மீள்பதிப்புக் குறிப்பு:
இந்திய விடுதலை மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிந்தைய 1948-ஆம் ஆண்டின் தொடக்கக் காலத் தமிழக அரசியல் நகர்வுகளையும், சமுதாய விவாதங்களையும் துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கிய வரலாற்றுப் பதிவு. 1948-இல் வெளியான 'ஆஸாத்' இதழில் இடம்பெற்ற இக்கட்டுரை, தந்தை பெரியாரின் திராவிட நாடு கொள்கை, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் கருஞ்சட்டை இயக்கத்தின் பகுத்தறிவுச் செயல்பாடுகள் குறித்து அன்றைய தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே நிலவிய மாற்றுப் பார்வைகளையும், எச்சரிக்கை உணர்வுகளையும் மிக விரிவாக விவரிக்கிறது. கால ஓட்டத்தில் பழைய இதழ்களின் பக்கங்களுக்குள் சிதைந்து போகக்கூடிய இத்தகைய அரிய வரலாற்றுச் சமகாலப் பதிவுகளை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்து, விடுதலைக் காலத் தமிழகத்தின் பன்முக அரசியல் சிந்தனைகளை நடுநிலையோடு ஆராயும் நோக்கோடும், கல்வி ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.
'இஸ்லாமுக்கு ஆபத்து ' ' ஹிந்து மெஜாரிடி ஆதிக்கம் ' 'பாகிஸ்தான் இல்லையேல் கபரஸ்தான் இஸ்லாமியம் வாழ்க! என்ற கூச்சல்களின் பயங்கர விளைவுகளைப் பார்த்தபிறகு 'தமிழுக்கு ஆபத்து' 'வடநாட்டு ஆதிக்கம்' ' திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு திராவிடம் வாழ்க' என்ற கோஷங்களின் விளைவுகள் என்னவாயிருக்குமென்று சுலபமாய் யூகிக்கலாம் இரண்டு கூச்சல்களுக்கும் அதிக வித்தியாசமில்லை.
தமிழ் நாட்டில் ஒரு சிறு கூட்டம் ஹிந்தி ஒழிக! வடநாட்டு ஆதிக்கம் ஒழிக ! தமிழ் வாழ்க? தனித் திராவிட நாடு வாழ்க! என்று கூச்சலிட ஆரம்பித்திருக்கிறது. அன்று லீக் மேடைகளில் பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரித்துப் பேசியவர்கள் இன்று திராவிடஸ்தான் கேட்கின்றனர். முஸ்லிம் லீக் அனுசரித்த முறைகளை அனுசரிக்கின்றனர். ஹிந்து முஸ்லிம் வேற்றுமைக்கு பதிலாக ஆரிய திராவிட வெறுப்பைத் தூண்டுகின்றனர். என்னதான் செய்தாலும் நாட்டைக் கூறு போட இன்று ஆங்கிலேயன் இல்லை திராவிடஸ்தான் கனவு நனவாகப்போவதில்லை.
கேரள, கன்னட, ஆந்திர ஜில்லாக்கள் உள்பட திராவிடநாடு அமைய வேண்டுமென்று தோழர்கள் கேட்கின்றனர் ஆனால் கேரள, கன்னட, ஆந்திர மக்களுக்கு திராவிட இயக்கமென்றால் என்னவென்று கூட தெரியாது. அவர்கள், ஆதரிக்கவும் தயாராயில்லை. விரல்விட்டு எண்ணிவிடத்தக்க ஒரு சிலரைத் தவிர தமிழர்களும் திராவிடநாட்டுக் கோரிக்கையை எதிர்க்கின்றனர். பாகிஸ்தான் பெயரால் லீக்கர்கள் மயங்கியதுபோல் திராவிடஸ்தான் பெயரால் தென்னாட்டு ஹிந்துக்கள் மயங்கவில்லை, இது தோழர்களுக்கே நன்றாகத் தெரியும். ஆகையால் தமிழ்நாட்டு பாமர முஸ்லிம்களுக்கு கருப்புச்சட்டை அணிவித்து தங்களுடன் சேர்த்துக்கொள்ள முயலுகின்றனர். அவர்களுடைய வலையில் சிக்காமல் முஸ்லிம்கள் புத்திசாலித்தனமாய் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ஒரு முறை பாகிஸ்தானை ஆதரித்து அனுபவித்த இன்னல்களுக்கு பிறகு இந்திய முஸ்லிம்கள் மீண்டுமொரு முறை திராவிடஸ்தானை ஆதரிக்கமாட்டார்கள். இரண்டாகப்பிரிந்த முஸ்லிம் சமூகம் மூன்றாகப் பிரிவதால் அழிவே ஏற்படும். பத்து கோடி முஸ்லிம்களை இரண்டாக வெட்டியாயிற்று. இந்தியாவிலுள்ள நாலரை கோடி முஸ்லிம்களையும் வெட்டுவதா?
'முஸ்லிம்கள் முற்றிலும் வேறுபட்ட சமுதாயத்தினர்' என்று மிஸ்டர் ஜின்னா வாதித்தார். அதற்கு ஒத்துப்பாடியவர்கள் இன்று 'முஸ்லிம்களும் திராவிடர்கள்தான்' என்று வாய் கூசாமல் பேசுகின்றனர். முன்னுக்குப்பின் இவ்வளவு முரண்பட்டுப் பேசுபவர்களை நம்ப முடியுமா ? திராவிடஸ்தான் அடைந்த பிறகு தனி சமுதாய அடிப்படையில் வாங்கிய உங்கள் பாகிஸ்தானுக்கு போங்களென்று சொல்லமாட்டார்களென்பது என்ன நிச்சயம்? 'மதமென்றால் மடமை, கடவுளென்றால் பித்தலாட்டம்' என்று பேசுபவர்களுடன் மதத்துக்காக எதையும் செய்யத் தயாராயிருப்பவர்கள் கூடி சமாதானமாய் வாழத்தான் முடியுமா?
நாட்டின் பெரும்பான்மை மக்களால் கௌரவிக்கப்படும் ராமாயணத்துக்கு பஹிரங்கமாய் நெருப்பு வைத்து பொசுக்குபவர்கள் திராவிடஸ்தானில் நூற்றுக்கு ஆறு பேராக இருக்கப்போகும் முஸ்லிம்களின் வேதத்தை கொளுத்தமாட்டார்களா? புத்தியுள்ள எந்த ஒரு தமிழ்நாட்டு முஸ்லிமும் இவர்களை ஆதரிக்க முடியாது.
ஹிந்தி ஒழிக! என்று கோஷிக்கின்றனர். பாஷை புனிதமானது. தெய்வீகத்தன்மை வாய்ந்தது. இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பாஷையை ஒழிக என்று சொல்லுவது பாபம். ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்திலும் முஸ்லிம்கள் பங்கெடுத்துக்கொள்வதற்கில்லை. அன்று ஆங்கிலத்தை பகிஷ்கரித்ததன் மூலம் முஸ்லிம்கள் பெரும் நஷ்டத்துக்காளாகி யிருக்கின்றனர்: இன்று ஹிந்தியை பகிஷ்கரித்து மேலும் நஷ்டமடைவது புத்திசாலித்தனமான செய்கையல்ல. முஸ்லிம்கள் ஹிந்தி கற்பதில் மற்றவர்களைவிட முந்திக்கொள்ள வேண்டும்.
ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழ வேண்டுமென்று சொன்ன பாவத்துக்காக காங்கிரஸ் முஸ்லிம்களை பகிஷ்கரித்த லீகர்கள் இன்று 'மதமென்றால் மடமை' என்றும் 'கடவுளென்றால் பித்தலாட்டம்' என்றும் பேசுபவர்களின் கட்சியில் சேரும் ஒரு சில முஸ்லிம்களைக் குறித்து என்ன முடிவு செய்யப்போகின்றனர்?
கடந்த காலத்தவறுகளை உணர்ந்து நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நல்லறிவு ஆண்டவன் முஸ்லிம்களுக்கு அளிப்பாராக !
நன்றி
ஆஸாத் இதழ்(Vol_1_37_1948)
