தமிழ்ச்
சிறுகதை உலகில் தலித் இனமக்களின் விடுதலைக்காக அயராது எழுதி வருபவர் எழுத்தாளர் அழகிய
பெரியவன். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த இவர் தனது வாழ்க்கைச் சூழல், ஆழ்ந்த சிந்தனை,
காலத்தின் நிகழ்வு ஆகியவற்றின் துணைகொண்டு இலக்கியங்களைப் படைத்து வருகிறார். தமிழ்ச்
சிறுகதைகள் நூறு ஆண்டுகளை எட்டிய போதிலும் முழுமையாக தமிழ்பேசும் சமுதாயத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்த வெற்றிடத்தைப் போக்கும் வண்ணமாக அழகிய பெரியவன் சிறுகதைகள் அமைந்துள்ளன.
தலித் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, வாழ்க்கை
முறைகள் மறைக்கப்பட்டு, உயர்சாதிப் பண்பாட்டைத் தாங்கிப் பிடிப்பதாக இலக்கியங்கள் இருந்துள்ளன.
அடிமை வாழ்விலிருந்து விடுபட்டு அடிப்படைத் தேவைகளுக்கு தினமும் போராடிப் பெறவேண்டிய
நிலையே காணப்பட்டது. இந்நிலையில் அவர்களின் அடிமை வாழ்விலிருந்து விடுதலை பெறும் பொருட்டாக
பெறப்பட்ட செயல்பாடுகளை தலித் பண்பாடு என்று கூறலாம். எதிர் பண்பாடு, தலைகீழாக மாற்றுதல்,
ஆதிக்க அடிமை உறவின் சமிக்ஞைகள் படிப்பு, எழுத்து, உடல் அசைவுகள் போன்றவையும் தன்னம்பிக்கையை
வளர்த்தல், எதிரியின் பலவீனங்களைப் பிரச்சாரம் செய்தல், சோசலிச புரட்சி, அரசியல் இயக்கத்தில்
பங்குபெறுதல் ஆகியவைகள்தான் தலித் மக்களை விடுதலையை நோக்கி இட்டுச் செல்லும் தலித்
பண்பாடாகும. இப்பண்பாடுகளே தலித் இலக்கியங்களில் கலகப் பண்பாடாக வெளிப்படுகிறது. சாதியம்
மற்றும் தீண்டாமையினால் ஒடுக்கப்படும் மக்களின் வாழ்க்கை முறைகளைப் பதிவு செய்யும்
நோக்கில் அழகிய பெரியவனின் சிறுகதைகள் அமைந்துள்ளன. இவரின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள
இலக்கியக் கூறுகளைத் தலித் அழகியல் அல்லது தலித்தின் தனித்தன்மை என்று கூறலாம்.
தீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும். தீண்டாதவரிடம்,
நீ சுதந்திரமானவன், நீ ஒரு குடிமகன், குடிமகனின் எல்லா உரிமைகளும் உனக்கு உண்டு எனக்
கூறிக்கொண்டு அவர்கள் எந்த இலட்சியத்தையும் அடைய வாய்ப்புப் பெறமுடியாத வகையில் கயிற்றை
இறுக்குவது கொடுமையான ஏமாற்று வேலையாகும். பழந்தமிழகத்தில் தீண்டாமை என்னும் சாதிய
பாகுபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் காணப்படவில்லை. பிற்காலத்தில் வந்தேறிகளாக வந்து இந்தியாவில்
குடியேறிய பிராமணியத்தின் விதைப்பாகச் சாதி காணப்படுகிறது. “சாதிகள் இல்லையடி பாப்பா – குலத் தாழ்ச்சி உயர்வு
சொலல் பாவம்” என்று பாப்பா பாட்டாகச் சாதியைக் கடுமையாகச் சாடுகிறார் பாரதியார்.
அழகிய பெரியவனின் ‘குறடு’ என்னும் சிறுகதை அடிமை
முறையினால் ஏற்பட்ட தீண்டாமையின் எதிர்ப்பு வடிவமாக வெளிப்படுகிறது. தலித் குடும்பத்தில்
பிறந்த வீரபத்திரன், தான் வாழும் பகுதியில் ஒருவர்கூட செருப்பணிந்து பார்த்ததில்லை.
செருப்புகளைப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு வரும் மேல்தட்டுப் பையன்களைப் போல தானும் செருப்புப்
போட்டு வரவேண்டும் என்ற ஓர் ஆசை தீராமல் அவனுள் கனன்று கொண்டிருந்தது. மேல்தெருவில்
ஓரிடத்தில் நின்று ‘நாங்க ஏன் செருப்பு போடக் கூடாது?’ எனக் கேட்டபோது, “நீ அதப் போடறதுக்கெல்லாம்
ஒரு தராதரம் ஓணுன்டா, நாங்க என்ன சாதி? நீங்க என்ன சாதி?” என்று மேல்சாதியினரிடமிருந்து
பதில் வந்தது.
“கல்லுலயும் முள்ளுளயும் அலையறவங்களுக்குத்தானே செருப்பு வேணும், அப்படின்னா எங்களுக்குத்தான் முக்கியமா அது வேணும். கால்ல போடறத்துக்கு போயி என்னா தராதரம் வேண்டி கிடக்கு?”1 (குறடு. ப.403)
என்று
எதிர்த்துப் பேசி தனது உரிமைக்கான கலகக்குரலை வெளிப்படுத்துகிறான். இக்கதையில் வேட்டியைத்
தழையக் கட்டுதல், எச்சிலை கீழே துப்புதல், செருப்பணிதல் ஆகிய மூன்று செயல்களும் தலித்
மக்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உரிமைகளாகும். மறுக்கப்பட்ட இவ்வுரிமைகள் தீண்டாமையின்
வடிவமாகவே இக்கதையில் வெளிப்படுகிறது.
வறுமையைப் பாடும் மரபு பண்டையத் தமிழ் இலக்கியங்களில்
காணப்படுகிறது. நவீன காலத்திலும் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எழுத்தாளர்கள் வறுமையை
தங்கள் படைப்புகளில் எடுத்துக்கூறியுள்ளார். மனித சமுதாயம் தற்காலப் பொருளாதார வளர்ச்சி
நிலையிலும் வறுமை முழுமையாக வேரறுக்கப்படாத ஒன்றாக காணப்படுகிறது. சமுதாயத்தில் அடிமட்டத்தில் வாழ்ந்துவரும் தாழ்த்தப்பட்ட
மக்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வறுமை, பற்றாக்குறை போன்றவற்றிற்கு ஆளாகின்றனர்.
ஆதிக்க சாதியினரின் இல்லங்களிலும் வயல்களிலும் அடிமைகளாகக் கேட்பாரில்லாத நிலையில்
தண்டனைகளுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் தண்டனை பெறும் சிலர் இவற்றை எதிர்த்துப்
போராடுவது கலகக்குரலாக ஒலித்துள்ளது.
‘தோப்பு’ என்ற சிறுகதையில் தவணம் அவனது கணவன்,
பிள்ளைகள் என அனைவரும் அவ்வூரில் உள்ள பாண்டுரங்க நாயக்கனின் தென்னந்தோப்பில் வேலை
செய்து வருகிறார்கள். இவர்களின் உழைப்பை உறிஞ்சிய நாயக்கன் திருட்டுப்பழியைச் சுமத்துகிறான்.
“ஏம்மே தவணம் என்னா காவல் காக்கறீங்க? ராசியில
காய் கொறையுதே. இல்லீங்களே. நம்மள மீறி இங்க ஒன்று வெளியில போகாதே. வெளியிலே போச்சோ,
உள்ளவே போச்சோ.இந்த சந்தேகப் பொளப்பே வாணாம் மொதலாளி. இப்பவே தோப்பை உட்டுபோகச் சொன்னாக்கூட
போயிடறோம். நீ யாரையாச்சும் வெச்சி காவல் காத்துக்க”
(தோப்பு. ப.515) இக்கதையில் வறுமையின் காரணமாக
அடிமையாக இருந்தாலும் தன்மானத்திற்கு இழிவு ஏற்படும்போது அவற்றை எதிர்த்துப் போராட
தனது குரலை உயர்த்தி பேசுகிறாள் தவணம்.
அரசியலமைப்பின் 325-வது விதிப்படி எல்லோருக்கும்
வாக்குரிமை அளிக்கப்பட்டது. இந்த உரிமை புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை பெற்றதுடன்,
தலித் மக்கள் மற்றைய மக்களுக்கு இணையாக வாழும் வாய்ப்பினையும் அரசியல் அறிவையும் பெறுவதற்கான
வாய்ப்பாக இருந்தது. ஆனால் தேர்தல் நடைபெறும் காலத்தில் தலித் மக்களின் கணிசமான வாக்குரிமையை
பெறுவதற்கு பல்வேறு கட்சிகள் இம்மக்களை தனது சூழ்ச்சி வலையில் விழவைக்கிறார்கள். தாழ்த்தப்பட்டவரில்
ஒருவரை தேர்ந்தெடுத்து அவரின் வாயிலாக மக்களின் வாக்கை பெறுவது அரசியலில் தந்திரமாக
கையாளப்படுகிறது. இவற்றை ‘புலன்’, ‘அழியாத மை’ என்ற சிறுகதைகளின் வழியே அழகிய பெரியவன்
சுட்டிக்காட்டியுள்ளாார்.
“எல்லா ஊரிலும் சாதிக்காரர்களுக்குச் சரிபாதியாக
இருக்கிறார்கள்தான். ஆனால், இதுவரைக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சாதிக்காரனும் பஞ்சாயத்து
தலைவராக வந்ததில்லை. பக்கத்துப் பஞ்சாயத்திலோ தாழ்த்தப்பட்ட சாதிக்காரனுக்கு என்று
ஒதுக்கிய இடம்தான். ஆனால், சாதிக்காரன் யாரைப்பார்த்து கை நீட்டுகிறானோ அவன்தான் ஜெயிப்பான்”3
(அழியாத மை. ப.169)
பணபலத்தைக் கொண்டு ஓட்டுக்குப் பணம் தருதல்,
பெண்களுக்கு மூக்குத்தி, ஆண்களுக்குச் சாராயம், பிரியாணி போன்றவற்றைக் கொடுத்து ஓட்டு
பெறுவது வாடிக்கையாக உள்ளது. அதிகார வர்க்கத்திடமே சட்டதிட்டங்கள் அடிமைப்பட்டு கிடக்கிறது
என்பதை இக்கதையில் எடுத்துக்கூறி விழிப்புணர்வைப் பெறச் செய்கின்றார் ஆசிரியர்.
மனிதனின் எல்லா வகை உளப் பிறழ்ச்சிக்கும் கல்வி
பொருாளாதாரம், பண்பாடு எனப் பலநிலைகளில் குடும்பச் சூழலே காரணமாக அமைகிறது. ஆனால் இவற்றைவிட
மிகப் பெரிய காரணம் உண்டு. அவை ஆறாம் அறிவினைப் பெற்ற மனித சமூகத்தின் சாதிப் பாகுப்பாட்டால்
தன்னை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பிரிவினையை ஏற்படுத்தி, தாழ்ந்தவனை ஐம்புலன்களும்
ஒடுங்குமாறு செய்வதாகும். ‘புலன்’ என்ற சிறுகதை இவற்றை தெளிவுப்படுத்துகிறது. ஆறுமுகம்
தன் நண்பன் சிவநேசனின் தங்கை திருமண உறுதிப்பாட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தான். அவன்
தாழ்த்தப்பட்ட சாதி என்பதால் சிவநேசன் தனது உறவுக்காரர்களிடம் உயர்ந்த சாதி என்று கூறச்சொல்கிறான்.
அவ்வாறு கூறும்போது, ஆறுமுகத்தின் மனதிற்குள் பல்வேறு கேள்விகள் உண்டாகிறது.
“நாம் அவர்களைப் போல சாப்பிட்டோமா? அவர்களின்
உடையைப் போல நாம் உடுத்தியிருக்கிறோமா? நமது சொற்களில் எதாவது சாதி பற்றிய புலன் இருக்கிறாதா?
நமது நிறம் அவர்களின் நிறமா? முக சாடையும், உடல்மொழியும் அவர்களின் சாதிக்குகந்ததா?
(புலன். ப.505.) சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வாழும் ஒவ்வொரு மனிதனும் பிற மனிதர்களுடன்
இணைந்து வாழும்போது தன்னைத் தானே ‘புலன் விசாரணை’ செய்து கொள்ளும் நிலை ஏற்படுகிறது.
இவையே கலகக் குரலாகவும் ஒலிக்கிறது.