாலிபனுக்கு பிடிக்கவே பிடிக்காது. சினிமாவில் காணப்படும் ஒரு நடிகையைப்பற்றி கனவு கண்டுகொண்டிருப்பான். எப்படியாவது இவ்விடத்தை விட்டகன்று ஒரு ஸ்டுடியோவில் சேர்ந்து, ஒரு பாகவதரைப்போலவோ, ஒரு வித்வானைப்போலவோ, பேரும் புகழும் அடையவேண்டும். அப்பொழுதுதான் திரைப் படத்தில் காதலித்த யுவதியை அடைவது வெகு சுலபம் என்றெல்லாம் மனக்கோட்டை கட்டுவான்.
இத்தகைய ஒருவனின் அங்க லக்ஷணத்தைக் கவனித்தாலோ, குஷ்டரோகம் பிடித்தவனைப்போன்று முகம் எல்லாம் கருத்து, பருக்கள் சூழப்பெற்று விகார முடையவனாக இருப்பான். தலையோ எண்ணையைக் கண்டு எட்டு வருஷம் இருக்கும். கண்ணின் ஒரங்களில் பீளை வழிந்துகொண்டிருக்கும்! அதை சுத்தப்படுத்தத் தெரியாது. அணிந்திருக்கும் ஆடைகளோ ஐயையோ........மிகவும் ஆபாசமானவை. அழுக்கின் துர்நாற்றம் வீசும்.
இம்மட்டோடு இப்புண்யாத்மாக்கள் சும்மா இருப்பதில்லை. அவர்களுக்கேற்றாற்போல் சில பத்திரிகைகளில் சினிமா விஷயம் பற்றி “கேள்வி பதில்”கள் வெளிவருவது மிகவும் அனுகூலமாக இருக்கின்றது.
வேண்டுமென்றே, சில குறிப்பிட்ட சினிமா நடிகைகளின் பெயரை எழுதி, அவர்களின் விலாசங்களையும் இருப்பிடத்தையும் வினவுகின்றனர். அதுமட்டுமல்ல. அவர்களின் வயது, பருவம், குணாதிசயங்கள் முதலியவற்றையும் அறிய முயற்சிக்கின்றனர். வாழ்க்கையின் போக்கு, ஜாதி, எல்லாம் இவர்கள் அறிந்துகொள்ளவேண்டுமாம்! எதற்காகவோ தெரியவில்லை. எந்த சினிமா கம்பெனி ஆரம்பிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
இவையெல்லாம் காதலின் போக்குத்தானா? இதற்கு அந்த ஆசிரியர், விவரம் தெரிவிக்க முடியாது என்று பதில் கூறிவிட்டால் சீறி விழுகின்றனர். வாய்க்கு வந்தபடி, கைக்குத் தோன்றியபடி, எழுதி ஒரு முக்காலணா கார்டை செலவழிக்கின்றனர். மீறிக் கேட்டால் உண்மைக் காதலின் தன்மையாம்! காமமே பிறப்பாகக்கொண்ட இத் துராத்மாக்கள் என்று ஒழிவாரோ, அன்றே நம் நாடு சுபீக்ஷமடையும்.
இக் காமுகர்களின் மற்றொரு அந்தப் புரத்தை கவனிப்போமானால், மயிர் கூச்செலெடுக்கும். நல்ல மாநிறம் இருக்கிறது. செலவு செய்ய போதிய பொருள் இருக்கிறது. அழகிய ஜரிகை வேஷ்டி யுடுத்தி டாம்பீகம்செய்துகொள்ள சௌகரியம் இருக்கிறது இன்னும் வேண்டுமானால், மன்மத சிருங்கார லீலைகள் செய்ய “ரதிகேளி விலாஸ” பங்களா இருக்கு. ஆயினும் என்ன?
ஒரு சினிமாபார்க்க நல்ல சுத்தமான உடையுடுத்தி ஒரு பெண் வரக்கூடாது. பக்திரசம் ததும்பும் மங்களமயமான, ஜோதி விளக்கு சுடர் விட்டெரியும், கோவிலுக்கு பட்டு உடுத்தி ஒரு பெண் வரக்கூடாது. குளத்திற்குத் தண்ணீர் எடுக்க செல்லக்கூடாது. இன்னும் சொல்லப்போனால், ஒரு யுவதி தன் வீட்டு வாசலில்கூட நிற்கக்கூடாது, இந்த நவீன வாலிபர் கண்களுக்கு முன்! அப்படியாரேனும் தப்பித் தவறி அவர்கள் கண்களுக்கு பட்டுவிட்டால்............அப்பப்பா! அவர்களால் அந்த காதல் தீயிலிருந்து தப்பமுடியாது. எப்படியேனும், அவர்களை வாரியணைத்து, தீயை அணைத்து விடுவார்கள்.
இவையெல்லாம் எதற்காக? காதலின் மாட்சியா? இல்லவே இல்லை. வெறும் காமம்! பித்து! சதா பெண்களைப்பற்றியே ஸ்தோத்திரம்! வியாபாரத்திற்கு வந்தாலும் சரி! உத்தியோகத்திற்கு வந்தாலும் சரி! வழி தெரியாது வந்து “ஐயா!............க்கு வழி எது?” என்று கேட்டாலும் சரி! எங்கும் காதல் மயம் ஜகத்! அட ராமச்சந்திரா!
இங்குதான் இப்படி என்றால் இந்த மன்மதசிருங்கார, அலங்கார புருடர்கள், கிராமப் புறத்திற்குச் சென்றாலும் சரி. இதே இழவுதான்! (கிராமாந்திரங்களுக்குச் செல்வது, ஏதாவது ஒரு அப்பாவி பெண்ணைப் பிடிப்பதற்குத்தான்) கிணற்றில் ஜலம் இறைத்துக்கொண்டிருந்தாலும், ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தாலும், (குலம், கோத்திரம் அந்தஸ்துபற்றி கவனிப்பதே இல்லை.) கற்பழிக்கத் துணிந்துவிடுகின்றனர். ஐயோ பாவம்! பட்டணத்து வாலிபர்கள் தன்னை ஒரு பொருட்படுத்தி அழைப்பதை மதித்து, எப்படி மறுப்பது என்ற கிலேசத்தினால், கல்வியறிவற்ற பேதைகள் இத்துன்மார்க்கர்களுக்கு உடன்படுகின்றனர். அதுவுமன்றி வறுமையிலேயே சதாதிளைத்து, உடல்மெலிந்து உள்ளம் குமுறி கண்ணீர் விட்டு கதறும் நிலையிலுள்ளவர்களுக்கு இக்காமுகர்கள் கொடுக்கும் சில்லரைப் பணம் மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஒரு காசு கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கையில் வெள்ளி ரூபாயாக ஒரு ரூபாய் கையில் கிடைக்கையில் கவனமெல்லாம் எங்கோ ஓடி ஒழிந்துவிடுகின்றது. அவளின் தாத்தா, பாட்டி கூறிய சீதா, திரௌபதி, தமயந்தி முதலிய கற்பரசிகளின் கதையின் கருத்துகள் கவனத்திற்கு வருவதில்லை. இவ்விதம் துராக்கிரமமாக கற்பழிப்பதால் பிற் காலத்திற்கு நரகத்தில் எவ்வித தண்டனை கிடைக்கும் என்பதைப்பற்றியும் மறந்துவிடுகின்றனர். அந்தோ! ஒரு பாவமுமறியாத விவேகமற்ற—பேதைகளுக்கு இதனால் எவ்வளவு அனர்த்தங்கள் ஏற்படுகின்றன? தாய்க்கு தெரியாமல், தந்தைக்குத் தெரியாமல் கள்ளத்தனமாக சோரம் புரிந்து கர்ப்பமுற்று சிசுஹத்தி புரிகின்றனர்? கர்ப்பிணியாக இருக்கும்பொழுதே சிலரின் பேச்சைக் கேட்டு மாற்று மருந்தென்று நம்பி விஷத்தை அருந்தி மாள்கின்றனர்?
பகுத்தறிவுடையோர் என்று கூறிக்கொள்ளும், இந்நவீன நாகரிக வாலிபர்களினால் எவ்வளவு துன்பம்? நீதியற்ற—முறையற்ற இச்செய்கையினால், குழந்தையை பிரசவித்து, ஜாதி பிரஷ்டம் செய்யப்பட்டவர்கள் எவ்வளவு பேர்? வாலிபர்களே! ஆலோசியுங்கள்! இது உங்களுக்கு தர்மமா? அல்லது நாட்டிற்குத்தான் க்ஷேமமா? ஆதரவற்ற அனாதைகளை ரக்ஷிக்கிறேன் என்று அழைத்துவந்து, ஒரு இரவு, இரு இரவு வைத்திருந்து சோரம் புரிந்து “கழுதை!........ எக்கேடு கெட்டுப்போ! ” என்கிறீர்களே இது நியாயமாகுமா? அப்படிப்பட்ட அனாதைகள் தென்படின் கௌரவமுள்ளவர்களால், உயரிய முறையில் நடத்தப்படும், “அனாதை விடுதி” களுக்கு அனுப்பினால் உங்களுக்கு எவ்வளவு கௌரவம்! அந்தப் பெண்ணும் தன் ஆயுள் உள்ள மட்டும் உம்மை வாழ்த்துவாளே! உலகத்தில் சிற்றின்ப சுகத்தை அனுபவிக்கவும், அல்வா ஜிலேபியாக வயிறார உண்ணவும் தான் பிறந்தோம் என்னும் மூடத்தனமான கொள்கையை அகற்றுங்கள்! பிறவியின் பயன் பிறருக்குச் சேவை செய்தலே என வீறுகொண்டு எழுங்கள்! மான மரியாதை உணர்ச்சியுடன் வாழ முற்படுங்கள். வீணில் மரக்கட்டைகளாக இருக்கவேண்டாம்!
நன்றி
மாதர் மறுமணம் இதழ்(1939)