"இரண்டு உலகங்கள்!

"70 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய அதே 'பணபலம்' சார்ந்த அதிகாரமே இன்றும் தண்ணீரைத் தீர்மானிக்கிறது.

நன்றி : போர்வாள்24-05-1952 (சனிக்கிழமை)

சமீபகாலப் பத்திரிகைகளிலே இரண்டு செய்திகள் வெளிவந்திருக்கின்றன.
1
    "பம்பாய் நகருக்கு விஜயம் செய்துள்ள ஹைதராபாத் நைஜாம் அங்கு சப்ளையாகும் தண்ணீரைப் பருக மாட்டார். அவருக்காக ஹைதராபாத்திலிருந்து தினந்தோறும் விமானம் மூலம் ஜலம் அனுப்பப்படும். ஹைதராபாத்தில்கூட சாதாரணக் குழாய் ஜலத்தை இவர் பருகுவதில்லையாம். மீர் அலாம் என்கிற குளத்திலிருந்து வடிகட்டிவரும் ஜலத்தையேதான் இவர் உட்கொள்வது வழக்கமாம். சமீபத்தில் இவர் டில்லிக்குச் சென்றிருந்த போதுகூட, ஐதராபாத்திலிருந்துதான் குடிநீர் இவருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு வந்ததாம்!"
2
    "இராயலசீமை என்கிற ஆந்திர நாட்டின் பகுதியில் குடிக்கவும்தண்ணீர் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காகச் சில இடங்களில் இரண்டு மைல் மூன்று மைல் தூரம் ஏழை மக்கள் கடும் வெய்யிலில் நடந்து சென்று தவிக்க வேண்டியிருக்கிறது. சின்னஞ் சிறு குழந்தைகளும், வயதான பெரியவர்களும், தண்டூன்றும் தாய்மார்களும் தகிக்கும் வெயிலில் கால்நடையாக நடந்துசென்று தண்ணீர் கிடைக்கும் இடத்தைத் தேடி அலைவது மிகவும் பரிதாபமான காட்சியாக இருக்கிறது."
இப்படி இரண்டு செய்திகள் வெளிவந்திருக்கின்றன பத்திரிகைகளில்.
    ஒருவருக்கு அவர் இருக்கும் இடத்தைத் தேடித் தண்ணீர் பறந்துவருகிறது, விமானம் மூலம்! வேறு சிலருக்கோ அவர்கள் தேடித் தேடி அலைந்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை — தாகமோ தாகம் என்று அவர்கள் துடியாய்த் துடிக்கின்றனர்.
    ஒருவருக்கு அவர் இருக்கும் ஊரிலே கிடைக்கும் தண்ணீராகக் குடிக்கவும் மனம் ஒப்பவில்லை. நெடுந்தொலைவுக்கு அப்பாலிருந்து ஆகாய விமான மூலமாகத் தண்ணீரை வரவழைக்கிறார். வேறு சிலருக்கோ எந்த ஊர்த் தண்ணீராயிருந்தாலும் சரி, எப்படிப்பட்ட தண்ணீராயிருந்தாலும் கூடச் சரி, குடிப்பதற்கு ஒரு முழுங்கு தண்ணீர் கிடைத்தால் போதும் என்கிற நிலை ஏற்பட்டு விட்டிருக்கிறது.
        ஹைதராபாத் தண்ணீர்தான் குடிப்பேன் என்றார் ஒருவர். குடிப்பதற்குத் தண்ணீரே இல்லையே அந்தோ, என் செய்வோம் என்கின்றனர் வேறுசிலர்.
    அவரும் இந்தியர்தான்; இவர்களும் இந்தியர்கள்தான். அவரும் மனிதர்தான்; இவர்களும் மனிதர்கள்தான். பிறப்பு, வளர்ப்பு, மரணம் ஆகிய மூன்று நிலைகள் அவருக்கும் தான் உண்டு, இவர்களுக்கும் தான் உண்டு. அவரும் ஒரு மாதாவின் வயிற்றிலே பிறந்த மகவுதான்; இவர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதாவின் வயிற்றிலே பிறந்தவர்கள்தான் என்றாலும் அவருக்குத் தண்ணீர் பறந்து வருகிறது ஆகாய விமானம் மூலமாக. இவர்களோ தண்ணீருக்காகப் பறக்க வேண்டியிருக்கிறது நாலா திசைகளையும் நோக்கி.
    இரு சாராரும் மனிதர்கள்தான் — என்றாலும் இவ்வளவு வித்தியாசம்!
ஒரே இந்தியா — இரண்டு உலகங்கள்!
    ஓர் உலகம் தண்ணீர் தண்ணீர் என்று அலைந்தாலும் தண்ணீர் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது. மற்றோர் உலகம் தண்ணீர் என்று கேட்டவுடனே தண்ணீர் ஓடி வருகிறது விமானம் ஏறிக்கொண்டு.
        ஏன் இந்த வித்தியாசம்? இன்னமும் எத்தனை காலத்திற்கு இருப்பது இந்த வித்தியாசம்? நல்லறிவாளர்கள் அனைவரும் இந்தக் கேள்விகளை நிச்சயம் கேட்டாக வேண்டும்.
    கேள்விகள் கேட்டால் மட்டும் போதாது; கேள்விகளுக்குரிய விடைகளையும் கண்டாக வேண்டும். விடைகளைக் கண்டறிந்தால் மட்டும்கூடப் போதாது, இன்றைய வித்தியாசத்தைப் போக்குவதற்காக ஓயாது பாடுபட முன்வரவேண்டும் அறிவுள்ள மக்கள்.
        தண்ணீர் விமானம் மூலம் பறந்து வருகிறது ஒருவருக்கு. அதே நேரத்தில் பறந்து பறந்து அலைந்தாலும் தண்ணீர் கிடைக்காமல் திண்டாடித்தவிக்கின்றனர் வேறு சிலர்.
        இந்த வித்தியாசம் இருப்பதற்குக் காரணம், பணம் ஒருவரிடத்திலே மாமலைபோலக் குவிந்துகிடக்கிறது. மற்றவர்களிடத்திலே, பணமல்ல வறுமை, படுகுழிபோல் காட்சி தந்துகொண்டிருக்கிறது.
            இந்த நிலை அழிக்கப்பட்டு, பணம், வறுமை, இரண்டும் எல்லோருக்கும் சமமாக்கப்பட வேண்டும். ஏழை என்று ஒருவனும் பணக்காரன் என்று ஒருவனும் தனித்தனியாக இருக்கும் தவறான முறை ஒழிக்கப்படவேண்டும்.
        வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் அனைவருக்கும் குறைவறக் கிடைப்பதற்கு ஏற்ற வீதத்தில் நாட்டின் பொருளாதார இயந்திரமும் சமுதாய அமைப்பும் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
    ஒரே வார்த்தையில் சொல்வதானால் பொதுவுடமை சகாப்தம் ஆரம்பமாகவேண்டும் இந்தியாவில். பொதுவுடமை பூமியாக இந்தியா மறுமலர்ச்சி பெறமூலம்தான் இந்தியாவில் தண்ணீருக்காகத் தத்தளிக்கும் ஏழை உலகம் ஒருபக்கமும், ஆகாய விமானம் மூலம் தண்ணீர் பெறும் பணக்கார உலகம் மற்றொரு பக்கமுமாக இருக்கும் இன்றைய இழிநிலை ஒழியும்.
            மனித உலகம் என்கிற ஒரே உலகம் இந்தியாவில் உருவாகும். அப்படி உருவாகும்படி செய்ய வேண்டியது நல்லறிவாளர்களின் கடமை.
இன்றும் இரண்டு உலகங்கள்

இன்றைய முதல் உலகம் (மேட்டுக்குடி)இன்றைய இரண்டாம் உலகம் (விளிம்புநிலை மக்கள்)

இன்று நம் நாட்டில் லட்சக்கணக்கில் செலவழித்து 'வாட்டர் அயனைசர்' (Water Ionizers) மற்றும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆல்கலைன் (Alkaline) பேக்கேஜ்டு குடிநீரைப் பயன்படுத்துகின்றனர்.ஆனால் கார்ப்பரேஷன் குழாய்களில் வரும் சாதாரண நீருக்காகவும், லாரிகளில் வரும் தண்ணீருக்காகவும் நள்ளிரவிலும் காத்திருக்கின்றனர்.

₹80,000 முதல் ₹4 லட்சம் வரை மதிப்புள்ள அதிநவீன சுத்திகரிப்பு இயந்திரங்களை வீடுகளில் பொருத்தி, தண்ணீரின் pH அளவை மாற்றிப் பருகுகின்றனர்.நிலத்தடி நீர் வற்றிப்போனதால், அன்றாடத் தேவைக்குத் தனியார் தண்ணீர் லாரி கொள்ளைக்காரர்களிடம் (Tanker Mafia) கூடுதல் விலை கொடுத்து ஏமாறும் அவலம்.

அடுக்குமாடி சொகுசு குடியிருப்புகளில் (Gated Communities) நீச்சல் குளங்களுக்கும், தோட்டங்களுக்கும் தடையின்றித் தண்ணீர் பாய்கின்றது.சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களின் சேரிகளிலும் புறநகர்ப் பகுதிகளிலும் ஒரு குடம் தண்ணீருக்காகப் பல மணிநேரம் வரிசையில் நின்று சண்டையிடுகின்றனர்.