மீள்பதிப்புக் குறிப்பு:
நவீன இயற்பியலின் தந்தை எனப் போற்றப்படுபவர் உலகப் பெரும் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். வியப்பு மிகுந்த இவரது அன்றாட வாழ்வியல் பக்கங்களையும், அவரது குழந்தைத்தனமான எளிய சுபாவத்தையும் விவரிக்கும் அரிய நகைச்சுவைக் கட்டுரை. 1954-ஆம் ஆண்டு மே மாத 'மஞ்சரி' இதழில் பி. ஜி. கிருஷ்ணையா அவர்களால் எழுதப்பட்ட இப்பதிவு, அணுசக்தியின் பேராற்றலைக் கணக்கிட்ட ஒரு மாபெரும் விஞ்ஞானி ஆடம்பரங்களை வெறுத்து எப்படி ஒரு சாதாரண மனிதராக வாழ்ந்தார் என்பதைப் புள்ளிவிவரங்களோடு விளக்குகிறது.
விஞ்ஞானியின் விநோத வாழ்வு
(பி. ஜி. கிருஷ்ணையா)
பொதுவாக, அணுச் சக்தியைப்பற்றி, அதுவும் அணுக் குண்டு, ஹைட்ரஜன் குண்டு இவைகளின் நாச சக்தியைப்பற்றி நமக்குத் தெரிந்திருப்பதற்கே ஐன்ஸ்டீன் போட்டு முடித்த ஒரு கணக்குத்தான் காரணம். அவருக்கு 20 வயது இருக்கும்போதே ஜடப் பொருளிலிருந்து சக்தியை உண்டு பண்ணலாம் என்று அவர் வாதித்து வந்தார். அது சாத்தியம் என்று ஹிரோஷிமாவில் அணுக் குண்டு வெடித்தபோது உலகத்துக்குத் தெரிந்துவிட்டது.
தம் கொள்கையில் மிகவும் உறுதி உள்ளவர் ஐன்ஸ்டீன்; பிடித்த பிடியை விடாமல் தீவிரமாக வாதாடுவார். இதுவரை உலகில் தோன்றியிருக்கும் நாலைந்து பிரபல விஞ்ஞானிகளுக்குள் அவர் ஒருவர்; இன்று உலகில் இருக்கும் விஞ்ஞானிகளில் தலை சிறந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் என்ற ஊரில்தான் அவர் இப்போது இருந்து வருகிறார். இன்னும் அவரை ஏதோ விநோதப் பிரகிருதியாகவே அங்கே இருப்பவர்கள் கருதி வருகிறார்கள். பொதுவாக எல்லாருக்கும் ஐன்ஸ்டீன் பெரிய தத்துவ ஞானி, விஞ்ஞானி என்று தெரியுமே தவிர அவருடைய அன்றாட வாழ்க்கையைப்பற்றி யாருக்கும் தெரியாது.
அவர் வசிக்கும் வீடு, ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஸ்தாபனம் அவருக்கு அளித்தது. 1933-இல் நாஜிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியாமல் ஐன்ஸ்டீன் இங்கே வந்து விட்டார். இந்த ஸ்தாபனத்தின் காரியாலயம் இரண்டாம் மாடியில் இருக்கிறது. இப்போது அவர் வேலையிலிருந்து விலகி ஓய்வு எடுத்துக்கொண் டிருக்கிறார் என்று பெயரே யொழிய இன்னும் ஸ்தாபன அலுவல்களில் பங்கெடுத்துத் தான் வருகிறார்.
பிரின்ஸ்டன் நகரில் அநேகம் பேருக்கு அவரைப்பற்றி அதிகமாக ஒன்றும் தெரியாது. ஏதோ இரண்டொரு சம்பவங்களைப் பற்றிக் கேட்டுவிட்டு எல்லாவற்றையும் முடி போட்டு ஆசாமி எப்படிப்பட்டவர் என்று யோசித்து யோசித்துப் பார்க்கிறார்கள். அப்படியும் ஒன்றும் தெரிந்த பாடில்லை. அவர் இங்கே வந்த புதிதில் அநேகம் பேர் அவரைப் பிரமாதமாகக் கொண்டாடலானார்கள்; ஆனால் அவர் ஒருபோதுமே ஆடம்பரத்தை விரும்புவதில்லை. அதனால் எதிலும் கலந்துகொள்வதில்லை. இருந்தாலும் ஒரு சமயம் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தெருப் பையன்கள் சிலர் அவர் வீட்டுக்கு எதிரில் பாடி அவரை வெளியே வரவழைத்துவிட்டார்கள். “ஏதாவது காசு போடுங்கள், ஐயா!" என்றார்கள்.
டாக்டர் ஐன்ஸ்டீன் உள்ளே போய் ஒரு ஜாக்கெட்டும் தொள தொளவென்றிருக்கும் ஒரு குல்லாயும் போட்டுக்கொண்டு கையில் ஒரு பிடிலுடன் திரும்பி வந்தார்; "சரி; வாருங்கள்; நானும் உங்களோடு வருகிறேன். உங்களுக்கு வருகிற வரும்படியில் ஏதோ கொஞ்சம் கொடுங்களேன், போதும்" என்று அவர்களோடு புறப்பட்டு விட்டாராம். பணம் என்றால் அவருக்குத் துரும்புக்குச் சமானம். முன்சொன்ன ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் சேரும்போது அவர் வாயாலேயே சம்பளம் இவ்வளவென்று சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவர் “5,000 டாலர்” என்றார். அப்புறம் ஸ்தாபன நிர்வாகிகள் மிஸஸ் ஐன்ஸ்டீனிடமே பேசி ஓர் ஏற்பாட்டுக்கு வந்தார்கள். இல்லாவிட்டால் அவர் குடும்பமே பட்டினி கிடந்து மிகவும் சிரமப்பட்டிருக்கும், பாவம்!
ஒரு நாள் ராக்ஃபெல்லர் அவருக்கு 1,500 டாலருக்கு ஒரு செக் அனுப்பினாராம். அதை அவர் மிஸஸ் ஐன்ஸ்டீனிடம் கொடுக்க மறந்துவிட்டார். ஏதோ ஒரு புத்தகத்தில் பக்க அடையாளமாக அதை வைத்தார். கடைசியில் அந்தப் புத்தகமே தொலைந்து விட்டதாம். இப்படி ஒரு கதை அவரைப் பற்றி உள்ளூரில் வழங்குகிறது. அவர் மனைவி அடிக்கடி, “சரியாக உடுத்துக்கொள்ளுங்களேன்” என்று சொல்லுவாளாம். ஒரு நாள் அவர் காலில் ஸாக்ஸ்கூட இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தாராம். உடனே அவள், “இதென்ன கூத்து!" என்றாள். அதற்கு அவர், “பையில் சரக்கு இருக்கிறது. அதைவிடப் பை பகட்டாக இருந்துவிட்டால் உள்ளே இருக்கும் சரக்கின் மதிப்பு மட்டுப்பட்டுவிடுமே!" என்று ஸ்பினோஸா என்ற தத்துவஞானி சொன்னதை அப்படியே எடுத்துச் சொன்னாராம்.
ஐரோப்பாவில் ஒவ்வொன்றாகப் பல சர்வகலாசாலைகளில் வேலை பார்த்துக்கொண்டே பல நாட்டு எல்லைகளைத் தாண்டிப் பல மனிதர்களுடன் பழகினார். ‘ரிலேடிவிடி' என்ற தம் சிந்தாந்தத்தைப்பற்றிப் பிரசங்கம் செய்துகொண்டு வந்தார். அப்போதெல்லாம் ரெயிலில் மூன்றாம் வகுப்பில்தான் அவர் பிரயாணம் செய்வது வழக்கம். மிஸஸ் ஐன்ஸ்டீன், “இதென்ன, சுத்தமாக நன்றாகவே இல்லையே!" என்றாளாம். மனைவியிடத்தில் அவருக்கு அபார அன்பு. அதனால் சரி என்று சொல்லி அதுமுதல் இரண்டாம் வகுப்பு வண்டியில் பிரயாணம் செய்யத் தொடங்கினார்.
சமீபத்தில் குடும்ப நண்பர் ஒருவரின் கல்யாணத்துக்குப் போயிருந்தார் ஐன்ஸ்டீன். எல்லாரும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றபடி வெள்ளை டை, கவுன் இப்படி எல்லாவற்றையும் ஒழுங்காகப் போட்டுக்கொண்டு வந்தார்கள்; ஆனால் நம் ஐன்ஸ்டீன் தொள தொள என்று இருக்கும் பழைய குல்லாய் ஒன்றைப் போட்டுக் கொண்டு ஏதோ அன்றாடம் கூலி வேலை செய்யும் பண்ணையாள் போல் உடுத்துக்கொண்டு வந்து விட்டார். இருந்தாலும் எல்லாருடனும் சர்வ சகஜமாகத்தான் பழகினார்.
இன்னொரு சமயம், அவருக்குத் தெரிந்த ஒரு சிறு பெண், ஒரு கணக்குப் போடத் தெரியாமல் அவரிடம் வந்து சொல்லித் தரச் சொன்னாள். 'பிரபஞ்சத்திலேயே மிகப் பெரும் மேதை' என்று பெர்னார்ட் ஷா பாராட்டிய டாக்டர் ஐன்ஸ்டீன், ஒரு பென்ஸிலைச் சீவி எடுத்துக்கொண்டு அந்தக் கணக்கைத் தெளிவாகப் புரியும்படி போட்டுக் காட்டினாராம். உடனே அந்தப் பெண் குச்சியில் செருகிய சின்ன மிட்டாய் ஒன்றை அவருக்குக் கொடுத்தாள். அவரும் அதைக் குச்சி வரைக்கும் சப்பிச் சப்பிச் சாப்பிட்டுத்தான் விட்டாராம்.
முன் ஒரு சமயம் அவர் பிறந்த நாளின்போது உள்ளூர்த் தினசரி நிருபர் ஒருவர் அவரிடம் வந்து, "பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படி?” என்று விசாரித்தாராம். அதற்கு அவர், “பூ! பிறந்த நாளாவது, மண்ணாங் கட்டியாவது! குழந்தைகளுக்குத்தான் பிறந்த நாள் கொண்டாடுவார்கள். எனக்கெதற்கு?” என்று சொல்லி விட்டாராம்!
நன்றி
மஞ்சரி இதழ்(மே_1954)