மீள்பதிப்புக் குறிப்பு:
இந்திய விடுதலைக்குப் பிறகான 1948-ஆம் ஆண்டின் தொடக்கக் காலகட்டத்தில், நாட்டில் நிலவிய அரசியல் சூழல்களையும் பல்வேறு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து எழுந்த விவாதங்களையும் பிரதிபலிக்கும் ஒரு அரிய வரலாற்று ஆவணப் பதிவு இது. 1948 டிசம்பர் 20 தேதியிட்ட 'ஆஸாத்' வாரப் பத்திரிகையில் வெளியான இக்கட்டுரை, டெல்லி வார்டு எண். 1 காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி வெளியிட்ட 'எச்சரிக்கை' பிரசுரத்தை அடிப்படையாகக் கொண்டு, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் (RSS) தொடக்க கால நோக்கங்கள் மற்றும் நாசிசக் கொள்கைகளின் தாக்கம் குறித்த அன்றைய விமரிசனப் பார்வைகளை விவரிக்கிறது. கால ஓட்டத்தில் பழைய இதழ்களின் பக்கங்களுக்குள் சிதைந்து போகக்கூடிய இத்தகைய அரிய சமகால அரசியல் பதிவுகளையும் பிரசுரங்களையும் இன்றைய இணையத் தலைமுறையினர் படித்து, சுதந்திர இந்தியாவின் பன்முக வரலாற்று நகர்வுகளை நடுநிலையோடு ஆராயும் நோக்கோடும், கல்வி ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.
ஆர். எஸ். எஸ். ஸ்தாபகருக்கு ஹிட்லர் ஆலோசனை
(இந்தியாவில் நாஜிஸம்)
(1948-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ல் வெளியான "ஆஸாத்" வாரப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள கட்டுரை)
"படம்: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வப் 'பகவா த்வஜ்' சின்னம். (கல்வி, வரலாற்று ஆவணம் மற்றும் விமர்சன ஆய்வு நோக்கத்திற்காக மட்டுமே இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது)."
டெல்லி நெ. 1. வார்டு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசி வெளியிட்டிருக்கும் 'எச்சரிக்கை' என்ற பிரசுரத்தில் ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் நோக்கங்களையும் உண்மை சொரூபத்தையும் எடுத்துக்காட்டியிருக்கிறார். அதை அப்படியே சமர்ப்பிக்கிறோம்.
நண்பர்களே ! ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தினரால் வெளியிடப்பட்ட "நவேதன்' என்ற பிரசுரத்தைக் கண்டேன். பாட்டியாலாவின் ஏதோ வொரு இடத்தில் இப்பிரசுரம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதை கூர்ந்து படித்தேன். சங்கத்தை நான் நன்கு அறிவேன். 1941, 1942 வருஷங்களில் சங்கத்தின் அங்கத்தினனாயிருந்தேன். ஆகையால் சங்கத்தின் அந்தரங்க, பஹிரங்க நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமின்றி எனக்குத்தெரியும். சங்கத்தின் அறிக்கைகள் நோக்கங்கள், தத்துவங்கள் நன்றாக அறிந்திருக்கிறேன். 1946-க்கு பிறகு சங்கத்தின் நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்திருக்கிறேன். ஆகையால் அதன் அந்தரங்கத்தையும் ரகசியங்களையும் பொது மக்களுக்கும், சர்க்காருக்கும் அறிவிப்பதற்கு அதனுடைய துரோகத்தையும் உண்மையான சொரூபத்தையும் எடுத்துக் காட்ட இப் பிரசுரத்தை வெளியிடுவது என் கடமை.
1925-ல் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. அதன் தலைமைக் காரியாலயம் நாகபுரியில் அமைக்கப்பட்டது. எனக்குத் தெரிந்தவரை ஜெர்மனிக்குச்சென்று சங்க ஸ்தாபகர் ஹிட்லரை சந்தித்தார். "வகுப்புக் கலவரங்கள் பெருமளவில் மூண்டாலன்றி இந்தியா விடுதலை பெற முடியாது" என்று ஹிட்லர் சங்க ஸ்தாபகருக்கு ஆலோசனை கூறினார் (அதுவரை சங்க ஸ்தாபகர் காங்கிரஸ் அங்கத்தினராக இருந்தார். காங்கிரஸின் போக்குப் பிடிக்காமல் காங்கிரஸைவிட்டு வெளியேறினார்.) ஜெர்மனியில் தங்கி யிருந்தபோது நாஜி முறைகளை கற்றுக்கொண்டார். (சங்க ஸ்தாபகரைப் பற்றிய விபரங்கள் ஹிட்லரின் சுய சரித்திரத்திலும் காண முடியும்.) இந்தியாவுக்கு திரும்பி வந்தபோது அவருடைய சிந்தனையில் கீழ்வரும் மூன்று நோக்கங்கள் இருந்தன.
- யூதர்களை ஜெர்மனியிலிருந்து வெளியேற்ற நாஜிக்கட்சி கையாண்ட முறைகள்.
- ஒவ்வொரு ஹிந்துவுக்கும் ரகசிய ராணுவ பயிற்சி யளிக்கவேண்டிய அவசியம்.
- வாலிபத்தில் புகுத்தப்பட்ட எண்ணங்கள் நீடித்திருக்குமென்ற மனோ தத்துவ சாஸ்திரிகளின் முடிவை யொட்டி பாலர்களையும் வாலிபர்களையும் வசப்படுத்துவது.
மேற்கூறிய மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ரா. சு. சே. சங்கம் இந்தியாவில் தோன்றிற்று.
1946 வரை சங்கத்தின் எல்லா நடவடிக்கைகளும் ரகசியமாகவே இருந்துவந்தன. சங்கத்துக்கு வெளியே சங்கத்தைப் பற்றி ஒருவரிடமும் பேசக் கூடாதென்றும் சங்கத்தில் கொடுக்கப்படும் பயிற்சி வெளியாருக்குத் தெரியாமலிருக்க வேண்டுமென்றும் அங்கத்தினர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருந்தார்கள். வருடம் இருமுறை பல்வேறு இடங்களில் சங்கத்தின் பயிற்சி முகாம்களில் பயிற்சி அளிக்கப்படும். நாற்பது நாள் பயிற்சிக்கு ஓ டி. ஸி. என்றும் ஏழு நாள் பயிற்சிக்கு ஐ. டி. பி. என்றும் பெயர். பயிற்சி முகாம்களில் ஹிந்து வாலிபர்களுக்கு ராணுவ பயிற்சியும் கத்தி, கட்டாரி, ஈட்டி, தடி முதலிய ஆயுதங்களைக் கொண்டு சண்டை செய்யும் முறைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன. அத்துடன் பயிற்சி முகாம்களில் கௌரவ, பாண்டவ யுத்தம் நடத்துவதன் மூலமும் பயிற்சியளிக்கப்பட்டது.
பயிற்சி முகாம்கள் பெரும்பாலும் மறைவான ரகசியமான இடங்களில்தான் ஏற்படுத்தப்பட்டன. வாலிபர்களுக்கும் பாலர்களுக்கும் சதா வகுப்புவாத விஷம் ஊட்டப்பட்டு வந்தது. சிவாஜி மீது ஔரங்கசீப்பின் மகளான ஜயபுன்னிஸா வின் காதல், செஞ்சல் குமாரியின் வரலாறு, சிவாஜி பைராகி, குரு கோவிந்தசிங்ஜி, மஹாராணாபிரதாப் முதலியவர்களைப் பற்றிய கட்டுக்கதைகள் அவர்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தன. முஸல்மான்கள் ஹிந்துக்களை சொல்லொணாத் துன்பங்களுக்காக்கினார்கள் என்று கதைத்து வாலிபர்களின் உள்ளங்களைக் கெடுத்து வகுப்புவாத மயக்க மருந்தைக் கொடுத்துவந்தார்கள். அதன் பயனாக முஸ்லிம் என்று கேட்ட மாத்திரத்தில் சேவக சங்கத்தைச் சேர்ந்த வாலிபர்கள் ஆத்திரமும் வெறுப்பும் கொள்வதை இன்று கண்கூடாகப் பார்க்கிறோம். சங்கத்தின் எல்லா நடவடிக்கைகளும் அந்தரங்கமாகவே நடக்கும். உத்திரவுகளும் சுற்றறிக்கைகளும் வாய் மூலமாகவே வெளிவரும். உத்திரவுகளையும், சுற்றறிக்கைகளையும் இன்னார் இன்னாருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று சங்க சேவகர்கள் நியமிக்கப்படுவர்.
சங்க அங்கத்தினர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியிலும், குறிப்பாக காங்கிரஸிலும் சேரக்கூடா தென்று தடை செய்யப்பட்டனர். ஆனால் ஹிந்துமகாசபை போன்ற வகுப்புவாத ஹிந்து மத ஸ்தாபனங்களில் கலந்துகொள்ளவேண்டுமென்று கட்டளையிடப் பட்டனர். டில்லி தேர்தலின்போது புரொபஸர் ஸிங் சார்பில் சேவக் சங்க தொண்டர்கள் பிரசார வேலையில் ஈடுபட்டிருந்தது அனைவருக்கும் தெரியும்.
கடைசியாக சங்க நடவடிக்கைகள் அனைத்தும் பாஸீஸ முறைபிலேயே இருந்தன. ஹிந்துக்களுக்கு பிரதிநிதித்துவம் வகிப்பதாக நினைத்து பாஸீஸ முறைகளை எதிர்த்தவர்கள் விஷயத்தில் பலாத்காரம் உபயோகிக்கப்பட்டது. 1947-ல் நடந்த ஹிந்து முஸ்லிம் கலவரங்கள் திட்டமிட்டு நடந்ததை நாம் பார்த்தோம். அது ரா. சு. சே. சங்கம் வகுத்த திட்டமென்பதையும் நாம் அறிவோம். டில்லி அமைதியாயிருந்தபோதே முஸ்லிம்கள் சண்டை செய்யத் தயாராய் இருக்கிறார்களென்றும் ஹிந்துக்களை அழித்துவிடுவார்களென்றும் சங்கத்தினர் தவறான பிரசாரம் செய்தது அனைவருக்கும் தெரியும். அதை எதிர்த்துப் பிரசாரம் செய்த ஹிந்து சமாதானப்பிரியர்கள் பலாத்காரத்துக்கு ஆளானார்கள், அவர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்துவருவதற்கும் முடியாமல்போயிற்று. கலவரங்களின் போது குண்டர்களின் முன்னணியில் துப்பாக்கி முதலிய பயங்கர ஆயுதங்களுடன் சங்க ஊழியர்கள் காட்சியளித்ததைக் கண்டோம். சிப்பாய்களைப்போல் காக்கி உடை தரித்து முஸ்லிம் பிரதேசங்களை சங்க ஊழியர்கள் சுற்றிவளைத்துக் கொண்டதும் எல்லோருக்கும் தெரியும். பெருமளவில் இவர்களிடம் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன என்று நினைக்கும் போது நமக்கு ஆச்சரியமாயிருக்கின்றது. ரஜபுத்திர சமஸ்தானங்களிலிருந்து ஆயுதங்கள் கிடைத்துவந்தனவென்று இப்பொழுதுதான் தெரியவருகிறது. இந்திய விடுதலைக்குப்பிறகு தேசீயத் தலைவர்களையும் குறிப்பாக மகாத்மா காந்திஜியையும் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பகிரங்கமாக திட்டிக் கொண்டிருந்ததை மக்கள் கேட்டிருக்கின்றனர்.
ஆகஸ்ட் 15-ந் தேதி டில்லியின் ஒரு தெருவில் மூவர்ணக்கொடி ஏற்றப்படவிருந்ததை எதிர்த்துகலகம் செய்யப் போவதாக பயமுறுத்தி சங்க ஊழியர்கள் அங்கு ஹிந்து ராஷ்டிரீயக்கொடி ஏற்றிவைக்கப்போவதாகச்சொன்னார்கள். போலீஸ் உதவியுடன் காங்கிரஸ்காரர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றவேண்டியிருந்தது.
காந்திஜி கொல்லப்பட்ட சேதியைக்கேட்டு சந்தோஷத்தால் பூரிப்படைந்த சங்கத்தினரை கண்ணாரக் கண்டிருக்கிறோம். 1948 பிப்ரவரி மீ 2-ந்தேதி அவர்களுக்குள் இனிப்புப் பண்டங்கள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளையெல்லாம் கண்டபிறகும் ராஷ்டிரீய சுயம் சேவக் சங்கத்தை ஒரு பாஸிஸ்ட் ரகசிய ராணுவமென்று சொல்லாமலிருக்க முடியாது. சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பாஸிஸ முறைகளை பின்பற்றுகின்றனர். இந்த உண்மைகளை முன்வைத்து சங்கத்தின் மீதுள்ள தடையை நீக்குவது மத அடிப்படையற்ற சர்க்காருக்குப் பொருந்துமா? காங்கிரஸ் அழிந்துவிடாதா? இந்தியா அழிவைநோக்கி போகவேண்டி யிருக்காதா? என்று இந்திய சர்க்காரையும் குறிப்பாக பண்டித ஜவஹர்லால் நேருவையும் கேட்டுக் கொள்ளுகிறோம்.
நாட்டில் அமைதியும் சமாதானமும், சௌஜன்யமும் நிலவி இந்தியா முன்னேற்றமடைய வேண்டுமானால் சங்கத்தின்மீதுள்ள தடையை நீக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறோம். தடை விதிக்கப்பட்டிருந்தும் சங்கம் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை எவ்விதத்திலும் நிறுத்தப்பட வேண்டும்.
காரியதரிசி,
வார்டு நெ. 1, காங்கிரஸ் கமிட்டி, ஜில்லா 9, டெல்லி.