மீள்பதிப்புக் குறிப்பு:
உலக இலக்கியப் பரப்பில் மனிதநேயத்தையும், பாசிச ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முற்போக்குச் சிந்தனைகளையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் ஒரு உன்னதமான ஜப்பானிய மொழிபெயர்ப்புக் கதை இது. ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டுப் போர்க்காலப் பின்னணியில், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த பெட்ரோ மற்றும் அவனது மனைவி ரிவ்கா ஆகியோரின் கொடூரமான மரணமும், அவர்களின் எஞ்சிய ஒரே மகனான 17 வயது வாலிபன் பிண்டோ அடக்குமுறைகளுக்கு எதிராகக் களம் புகுந்து தன் உயிரைத் தியாகம் செய்யும் தத்துவார்த்தப் போராட்டமும் இக்கதையில் மிக உருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. சவக்குழிக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பிறகும் அடங்காத அவனது வீரத்தின் குறியீடாக நீட்டிக்கொண்டிருக்கும் அவனது கையும், அதற்கு நிழல் தரும் அத்திமரக் கிளைகளும் வளைந்து கொடுக்காத மனித ஆற்றலின் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். கால ஓட்டத்தில் பழைய இதழ்களின் பக்கங்களுக்குள் சிதைந்து போகக்கூடிய இத்தகைய அரிய உலகத் தத்துவ இலக்கியப் படைப்புகளை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் நோக்கோடும், சர்வதேசக் கலை மற்றும் கல்வி ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.
அத்திப்பழங்கள்
(ஒரு ஜப்பானியக் கதை)
மேட்டின் மீது ஒரு பழங்கால கிராமம். அதனடியில் வரண்ட கானாறு தகிக்கும் வெய்யிலில் புல்லைத்தேடி ஒரு கழுதை அலைந்துகொண்டிருந்தது.
இழைக்கப்படாத கற்களால் கட்டப்பட்ட சிறிய வீட்டுக்குள் படுத்திருந்தான் பெட்ரோ. ஒரு காலத்தில் தாமிர-வர்ணமாகயிருந்த அவனுடைய முகம் இப்பொழுது தீய்ந்திருந்தது. அதில் வியர்வைத் துளிகள் மின்னிக்கொண்டிருந்தன.
”ரிவ்கா! ரிவ்கா!!... அடியே ரிவ்கா!!!"
புருஷனுடைய குரலைக்கேட்டும் ரிவ்கா பேசவில்லை. குப்புறப்படுத்திருந்தாள். அழுக்குப்படிந்த உருண்ட கெண்டைக்கால்களில் நீல நிற நரம்புகள் தடித்திருந்தன அவிழ்ந்து கிடந்த சிக்கு விழுந்த கூந்தலை சீப்பு தொட்டிருக்குமோ வென்பது சந்தேகந்தான். கையிலிருந்த காகித விசிறியால் முகத்தில் விசிறிக்கொண்டிருந்தாள்.
“அடியே ரிவ்கா! கேடு கெட்டவளே! கேட்கவில்லையா என்ன! விசிறியைக் கொடு! புழுக்கம் உயிரை வாங்குகிறது!”
ரிவ்கா லட்சியம் செய்யவில்லை. அவள் பாட்டில் விசிறிக்கொண்டிருந்தாள். அவளுடைய முகம் அழகாய்தானிருந்திருக்கும் இன்று வெளுத்திருந்தது. விசாலமான கண்களினடியில் குழிகள் விழுந்திருந்தன. வாலிபத்தில் மூப்பின் சாயல் படித்திருந்தாலும் லட்சணமாகவே இருந்தாள். பாதி மூடிய கண்களால் புருஷனை திரும்பிப் பார்த்தவள் திரும்பவும் பிரண்டு படுத்துக்கொண்டாள்.
“உன்னை பிராங்கோ குண்டர்கள் தூக்கிப்போக நாசமாய் போனவளே! ஜமீந்தார் நந்த வனத்தில் போய் தூங்கப்போகிறேன்”
பெட்ரோ படுக்கையைவிட்டு எழுந்தான். வேகாத வெய்யிலில் அவசர அவசரமாக நடந்து நந்தவனத்தையடைந்தான். பொட்டைத்திடல்; அதைச்சுற்றி மூன்றடி உயரமதில்; அதற்குள்ளே ஒரு ஆலிவ் புதர்; ஜமீந்தார் நந்தவனத்தில் மிஞ்சியிருந்தது அவ்வளவுதான். உள்நாட்டுச்சண்டையில் கொள்ளையடித்து தீக்கிரையான ஜமீந்தார் வீட்டுக் குட்டிச்சுவர் பக்கத்தில் நின்றது. மூதாதையரின் ஞாபகார்த்தத்தை பாதுகாப்பதில் ஜமீன்தாருக்கு அக்கரையில்லை. வருஷத்தில் இரு முறை வருவான். பகுதியை வசூலித்துக்கொண்டு மாட்ரிட் போய்விடுவான். மாட்ரிட் ஆடம்பரங்கள் அவனை வசீகரித்தன. கிராமத்தின் வறுமையும், தனிமையும் அவனை பயமுறுத்தின. ஜமீந்தாருடைய காவற்காரன் ஒரு கிழவன் தரித்திரன். ஆகையால் உள்நாட்டுச்சண்டையில் தப்பியிருந்த அவன் ஜமீன்வீட்டு நிலவறையில் படுத்திருந்தான்.
நொறுங்கிக்கிடந்த நந்தவனக்கதவு எச்சரித்துக் கொண்டிருந்தது. பெட்ரோ அதை லட்சியம் செய்யவில்லை. உலர்ந்த சருகுகள், வரண்ட தண்ணீர் தொட்டிகள், உடைந்துபோன நிர்வாணமான பெண் சிலை பெயர்ந்த தளவரிசை, எல்லாற்றையும் கடந்து ஆலிவ் புதரடியில் சென்றான். நிழல் அடர்த்தியாக இல்லாவிட்டாலும் ஆனந்தமாக இருந்தது. ஆலிவ் இலைகள் லேசாக அசைந்தன. ரிவ்கா விசிறுவதைப் போன்ற பிரம்மானந்தத்தில் புதரடியில் குரட்டை விட ஆரம்பித்தான் பெட்ரோ.
துப்பாக்கியை தாங்கிய மூன்று சிப்பாய்கள் நந்தவனத்துக்குள் நுழைந்தார்கள். போதை தலைக்கேறியிருந்தது. ஆலிவ் புதரடியில் மிச்சமிருந்ததையும் குடித்துவிட்டு பாட ஆரம்பித்தனர். காட்டுமிராட்டித்தனமான பாட்டு; பிராங்கோவின் புகழ்; தங்கள் ராணுவத்தின் பராக்கிரமம்; ஜனநாயகவாதிகளுக்கு வசவு; அதில் நிரம்பியிருந்தது. சிறிது நேரம் பாடியபிறகு துப்பாக்கிக் கட்டையால் படுத்திருந்த பெட்ரோவை இடித்தார்கள். பெட்ரோ திடுக்கிட்டு எழுந்தான்.
“நம்முடன் சேர்ந்து நீயும் பாடவேண்டும்?”
பெட்ரோ தயங்கினான்.
“பாடுகிறாயா, இல்லையா?”
“பாடுவேன்”
“பிறகு ஏன் பேசாமலிருக்கிறாய்!, பாடு!, பாடு!!”
“எனக்கு இந்தப்பாட்டு ஞாபகமில்லை நீங்கள் பாடுங்கள். நானும் கூடச்சேர்ந்து பாடுகிறேன்.”
“இல்லை நீயே பாடு. பாட்டு உனக்கு ஏன் ஞாபகமில்லை? நீ என்ன கம்யூனிஸ்டா?”
“என்னுடைய பெயர் பெட்ரோ நான் ஒரு ஏழை விவசாயி. என்னுடைய ஏழு பையன்கள் யுத்தத்துக்கு பலியாயினர். மூன்று பையன்கள் ஸ்பெயின் ஜனநாயக படையிலும் என் அன்புக்கு பாத்திரமாயிருந்த நான்கு பையன்கள் உங்களைப்போலவே பிராங்கோ படையிலும் சேர்ந்து உயிரை அர்ப்பணித்திருக்கின்றனர். இப்போது என்னிடம் ஒரே பையன் இருக்கிறான். சிறு பையன். பதினேழு வயதாகின்றது. என்னுடைய பிண்டோவுக்கு...”
“இல்லை நீ கம்யூனிஸ்டுதான்” ஒரு சிப்பாய் குற்றஞ் சாட்டினான்.
“நான் கம்யூனிஸ்டு அல்ல, நீங்கள் சொல்வது தவறு”
“யார் சொல்லுவது தவறு! நீயா? நாங்களா? சீக்கிரம் சொல்.” ஒரு சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் இடித்தான்.
“வேசிமகன்! கம்யூனிஸ்டுதான் இவனை மாஸ்கோ அனுப்புங்கள்” இரண்டாவது சிப்பாய் சொன்னான்.
“மாஸ்கோ போகிறாயா? அங்கு உண்ண உணவும், உடுக்கத் துணியும் வேலையும் கிடைக்கும்” மூன்றாவது சிப்பாய் கேட்டான்.
“அப்படியானால் நான் அவசியம் மாஸ்கோ போவேன்......” பெட்ரோவுக்கு கோபம் வந்தது.
“இவன் அவசியம் போவான்! சீக்கிரமாக இவனை அனுப்பவேண்டும்” சிப்பாய்கள் 'கொல்'லென்று சிரித்தார்கள்.
“எழுந்து நின்றுகொள்?” முதல் சிப்பாய் உத்திரவிட்டான்.
“எதற்காக?”
“நீ மாஸ்கோ போகவேண்டுமல்லவா? காலங் கடத்தாதே! சீக்கிரமாக எழுந்துநில்?”
பெட்ரோ எழுந்தான் பீதி கலந்த ஆச்சரியத்துடன் சிப்பாய்களின் முகத்தை நோக்கினான்.
“நந்தவனத்தின் வலது பக்கத்தில் மாஸ்கோ இருக்கின்றது. இடது பக்கத்தில் இருப்பது ஸ்பெயின். நீ மாஸ்கோ போக விரும்புகிறாய்? ஆகையால் மதிலைத் தாண்டிப் போய்விடு” இரண்டாவது சிப்பாய் நையாண்டி செய்தான்.
“நீங்கள் வேடிக்கை செய்கிறீர்கள்”
“போகிறாயா? அல்லது வேறு வழிகாட்டட்டுமா?” இரண்டாவது சிப்பாய் துப்பாக்கியை நீட்டினான். பெட்ரோ ஓடினான் மதிலை தாண்டும்போது மூன்றாவது சிப்பாயின் துப்பாக்கி குண்டு பாய்ந்தது மதிலுக்கு வெளியில் விழுந்த பெட்ரோ திரும்பவும் எழுந்திருக்கவில்லை.
வெடிசத்தம் மேட்டின் நாற்புறங்களிலும் எதிரொலித்தது. வெடிசத்தத்தைக் கேட்டு காவற்காரக் கிழவன் எழுந்து ஓடிவந்தான். ஆலிவ் புதரடியில் சிப்பாய்கள் சிரித்துக்கொண்டு நின்றார்கள்.
“என்ன நடந்தது” காவற்காரன் கேட்டான்.
“ஒன்றுமில்லை. ஒரு கம்யூனிஸ்டை மாஸ்கோ அனுப்பிவிட்டோம். அவ்வளவுதான்” சிப்பாய்கள் மேலும் சிரித்தார்கள்.
“அடபாவமே? இவன் பெட்ரோவாச்சே!” கிழவனுடைய உடல் நடுங்கிற்று.
“இவனுடைய வீடு எங்கே? தகவல் கொடுத்துவிடலாம்” ஒரு சிப்பாய் கேட்டான்.
“இவன் ஒரு விவசாயி இவனுடைய ஏழு பையன்கள் உள்நாட்டுச் சண்டையில் கொல்லப்பட்டுப் போனார்கள். எட்டாவது பையன் லவண்டிகளுக்குப்பின்னால் அலைந்து கொண்டிருக்கிறான்.
“எட்டாவது பையனுக்கு வயது?”
“பதினேழிருக்கும். பெட்ரோ மத்தியான வேளையில் இங்கு படுக்க வருவான். இனி இங்கு வரமாட்டான். நான் ரிவ்காவுக்குப் போய் தெரிவிக்கிறேன்” கிழவன் பரிதாபத்துடன் தலையை அசைத்தான்.
“ரிவ்காவா? அவள் யார்?” ஒரு சிப்பாய் விசாரித்தான்.
“பெட்ரோவின் மனைவி”
முதல் சிப்பாய் அர்த்த புஷ்டியுடன் தன் சகாக்களை நோக்கினான்.
“நீ போகவேண்டாம். நாங்களேபோய் அறிவிக்கிறோம். இவனுடைய வீடு எது?” கிழவன் பேசாமலிருந்தான்.
“காட்டுகிறாயா? இல்லையா?” துப்பாக்கி குழாய் கிழவனுடைய நெஞ்சில் பதிந்தது.
“அதோ எதிரிலுள்ள மேட்டின் மீது இருக்கிறது” கிழவன் உளரினான்.
ஃ ஃ ஃ
காதலியைப்பார்க்க பக்கத்து கிராமத்துக்குப் போயிருந்தான் பிண்டோ. அவன் அழகன் அந்தப் பக்கத்து பெண்கள் அனைவரையும் அறிவான். அழகாக நாட்டியமாடுவான். ஆகையால் அவனை பெண்கள் அனைவரும் விரும்புவதுண்டு. மாரியா அவனுடைய காதலி. நல்ல அழகி. அவளும் நன்றாக ஆடுவாள்! இருவரும் மாதா கோவில் நந்தவனத்தில் திராட்சைக் கொடியில் உட்கார்ந்திருந்தனர். பிண்டோவின் வலக்கரம் மாரியாவின் இடுப்பைச் சுற்றியிருந்தது. அவள்கண்கள் பிரகாசித்தன. அவளுடைய அத்திப்பழ நிறத்துடன் சுவர்ணடால் கலந்து வீசிற்று.
“கொடி அறுந்து விழுந்தால் மாதாகோவில் பாதிரிபார்த்துவிடுவான் பிறகு ஆபத்துதான்” மாரியா சொன்னாள்.
“ஆபத்து என்ன வரப்போகிறது?”
“என்னை முறைக்க முறைக்கப் பார்க்கிறான். கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் என்னைக் கண்டுவிட்டால் கண்களை அப்படி இப்படி திருப்பவேமாட்டான்.”
“உன்னை காதலிக்கிறான்போலிருக்கு! பயல் சாகத்துணிந்து விட்டானா என்ன?”
மாரியா குறும்புத்தனமாகப் பிண்டோவை நோக்கினாள். இருவரும் ஆனந்த உலகில் சஞ்சரித்தனர்.
“கலியாணத்துக்குப்பிறகு நாம் கோழிகளை வளர்ப்போம். எனக்குக் கோழிக்குஞ்சுகள் ரொம்பப்பிடிக்கும்” பிண்டோ கூறினான்.
“நான் வீட்டுக் கொல்லையில் வெள்ளரிக்காய் பயிரிடுவேன். எனக்கு ஏழு குழந்தைகள் பிறக்கும்.”
“ஏழு போதாது நாம் எட்டு பேர் இருந்தோம். இன்று நான் ஒருவன்தான் இருக்கிறேன். குறைந்தது பதினோரு குழந்தைகளாவது வேண்டும் யுத்தத்தில் போனது போக நான்கு பேராவது மிஞ்சமுடியும்”
“இல்லை! ஏழு குழந்தைகளே போதும். நமக்கு யுத்தம் வேண்டாம். பட்டாளத்துக்கு ஆள் சேர்க்க வந்தால் நாம் ஒளிந்துகொள்வோம். சின்னஞ்சிறு வீட்டில் குழந்தைகளுடன் நாம் இருப்போம்.” மாரியா பிடிவாதம் செய்தாள்.
“என்னுடைய கோழிக்குஞ்சுகள்? பக்கத்திலே வயல்; பரந்த நீலவானம். ஸ்பெயின் தேசத்து அழகே அலாதி! வேறு எங்குமே இப்படியிருக்க முடியாது.”
“நம்முடைய தேசத்து ஆகாயத்தைப்போல் உலகத்திலேயே கிடையாது” மாரியா தீர்மானமாகச் சொன்னாள்.
இருவரும் வருங்காலக் கனவு உலகத்தில் லயித்து சிறிது நேரம் பேசாமலிருந்தனர்.
“நான்போக வேண்டும் நேரமாய்விட்டது” மாரியா மௌனத்தைக் கலைத்தாள்.
“அதற்குள்ளாகவா? முடியாது” பிண்டோ அவளை பிடித்துக்கொண்டான்.
“இல்லை நான் போகவேண்டும் நாளை உங்களுக்கு விருந்து. நடனமும் உண்டு. வருவீர்களல்லவா?”
இருவரும் பிரிந்து சென்றார்கள். மானைப்போல துள்ளிக்குதித்து மாரியா மாயமாய் மறைந்தாள்.
மாலையில் பெட்ரோவின் எட்டாவது மகன் அழகாகப்பாடிக்கொண்டே வீடு திரும்பினான் தகப்பனுடைய பிணத்துக்குப் பக்கத்தில் நிர்வாணமாய்க் கிடந்தது தாயின் சடலம் மிருக இச்சையைத் தீர்த்துக்கொண்டு சிப்பாய்கள் அவளைக்கொலை செய்துவிட்டுப் போயிருந்தனர். எட்டுப் பிள்ளைகளைப் பெற்ற தாய் நிர்வாணமாய் இறந்து கிடந்தாள் அவளுடைய மார்பில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்திருந்தது பக்கத்தில் கிடந்த கிழிந்த கந்தையால் பிண்டோ தாயின் பிணத்தை மூடினான்.
காவற்காரக் கிழவன் உள்ளே வந்தான் “உன் தகப்பனை பிராங்கோ சிப்பாய்கள் கொன்று விட்டு என்னிடம் வீட்டை விசாரித்தார்கள்” கிழவன் சொன்னான்.
பிண்டோ வாய் திறக்கவில்லை.
“பிணங்களை அடக்கம் செய்ய கிராமவாசிகளை அழைத்து வருகிறேன்”
ஆத்திரத்துடன் காரித்துப்பிவிட்டு வீட்டுக்கு வெளியே ஓடிவிட்டான் பிண்டோ. கிழவன் எவ்வளவோ கத்தியும் திரும்பியும் பார்க்காமல் போய்விட்டான்.
ஃ ஃ ஃ
ஆறு மாதங்கள் கழிந்தன. பிண்டோ மாட்ரிட் நகரில் கைது செய்யப்பட்டான். ரிவால்வர், பிரென் துப்பாக்கிகள், கைக்குண்டுகள் அவனிடமிருந்து கைப்பற்றப்பட்டன. தலைமறைவாய் பயங்கர இயக்கத்தில் ஈடுபட்டிருந்த கம்யூனிஸ்டுகளுக்கு ஆயுதங்கள் கடத்துவதில் ஈடுபட்டிருந்தான்.
சார்ஜண்ட் மார்காஸ் கஜகர்ணம் போட்டுப் பார்த்துவிட்டான். எவ்வளவோ சித்திரவதையும் செய்தான் பிண்டோ அசையவில்லை. தன்னுடைய சகாக்கள் பற்றி ஒரு வார்த்தையும் அவன் சொல்லவில்லை.
மார்காஸ் ஒரு பணக்காரனுடைய மகன். அழகிய வாலிபன். லார்ட் கிச்னர் போல் முறுக்கு மீசைக்காரன். அவனுடைய தகப்பன் அவனை மாதா கோவிலில் சேர்க்க எண்ணினான். ஸ்பெயின் தேசத்தில் அதற்கு மதிப்பு அதிகம். ஸ்திரீகள் லோலனாக இருந்த மார்காஸ் மாட்ரிட்டில் உள்ள வேசிகளை விரும்பினான். ராணுவத்தில் சேர்ந்தால் தன்னுடைய ஆசையைத் தீர்த்துக்கொள்ள முடியுமென்று நம்பி ராணுவத்தில் சேர்ந்தான். எத்தனையோ உபாயங்களைக் கையாண்டும் பிண்டோவிடமிருந்து விஷயத்தைக் கிரகிக்க அவனால் முடியவில்லை.
மார்காஸ் அவசரத்திலிருந்தான். மாலையில் காதலியை அழைத்துக்கொண்டு படம் பார்க்கப் போக வேண்டியிருந்தது. வாலிபனோ மசிவதாகத் தெரியவில்லை. அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டான் மார்க்காஸ்.
“பதினைந்து நிமிஷங்கள் தருகிறேன். அதற்குள் உள்ளதைக் கக்கிவிடு. இல்லாவிட்டால் உன்னை மாஸ்கோ அனுப்பிவிடுவேன்.”
பிண்டோ பேசவில்லை.
மார்காஸ் கெடிகாரத்தை எடுத்து முன்னால் வைத்துக்கொண்டு சிப்பாய்களுக்கு சமிக்ஞை செய்தான். இப்பொழுதெல்லாம் ஸ்பெயினில் கம்யூனிஸ்டுகளை உயிருடன் புதைப்பதே வழக்கமாகப் போய்விட்டது. மார்காஸும் அதையே செய்தாக வேண்டும் வெளியில் சிப்பாய்கள் குழி தோண்டிக் கொண்டிருந்தனர். மார்காஸுக்கு அவசரம் தாங்கவில்லை.
“பன்றி மகன்களா! சீக்கிரம் தோண்டுங்களடா குழியை?” மார்க்காஸ் சிப்பாய்களை நையப்புடைத்தான்.
சவக்குழி தோண்டியாயிற்று. பிண்டோ அதில் நிறுத்தப்பட்டான்.
“இன்னும் தப்பமுடியும். காலங்கடந்துவிடவில்லை, உண்மையைக் கக்கிவிடு”
பிண்டோ மெளனம் சாதித்தான். சிப்பாய்கள் இடுப்புவரை மண்ணைத் தள்ளி மூடினர்.
“சொல்லு. நீ யாருக்காக ஆயுதங்கள் கடத்தினாய். அந்த கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சொல்லிவிடு. உன்னை விடுதலை செய்துவிடுவேன் வயதாகாவிட்டாலும் பரவாயில்லை. உனக்கு போலீசில் நல்ல உத்தியோகம் வாங்கிக் கொடுப்பேன்.”
பிண்டோ ஒன்றுமே பேசவில்லை. நெஞ்சு வரை மண் தள்ளியாயிற்று.
“இந்த சிறுவயதில் இறப்பதால் என்ன பயன்? சமுத்திரக்கரையிலே அழகான ஒரு ஊரில் இழைக்கப்பட்ட கற்களால் கட்டப்பட்ட சிறியதொரு வீடு; அதை சுற்றி அத்தி மரங்கள், திராட்சைக்கொடிகள், ரோஜாச்செடிகள், வாசலில் மான் போல் துள்ளிக் குதித்து ஓடும் அழகிய மனைவி.......... சொல்லு; இதையெல்லாம் விட்டு ஒரு கம்யூனிஸ்டு நாய் போல் சாக ஏன் ஆசைப்படுகிறாய்?”
தலைக்குமேல் அசைந்துகொண்டிருந்த அத்திக்கிளைகளையும் அதற்கு மேலிருந்த பரந்த நீல நிற வானத்தையும் கழுத்துவரை புதைந்திருந்த பிண்டோ அண்ணாந்து பார்த்தான். அழகான சிறிய வீடு, பக்கத்திலே தோட்டம், மேயும் கோழிக்குஞ்சுகள் ஏழு இல்லை! பதினோறு இல்லை! ஏழு பையன்கள், மயிலினையொத்த மாரியா எல்லாமே நினைவுக்கு வந்தன. கண்ணீர் வழிந்தோடியது தலை கவிழ்ந்தான் பிண்டோ.
“சீக்கிரம் சொல்லிவிடு” என்றான் மார்க்காஸ்.
பக்கத்தில் வரும்படி பிண்டோ அழைத்தான்.
மார்க்காஸ் அவனுக்கு முன்னால் வந்து உட்கார்ந்தான்.
“சபாஷ்! சீக்கிரம் சொல்லிவிடு. நான் அவசரமாய் போகவேண்டும். மார்ஷல் பிராங்கோவிடமிருந்து தங்கப் பதக்கம் வாங்கித்தருவேன். அவர் நேரில் உன்னுடன் கை குலுக்குவார்.” மார்காஸ் ஆசை காட்டினான்.
பிண்டோ அவனுடைய முகத்தில் காரி உமிழ்ந்துவிட்டான். ஆத்திரங்கொண்ட மார்க்காஸ் ஈவிரக்கமின்றி பூட்ஸ் காலால் மாறி மாறி உதைத்தான் பிண்டோவின் முகத்திலிருந்து ரத்தம் பீறிட்டு ஓடியது. ஊன்முகமும் லாடம் தைத்த ராணுவ பூட்ஸும்...!
“சீக்கிரமாக மண்ணைத் தள்ளி மூடுங்கள். உடனே மாஸ்கோ போகட்டும்”
சிப்பாய்கள் மண்ணைத் தள்ளினார்கள். பிண்டோ கழுத்து வரையில் புதைந்தான், மார்க்காஸ் மனதில் ஒரு புதிய யோசனை உதித்தது. சிரித்தான்.
“நிறுத்துங்கள், வேசி மகன்களை உயிருடன் புதைப்பதில் ஒரு புதிய முறையைக் கையாள்வோம். அவனுடைய ஒரு கையை வெளியில் எடுத்துவிட்டு அவனைப் புதைத்துவிடுங்கள். சவக்குழிக்கு வெளியே அவனுடைய கை நீட்டிக்கொண்டிருக்கட்டும். ஜனங்களுக்கு அது ஒரு படிப்பினையாக இருக்கும்” மார்க்காஸ் உத்திரவிட்டான்.
பிண்டோ உயிருடன் புதைக்கப்பட்டான். வெளியே நீட்டிக்கொண்டிருந்த அவனுடைய கை சிறிது நேரம் நடுங்கி பிறகு ஓய்ந்து விட்டது.
மார்க்காஸ் கொலம்பஸ் ஹோட்டலில் தனக்காகக் காத்துக்கொண்டிருந்த காதலியைக் சந்திக்கச் சென்றுவிட்டான்.
அத்தி மரத்தடியில் புதிய சமாதியை ஆயிரக்கணக்கான ஜனங்கள் மாலையில் பார்த்தனர். அதன் நடுவே வாலிபக் கையொன்று நீட்டிக்கொண்டிருந்தது, அழகிய செடியைப்போல. முறியடிக்கப்பட முடியாத உறுதிக்கு எடுத்துக்காட்டாக; வளைந்து கொடுக்காத கல்தூண்போல அந்தக்கை நிமிர்ந்திருந்தது. பழுத்த அத்திப்பழம்போல் இறுக மூடப்பட்டிருந்த முஷ்டிக்கு அத்திக்கிளைகள் நிழல் கொடுத்துதவின. பச்சை நிற தழைகளுக்கு நடுவே பழுத்து சிவந்திருந்த அத்திப்பழங்கள் சிரிப்பதுபோல் காட்சியளித்தன.
(குறிப்பு: 1948-ஆம் ஆண்டின் அச்சுப் பதிப்பில் உள்ள 'வெய்யில்', 'கலியாணம்', 'உத்திரவு', 'கெடிகாரம்' போன்ற அக்கால தமிழ் மற்றும் வடமொழி எழுத்துக்கூட்டல்கள் மாற்றமின்றி அப்படியே தரப்பட்டுள்ளன).
இந்த 1948 டிசம்பர் இதழில் உள்ள மற்ற பகுதிகள் ஏதேனும் உங்களுக்குத் தேவைப்படுகிறதா, அல்லது வேறு ஏதேனும் தலைப்பில் உதவி வேண்டுமா?
