மீள்பதிப்புக் குறிப்பு:தமிழகத்தின் மாபெரும் அறிவியல் மேதையும், தொழில்துறை முன்னோடியுமான 'கோயம்புத்தூர் ஜி. டி. நாயுடு' அவர்களின் வாழ்வில் நடந்த மிக அதிரடியான வரலாற்றுச் சம்பவத்தைப் பதிவு செய்யும் அரிய ஆவணம் இது. 1954 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 தேதியிட்ட 'இடி' வார இதழில் வெளியான இக்கட்டுரை, அந்நிய நாடுகளை எதிர்பார்க்காமல் இந்தியாவிலேயே மலிவு விலை ரேடியோக்கள், கடிகாரங்கள், பேனாக்கள், டீசல் எஞ்சின்கள் போன்றவற்றைத் தயாரித்து வேலைவாய்ப்பற்ற திண்டாட்டத்தைப் போக்க முயன்ற ஜி.டி. நாயுடுவின் திட்டங்களை அன்றைய ஆட்சியாளர்கள் எவ்வாறு முடக்கினர் என்பதை விவரிக்கிறது. தன் வாழ்நாள் உழைப்பும், நாட்டுக்குத் தேவையான கண்டுபிடிப்புகளும் அதிகாரத்துவக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டதால், மிகுந்த மனவேதனையுடன் அவர் தனது சொந்தத் தயாரிப்புகளைத் தானே உடைத்தெறிந்த வரலாற்றுப் பின்னணியையும், இச்சம்பவம் குறித்து 'தினமணி' நாளிதழ் வெளியிட்ட எதிர்மறைத் தலையங்கத்திற்கு அன்றைய முற்போக்கு ஊடகங்கள் அளித்த காரசாரமான பதிலடிகளையும் இப்பதிவு தாங்கி நிற்கிறது. கால ஓட்டத்தில் பழைய இதழ்களின் பக்கங்களுக்குள் சிதைந்து போகக்கூடிய இத்தகைய அரிய வரலாற்றுச் சமூக ஆவணங்களை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்து உண்மை நிலையை உணரும் நோக்கோடும், கல்விப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.
ஜி. டி. நாயுடு ஏன் உடைத்தார்! தினமணியின் பித்துக்குலித்தனம்!
1954 பிப்ரவரி 16 தேதியிட்ட "இடி" வார இதழின் முகப்புப் பக்கம்
சென்னையில் எங்கு பார்த்தாலும் அறிஞர் ஜி. டி. நாயுடுவின் பேச்சாகவே இருக்கிறது. ஏன்? கடந்த மாதங்களில் பார்க்பேர் கண்காட்சியில் விலை மதிக்க முடியாத அபூர்வ யந்திர சாதனங்கள் முழுதும் கண் காட்சிக்கு வைக்கப்பட்டு அவைகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்று எடுத்துக் கூறுவதற்கு சுமார் நூறு ஆட்களை வைத்து கைத்தொழில் அறிவு வளர பேசுவதோடல்லாமல் செய்தும் காட்டினார்!
குறைந்த விலையில் ரேடியோ செய்யலாம் என்று வெறுமனே வாய் வேதாந்தம் பேசுவதல்ல. சென்னையிலே தினமும் சில ரேடியோக்கள் செய்து செய்து கண் காட்சியில் வைத்துக் கொண்டே இருந்தார்கள். கடிகாரங்கள் கண் காட்சியில் உள்ள யந்திரங்கள் கடிகார பகுதிகள் முழுதும் செய்யப்பட்டு அதே கண் காட்சி லில் பூட்டப்பட்டு மாட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.
பேனாக்கள் முழுதும் கண் காட்சியிலே தயாரிக்கப்பட்டது. நிப் முதல் எல்லாம் அங்கேயே அங்குள்ள யந்திரங்களின் உதவியால் தயாரிக்கப்பட்டு கண் காட்சியில் வைக்கப்பட்டன. இவைகளை எல்லாம் தினமும் மக்கள் பார்த்தார்கள். நமது நாட்டு யந்திர வளர்ச்சியைக் கண்டு அதிசயித்தார்கள். இவைகளை தயாரிக்கின்ற அறிஞர் நாயுடுவுக்கு அரசியல் உலகம் ஏன் ஆதரவு தராமல் இருக்கிறது? என்று சிந்தித்துக்கொண்டே இருந்தார்கள். ஆட்சியாளரின் போக்குக்கு மக்கள் இதயத்திலே ஒரு மாதிரியான வெறுப்பு உண்டாகி இருந்தன.
ஜி. டி. நாயுடுவுக்கு ஏன் லைசன்சு தரக்கூடாது? அவருக்கு ஆதரவு தந்தால் வேலையில்லா திண்டாட்டம் நீங்கி விடாதா? அந்நிய நாட்டிற்கு நமது நாட்டிலிருந்து வீணாக எதற்கு யந்திர சாதனங்களை வாங்க பணம் அனுப்பவேண்டும் என்று சிந்தித்தார்கள் அதை மற்றவர்களுக்குக் கூறினார்கள். தமிழர்கள் வளர்ந்தால் தங்கள் வாழ்வுக்கு வழியிருக்காது என்று கருதுகிற ஒரு கும்பல் அறிஞர் நாயுடு வருமான வரி கொடுப்பதில்லை, ஆகலால் அரசாங்கம் இவர் செய்கின்ற வேலைக்கு ஆதரவு தருவதில்லை என்று துற்பிரசாரம் செய்து வந்தார்கள்.
அரசாங்கம் விதிக்கிற வருமான வரிகள் அளவை எதிர்த்து ஜி. டி. நாயுடு மாத்திரம் வாதாடவில்லை. இன்னும் எத்தனையோ வியாபாரிகள் வாதாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நாயுடுவின் முறையீடு சரியானதாக இருந்தால் அரசாங்கம் ஏற்றக்கொள்ளும், இல்லை என்றால் தான் விதித்த வரியே சரியென்று வாங்கிக் கொள்கிறது. இது நாயுடுவுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள தனிப்பட்ட விஷயம். இதனால் நாயுடுவை எதிர்த்து துற்பிரசாரம் செய்யவேண்டியதில்லை. வரி கொடுக்காமல் வாதாடுகிறார் என்பதற்கு அவர் செய்கின்ற அரிய காரியங்களை எதிர்த்து எழுதுவது பேசுவது மிக மட்ட ரகமான போக்காகும்.
அந்தத் தோழர்களுக்கு நாம் சவால் விடுக்கிறோம். இந்தியாவிலே கைத்தொழில் வளர்ச்சிக்காக அறிஞர் நாயுடுவைப் போல் வேறு யார் மகத்தானத் திட்டத்தை கையிலே வைத்திருக்கிறார்? கடந்த இருபது ஆண்டுகளாக இடைவிடாது இரவு பகலாக முயன்று பல யந்திரங்களைச் செய்து அவற்றில் எந்த விதமான பிரதி பிரயோஜனமும் கருதாமல் ஆண்டு தோறும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாக அதை விளக்கிக்காட்டிக் கொண்டிருக்கிறார்? இந்த கண் காட்சியில் முடக்கப் பட்டிருக்கும் யந்திரங்கள் இதுவரை நாயுடுவுக்கு ஒரு பைசா வருமானத்தை உண்டு பண்ணியிருக்குமா? இந்த தாராள உள்ளம் இந்தியாவில் உள்ள வேறு எவருக்கு இருந்தது இருக்கிறது என்று நாம் கேட்கிறோம்.
இதற்குத் தினமணி போன்ற குல்லூக பட்டர்கள் பதில் கூறுவார்களா? ஆட்சியாளர்களின் செல்லக் குழந்தைகளாகிய பிர்லா இம்மாதிரி செய்திருக்கிறாரா? அல்லது வால்சந்ஹீராசந் இதைச் செய்து காட்டியிருக்கிறாரா? டால்மியா தான் செய்திருக்கிறாரா? பிர்லா மாளிகையின் மர்மங்கள் என்ற புஸ்தகத்தை தினமணி படித்துப் பார்க்கட்டும், ஆட்சியாளரின் போக்கு தெரிந்து கொள்ளமுடியும். யாருக்குச் சலுகை வழங்கப்படுகிறது, ஏன் நாயுடுவை நிராகரிக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும். வடநாட்டார்கள் தென்னாட்டைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள் இதற்கு ஆட்சியாளரின் ஆதரவு இருக்கிறது என்பது தான் நாயுடுவின் வாதம் இதற்கு எத்தனை ஆயிரம் ஆயிரம் எடுத்துக்காட்டுகள் வேண்டுமானாலும் இருக்கிறது.
ஏன் தினமணி உரிமையாளர் ஸ்ரீ ராமநாத் கோயங்கோ வடநாட்டு முதலாளி தமிழ் நாட்டிலே இவருக்கு என்ன வேலை தினமணி கதிர் போன்ற பத்திரிகையில் கொள்ளை லாபம் சம்பாதிப்பது எல்லோரும் தெரிந்தது தானே. திருக்குறள் முனிசாமியோடு போட்டி போட்டு மண்ணைக் கவ்வியது எதைக் காட்டுகிறது. வடநாட்டானுக்குத் தென்னாட்டில் இடமில்லை என்பதைத்தான் நிருபிக்கிறது. கோயங்கோ தேர்தலில் நிற்க விரும்பினால் வடநாட்டில் நிற்கட்டுமே! தமிழ் நாட்டில் ஏன் நின்றார். இழிச்சவாயன் தமிழன் என்ற எண்ணத்தைத் தவிற வேறு எதுவாக இருக்க முடியும்.
தினமணி நிர்வாகஸ்தர்களுக்கு கொள்கை என்ன இருக்கிறது. ஆட்சியாளரின் பாதம் தூக்கி தேசீயத்தாள் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் தருகின்ற விளம்பர வருமானத்தில் தென்னாட்டில் குடியிருந்து தமிழன் செய்கின்ற முயற்சியை தட்டி அடக்க முயற்சிக்கிறது. தெலுங்கு பாஷையில் ஆந்திர பிரபா என்ற பத்திரிகை நடத்துகிறது. அந்த பத்திரிகையில் சென்னை ஆந்திரர்களுக்குச் சேரவேண்டும் என்று தலையங்கம் எழுதுவது தினமணித் தமிழ் பத்திரிகையில் சென்னை தமிழ் நாட்டிற்குச் சேரவேண்டும் என்று தலையங்கம் எழுதுவது இது தான் கோயங்கோவின் கொள்கை. ஆந்திரப் பிரபாவின் உரிமையாளர்களும் தினமணியின் உரிமையாளர்களும் ஒருவரே. இந்த லட்சணத்தில் தில் அறிஞர் நாயுடுவின் செய்கையைப் பற்றி பித்துக்குலித்தனம் என்ற தலையங்கம் எழுதுகிறது. தமிழர்கள் பித்துக்குலிகளாக உங்களுக்குத் தெரிகிறது. ஏனென்றால் தமிழர்கள் உங்கள் பத்திரிகையை வாங்குகிறார்கள், தமிழ் நாட்டில் உங்களை வாழ விட்டிருக்கிறார்கள், ஆதலால் பித்துக்குலிகள் தான்! தமிழர்கள் இனிமேல் நல்லவர்களாகி விடுவார்கள் அந்த நாள் வெகு தூரம் இல்லை.
❓ ஏன் உடைக்கப்பட்டது?
பொருமைக்கும் எல்லையுண்டு. பல வருடங்களாக அரிய முயற்சிகள் எடுத்துக்கொண்டு அந்நிய நாட்டை எதிர்பார்க்காமல் இந்தியாவிலே எல்லா யந்திரங்களையும் உற்பத்தி செய்யலாம் என்று பல திட்டங்கள் தீட்டி அரசாங்கத்தின் ஆதரவு கோறினார் அவைகள் அனைத்தும் ஏதாவது நொண்டிச்சமாதானம் கூறி அரசாங்கம் மறுத்து விட்டது.
ரேஷர் பிளேடுகள் என்ன? ரேடியோக்கள் என்ன? டீசல் என்ஜின்கள் என்ன? கடிகாரங்கள் என்ன? மோட்டார் உற்பத்திகள் என்ன? இவைகள் அனைத்தும் இந்தியாவில் தயாரித்து நமது நாட்டுத் தொழிலாளர்கள் சுக வாழ்வு வாழவும், நமது நாட்டுப் பணம் நமது நாட்டிலே இருக்கும் படியாகவும் செய்த முயற்சிகள் அனைத்தும் சிதரடிக்கப்பட்டது. இதற்காக அவர் எடுத்துக்கொண்ட முயற்சி உடல் உழைப்பும் சிதரடிக்கப்பட்டது. நாட்டுக்கும் தனக்கும் பலனில்லாத ஒன்றை ஏன் வைத்திருந்தவேண்டும். கருகிய மொட்டு, அழுகிய பழம், சிதைந்த வீடு அழிக்கப்படவேண்டியது தானே. ரேடியோக்கள் உடைக்கப்பட்டதாலே யாருக்காவது கொடுத்தால் என்ன? என்று சிலர் நினைக்கலாம். யாருக்காவது கொடுக்கவும் அரசாங்கம் அனுமதிக்காது. அரசாங்க அகராதிப்படி விலைக்கு விற்றதாக ஏற்பட்டு விடும்.
தினமணியின் உபதலையங்கத்தில் ஜி. டி. நாயுடு செய்தது பித்துக்குலித்தனம் என்று எழுதியிருக்கிறது. ஒரு பொறுப்புள்ள பத்திரிகை நாட்டில் நடக்கும் ஒரு சம்பவம் பற்றி ஒரு தலையங்கம் எழுதுவதற்கு முன்னர் அது சம்பந்தமான பல ஆராய்ச்சிகள் செய்து எழுதவேண்டும். அது தான் ஒரு பத்திரிகாசிரியரின் தர்மம். உதாரணமாக காஷ்மீர் பிரச்சனையைப் பற்றி ஒரு தலையங்கம் எழுதவேண்டுமானால் காஷ்மீர் சம்பந்தமான புத்தகங்கள் இந்தியா, பாக்கிஸ்தான் தலைவர்களின் அபிப்பிராயம், இரு நாட்டுப் பத்திரிகைகளின் பல தலையங்களைப்படித்து எழுதினால் தான் ஒரு படிப்பினையாக இருக்கும் அதை விடுத்து எதோ ஒன்றை வாரி கொட்டினால் அறிவுள்ள வாசகர்கள் ஆசிரியரை முட்டாள் என்று தான் கூறுவார்கள்.
தினமணி ஆசிரியருக்கு ஜி.டி. நாயுடுவைப்பற்றி என்ன தெரியும். அவர் அடிக்கடி தனது அபிப்பிராயங்களை பத்திரிகை வாயிலாகவும் புத்தகங்கள் மூலமாகவும் சென்ற 15 ஆண்டுகளாக வெளியிட்டிருக்கிறார். அவைகளை வாங்கி படித்து விஷயம் தெரிந்திருக்கலாம் முற்போக்குப்பத்திரிகைகளாக பிரிட்ஜ், ஆட்டம் முதலிய ஆங்கிலப்பத்திரிகையிலும், ப்ரீ இண்டியா போன்ற பொதுப் பத்திரிகையிலும், மற்றும் சிவாஜி, இடி போன்ற நமது பத்திரிகையிலும் அடிக்கடி அறிஞர் நாயுடுவை பற்றி எழுத்துக்களை சேகரித்து படித்து தமது கருத்துக்களை வெளியிட்டிருக்கலாம் இல்லை என்றால் அறிஞர் நாயுடுவுக்கே எழுதி நீங்கள் என்ன காரணத்திற்காக உங்கள் உற்பத்திப் பொருள்களை உடைக்கின்றீர்கள்? அரசாங்கம் உங்களுக்கு என்ன ஆதரவு செய்ய மறுத்தது? என்று கேட்டிருக்கலாம் இவைகள் அனைத்தும் சேகரித்து, பிறகு தமது அபிப்பிராயத்தை எழுதியிருக்கலாம். நாம் முழுமனதுடன் அதை வரவேற்போம். அதை விடுத்துவிஷயம் தெரிய முயற்சிக்காமல், விஷயம் தெரிந்தவர்போல் பித்துக்குலித்தனமாக எழுதுவதை இனியும் தென்னாட்டவர் பொருத்துக்கொண்டிருக்கமுடியாது.
சென்னையில் முஸ்லிம் முரசு என்ற மாத இதழ் இந்த உடைப்பு விழாவைப் பற்றி அழகான தலையங்கம் பிப்ரவரி இதழில் எழுதியிருக்கிறது. இந்த உடைப்புக்கு ஆட்சியாளர் பதில் சொல்லவேண்டும் என்று கோறியிருக்கிறது. இது தான் நியாயமான தலையங்கம். 'தினத்தந்தி' உடைத்ததிற்கு காரணம் எழுதியிருக்கிறது நல்லதொரு கார்ட்டூனும் போட்டிருக்கிறது.
நாயுடு அவர்கள் தான் கண்டுபிடித்த நமது நாட்டில் கைத்தொழிலை வளர்த்த இதுவரை தனது தொழிற்சாலையில் உற்பத்தி செய்த பொருள்களைக் காட்டாத, அரசியல் தலைவர்களே இந்த நாட்டில் இல்லை என்று சொல்லலாம். மத்திய சர்க்கார் மந்திரி V. V. கிரி உட்பட, ஹுமாயூன் கபீர், போன்ற உத்தியோகஸ்தருக்கு தனது யந்திரங்களை காட்டி அவர்களது முன்னிலையில் ஒவ்வொரு பொருளாகச் செய்து காட்டியிருக்கிறார். உலகம் புகழ் விஞ்ஞானி சர். C. V. ராமன் விஸ்வேஸ்வரய்யா வரையில் எல்லா அறிஞர்களும் நாயுடுவைப்பற்றி வெகுவாகப் பாராட்டி இருக்கிறார்கள். நாயுடுவுக்கு நல்ல ஆதரவு இல்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள். நாயுடுவின் பங்களாவிற்கு வந்து போகாத அறிவாளிகளே இந்தியாவில் இல்லை என்று சொல்லலாம். அவ்வாறிருக்க சுண்டைக்காய் தினமணி முற்றும் தெரிந்ததுபோல் மூடத்தனமாக எழுதிய தலையங்கம் நம்மை வாதனை செய்கிறது.