மீள்பதிப்புக் குறிப்பு:தமிழ் செவ்விலக்கியங்களில் பயின்று வரும் சொற்களின் உண்மைப் பொருளையும், அவற்றின் இலக்கண நயங்களையும் ஆராயும் ஒரு உன்னதமான மொழியியல் ஆய்வுப் பதிவு இது. 1922 -ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி இதழான 'செந்தமிழ்' (தொகுதி 19, பகுதி 6) பத்திரிகையில் பேட்டை ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை அவர்களால் எழுதப்பட்ட இக்கட்டுரை, 'அல்குல்' என்ற சொல்லின் அசல் பொருள் குறித்து அன்றைய அறிஞர்களிடையே நிலவிய மாற்றுப் பார்வைகளைச் சான்றுகளுடன் தெளிவுபடுத்துகிறது. திவாகரம், சூடாமணி, உரிச்சொல் போன்ற நிகண்டுகளின் பரியாயப் பெயர்கள், புகழேந்திப் புலவரின் உவமான சங்கிரகம் மற்றும் கம்பராமாயணம், வில்லிபாரதம், ஆழ்வார் பாடல்களின் சான்றுகளைக் கொண்டு, இச்சொல் இடுப்புக்குக் கீழ் உள்ள பின்பாகத்தையே (கடிதடம் / நிதம்பம்) குறிக்கும் என்ற செம்பொருளை நயமாக நிறுவுகிறது. கால ஓட்டத்தில் மறைந்து போகக்கூடிய இத்தகைய நூற்றாண்டு பழமையான அரிய தமிழ் மொழியியல் ஆவணங்களை இன்றைய இணையத் தலைமுறையினரும், தமிழ் ஆர்வலர்களும் படித்துப் பயன்பெறும் நோக்கோடும், தூயத் தமிழ் மொழி ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.
📜 அல்குல்.
1922 ஜனவரி-பிப்ரவரி தேதியிட்ட "செந்தமிழ்" இதழ்
செந்தமிழ் 19-ம் தொகுதி 6-ம் பகுதியில் திருவனந்தபுரம் ஸ்ரீமாந் N. சிவராஜபிள்ளையவர்கள் "நமது காவியங்களிற் சந்மார்க்கநாசத்திற்கேதுவான கதைகளும் வருணனைகளும் மலிந்துகிடக்கின்றன." என்னும் பகுதியில் "சைவசமய ஆசாரியர்களின் தலைவரான ஞானசம்பந்தருங்கூடப் பாண்டிமாதேவியை வருணிக்குமிடத்து, 'பையரவ பாண்டிமாதேவி' என்றுகூறி நம்மைப் பிரமிக்கச்செய்கின்றார்" என்று எழுதியிருக்கிறார்கள். காலஞ்சென்ற ஸ்ரீமாந்-சி. வை. தாமோதரம்பிள்ளையவர்களும் இவர்களைப் போன்றே கருதித் தாம் பிரசுரித்த கலித்தொகையில் அச்சொல் வருமிடங்களிலெல்லாம் அதனை நீக்கி வேறு சொற்களையேனும் சொற்றொடர்களையேனும் பெய்தார்கள். அன்றியும், அவர்கள் அச்சொல்லைக் கூறும்பொழுது குஃறொடர்ந்த அன்மொழியென்று பிரியோசித்தார்கள்.
சொற்பொருளுணர்த்தும் தமிழ்நூல்கள் திவாகரம் நிகண்டு முதலியனவேயாம். அவைகளில் திவாகரத்திலும் சூடாமணிநிகண்டிலும் அல்குற்பதத்திற்குப் பிரதிபதமாகக் கடிதடம், நிதம்பம் என்றிரண்டு சொற்கள் காணப்படுகின்றன. உரிச்சொல் நிகண்டில் அல்குலின் பரியாயப்பெயர்களாக அரை நிதம்பம் என்னும் இரண்டுமே காணப்படுகின்றன. பிங்கலந்தையில் மேற்கூறியவற்றோடு உபத்தமுங் கூறப்பட்டிருக்கின்றது. இவைகளில் அல்குற்கும் ஜனனேந்திரியத்திற்கும் காணப்படும் பரியாய பதங்கள் வெவ்வேறாம்.
இனி, பெண்களது அவயவங்களை வருணிக்கப் புகுவார்க்கு அவற்றிற்குரிய உவமைகளைக் கூறுவதாய்ப் புகழேந்திப் புலவராற் செய்யப்பட்டிருக்கும் 'உவமான சங்கிரகம்' என்னும் நூலிலும், மதுரைத் தமிழ்ச்சங்கத்து 36வது பிரசுரமாக வெளிவந்திருக்கும் 'உவமான சங்கிரகம்' என்னும் நூலிலும் அல்குற்கும் ஜனனேந்திரியத்திற்கும் வேறுவேறு உவமைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அல்குலின் பரியாயப் பெயராகிய கடிதடம் என்பது கடி, தடம் என்பன சேர்ந்தாகியது, தடம் என்பது சரிவுப்பக்கங்களையுடைய அவயவங்களைக் குறிப்பதற்குவரும் சொல்லாம். கடி என்பது பிருஷ்டத்தின் பெயராக வடமொழியிற் காணப்படுகிறது. ஆகவே கடிதடம் என்னுஞ்சொல் இடுப்புக்குக்கீழுள்ள பின்பாகத்தைக் குறிக்கும். (கடிசூத்திரம் என்பனவற்றிற்போலக் கடி தனித்து நின்று இடுப்பையுணர்த்துவதுமுண்டு). கலித்தொகையில் "மூவழிப்பெருகி" என வருதலினாலும் அல்குல் இடுப்பின் கீழுள்ள பின்பாகத்தையே குறிக்குமென்பது பெறப்படும். நிதம்பம் என்னுஞ்சொல்லுக்கு அமரகோசம் பெண்களின் இடுப்புக்குக்கீழ்ப்பட்ட பின்பாகம் என்னும் பொருளைத் தருகின்றது. பச்சாத் நிதம்ப: II மனுஷ்ய வர்க்கம் 74. ஆப்டி என்பவரும் அச்சொற்கு இடுப்பும் அதன் பின்புறமும் என்றே பொருள் கொள்ளுகின்றார்.
நமது சிவராஜபிள்ளையவர்களால் பாராட்டப்படுகிற கம்பராமாயணத்தில் ராமபிரான் அநுமானைச் சீதையை நாட அனுப்பும்பொழுது அநுமான் சீதை இவள் என்று ஐயந்திரிபற அறிவதற்கு அநுகுணமாக அவளது அவயவங்களை வருணித்துக்கூறுமிடத்து அல்குலுங் கூறப்பட்டிருக்கின்றது. அல்குல், கடிதடம் என்னும் பதங்கள் ஆண்மக்களை வருணிக்குமிடத்தும் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. "பூந்துகில் சேரல்குல் காமரெழில் விழலுடுத்து" எனத் தசரதன் ராமனை நோக்கிப் புலம்புவதாகக் குலசேகராழ்வார் கூறுகின்றார். தவநிலையில் நின்ற அருச்சுனனும் வேடவடிவங்கொண்டுவந்த சிவபெருமானும் மற்போர் செய்கின்றகாலத்தில் கடிதடத்தாலும் மற்போற் செய்தாரென்று வில்லிபுத்தூரர் கூறுகின்றார்.
உபத்தம் என்பது சமீபத்திலிருப்பது என்னும் பொருளைத்தரும் அல்குற் பதம் தமிழ்நூல்களிற் சிலவிடங்களில் இடக்கரடக்கலாக உபயோகிக்கப்படுவதுண்டு. அதுபோல வடசொற்களுள் உபத்தமும் உபயோகிக்கப்படும். இவ்வுபத்த மென்னுஞ்சொல்லும் இருபாலார் அவயவங்களுக்கும் பொதுவாக உபயோகிக்கப்படுதல் சமயநூல்களிற் காணப்படுகின்றது.
ஒரு சொல்லின் செம்பொருளுக்கும் இடக்கரடக்கற்பொருளுக்கும் வேற்றுமைதெரிந்து கொள்ளுவது உண்மைப்பொருள் தெரிவார்கடனாம். ஒரு சொல் உவமைதொடர்ந்து வருவதே அச்சொல் இடக்கரடக்கலன்றென்பதை நாம் சிறிதும் பிரமித்தற்கிடமின்றித்தெளிவுபெறக்குறிக்கும்.
ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை,
பேட்டை.