புதினம் - தோற்றமும் வளர்ச்சியும்
முன்னுரை
காலந்தோறும் வெளிவருகின்ற புடைப்புகளின் வடிவங்களையும் பாடுபொருளையும் மையமிட்டு, அதன் இலக்கியக் காலத்திற்கான பெயர்களில் சுட்டுவது மரபு. அந்த வகையில் இருபதாம் நூற்றாண்டை 'உரைநடையின் காலம்' என்பர். ஏனெனில் அக்காலக்கட்டத்தில் வெளியான படைப்புகளின் வடிவங்கள் அனைத்தும்(சிறுகதை, புதினம், உரைச்சித்திரம்) உரைநடையாகவே இருந்தது. தொடக்க காலப் புதுக்கவிதையைக் கூட வசன கவிதை என்றே சுட்டினர். , உரைநடை வடிவங்களில் மிக உன்னதமான, மக்களால் அதிகம் விரும்பப்படும் வடிவமாகத் திகழ்வது புதினம் ஆகும்.
ஆங்கிலத்தில் இதனை 'நாவல்' (Novel) என்று குறிப்பர். நாவல் என்று குறிப்பிடுவதை விட, இவ்வடிவத்திற்குப் ’புதினம்’ என்ற பெயரே சிறப்பு வாய்ந்ததாகும். ஏனெனில் 'புதினம்' என்ற சொல் 'புதுமை' என்ற பொருளைத் தரும். மேலைநாட்டினரின் வருகையும் அச்சு இயந்திரத்தின் அறிமுகமும் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் புதுமை செய்தது. இரத்தினச் சுருக்கமான செய்யுள்(இவ்வடிவம் பண்டிதர்களால் மட்டுமே கொண்டாடப்பட்டது) வடிவைக் கடந்து, சாமானிய மக்களும் படித்துப் புரிந்துகொள்ளும் எளிய வடிவமாக மாறியதால் தான் இன்றும் தமிழ் இலக்கியத்தின் தவிர்க்க முடியாத அங்கமாகப் புதினம் விளங்குகிறது.
"கவிதை என்பது உணர்ச்சியின் கவித்துவ வெளிப்பாடு; புதினம் என்பது ஒட்டுமொத்த மனித வாழ்க்கையின் விரிவான எதார்த்தச் சித்திரம்." - இலக்கியத் திறனாய்வாளர்கள் கூற்று
புதினத்தின் இலக்கணம்
ஒரு புதினம் என்பது வெறும் கதை மட்டுமல்ல; அது சில முக்கியக் கூறுகளைத் தன்னுள் கொண்டிருக்க வேண்டும்:
- கதைக்களனும் மாந்தர்களும்:
- கதையின் பின்னணியும், அதில் வரும் கதாபாத்திரங்களும் (மாந்தர்கள்) சமூகத்தில் நாம் காணும் மனிதர்களைப் போன்றே வடிவமைக்கப்படுகிறார்கள்.
- உரைநடைத் தன்மை:
- எளிய, தெளிவான, ஓட்டமுடைய உரைநடையில் கதை விவரிக்கப்படும்.
- நீண்ட பரப்பு:
- சிறுகதை போல் அல்லாமல், பல கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள் மற்றும் நீண்ட கால மாற்றங்களை இது விவரிக்கும்.
- வாழ்வியல் எதார்த்தம்:
- கற்பனை கலந்திருந்தாலும், மக்களின் அன்றாட வாழ்க்கை, சமூகச் சிக்கல்கள், மனித உணர்வுகள் ஆகியவற்றை அப்படியே பிரதிபலிக்கும்.
புதினத்தின் தோற்றம்
150 ஆண்டுகளுக்கு முன்பே, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகளையும், உரைநடையின் வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டவர்களால் தான் தமிழில் ’புதினம்’ எனும் இலக்கிய வடிவம் தோன்றியது.
- பிரதாப முதலியார் சரித்திரம் (1876):
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய இந்த நூலே தமிழின் முதல் புதினமாகும். இந்நூல் சமூகச் சீர்திருத்தம், ஒழுக்க நெறிகள் மற்றும் பெண் கல்வி ஆகியவற்றைக் வலியுறுத்தி எழுதப்பட்டது. இப்புதினத்தின் நோக்கம் குறித்து ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
"நம் நாட்டு மக்களுக்கு உரைநடை இலக்கியத்தின் மூலம் நற்குணங்களையும், நீதிநெறிகளையும் புகட்டுவதே எனது முதன்மை நோக்கம்." - மாயூரம் வேதநாயகம் பிள்ளை.
- கமலாம்பாள் சரித்திரம் (1896):
- பி. ஆர். ராஜமையர் எழுதிய இப்புதினம் தமிழில் வந்த முதல் தொடர்கதை புதினம் ஆகும். எவ்வித ஆடம்பரமும் இன்றி, யதார்த்தமான கிராமத்து வாழ்க்கையையும், மனிதர்களின் குணநலன்களையும், சமூகத் தத்துவக் கோட்பாடுகளையும் மிக அழகாகவும் நுட்பமாகவும் படம் பிடித்துக் காட்டியது.
- பத்மாவதி சரித்திரம் (1898):
- அ. மாதவையா எழுதிய இப்புதினம் அக்காலக் குடும்ப அமைப்பையும், தன்னை மேட்டுக்குடியாகவும், நல்லொழுக்க வாழ்வின் அடையாளமாகவும் காட்டிக் கொண்ட பிராமண சமூகத்தில் இருந்த முரண்பாடுகளையும், கைம்பெண் (விதவை) மறுமணம் போன்ற சமூகச் சிக்கல்களையும் துணிச்சலுடன் பேசியது.(இன்று பேசுவதற்குக் கூட சாத்தியமில்லாத கருத்துக்களை அன்றே பேசியது வியப்பிற்குரியதாகும்.
இடைக்கால வளர்ச்சி
தொடக்க காலப் புதினங்களைத் தொடர்ந்து வாசகர்களைக் கவர்வதற்காகத் துப்பறியும் நாவல்களும், ஆங்கிலம் மற்றும் வடமொழி நாவல்களின் தழுவல்களும் அதிகம் வெளிவந்தன.
- வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் ('மேனகா'), ஆரணி குப்புசாமி முதலியார் ஆகியோர் ஆங்கில நாவல்களைத் தழுவி விறுவிறுப்பான மர்மப் புதினங்களை எழுதினர்.
- வை. மு. கோதைநாயகி அம்மாள் 100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதி, தமிழின் முன்னோடிப் பெண் நாவலாசிரியராகத் திகழ்ந்தார். நாவல் வாசிப்பை நடுத்தரக் குடும்பத்து மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை இக்காலகட்டத்திற்கே சாரும்.
வரலாற்றுப் புதினங்களின் பொற்காலம்
இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும் அதற்குப் பின்னரும் பழந்தமிழர்களின் வீரத்தையும், கலை மற்றும் கலாச்சார வரலாற்றையும் பறைசாற்றும் நாவல்கள் பெருமளவில் மலர்ந்தன.
- கல்கி கிருஷ்ணமூர்த்தி:
- வரலாற்று நாவல்களின் தந்தை எனப் போற்றப்படுபவர். இவரது 'பொன்னியின் செல்வன்', 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் கனவு' போன்ற புதினங்கள் தமிழ் வாசகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இன்றும் கூட, தமிழகத்தில் புத்தகத் திருவிழா நடக்கும் பொழுது, அதிகம் விற்பனையாகும் நூல் வரிசையில் இவரது புத்தகத்திற்கும் இடம் உண்டு. வெள்ளித்திரை என்று அழைக்கப்படும் திரைப்படங்களில் பெற்ற வெற்றியின் மூலம் தமிழக அரசியலிலும் வெற்றி பெற்று முதல்வரான திருவாளர் எம்.ஜி.ஆர் அவர்களின் இலட்சியப் படமாக ‘பொன்னியின் செல்வன்’ புதினம் இருந்தது.
- சாண்டில்யன்:
- பழந்தமிழர்களின் அன்றைய கடல் வழிப் பயணங்களையும், மூவேந்தர்களுள் சோழ, பாண்டியர்களின் கடல் ஆதிக்கத்தையும் 'கடல் புறா', 'யவன ராணி', 'ஜலதீபம்' போன்ற புதினங்கள் மூலம் வாசகர்களைக் கவரும் வகையில் விறுவிறுப்பாக எழுதினார்.
- நா. பார்த்தசாரதி & அகிலன்:
- நா. பார்த்தசாரதியின் 'குறிஞ்சி மலர்', 'பொன்விலங்கு' ஆகியனவும், அகிலனின் 'வேங்கையின் மைந்தன்' மற்றும் 'கயல்விழி' ஆகிய வரலாற்றுப் புதினங்களும் இக்காலகட்டத்தின் முக்கியப் படைப்புகளாகும்.
சமூக யதார்த்த எழுத்தாளர்கள் (1960 - 1980)
வரலாற்றுக் கற்பனைகளில் இருந்து விடுபட்டு, சமகால மனித மனங்களின் ஆழத்தையும், சமூகத்தின் வறுமை, சாதி, பெண்ணடிமைத்தனம் போன்ற யதார்த்தப் பிரச்னைகளையும் சில எழுத்தாளர்கள் கைக்கொண்டு எழுதலாயினர்.
- டாக்டர் மு. வரதராசனார் (மு.வ.):
- சமூக இலட்சியப் பாத்திரங்களைப் படைப்பதில் ஆற்றலுடைய இவர் 'அகல்விளக்கு', 'கரித்துண்டு', 'நெஞ்சில் ஒரு முள்' போன்ற நாவல்களை எழுதினார். சமூகத்தின் நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும் மையமாகக் கொண்டு எழுதப் பெற்ற இவரது புதினங்கள் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
- அகிலன்:
- இவரது சமூகப் புதினமான 'சித்திரப்பாவை' நாவலுக்குத் தமிழின் முதல் ஞானபீட விருது கிடைத்தது. தமிழில் ஞான பீட விருது பெற்ற முதல் எழுத்தாளர் இவராவார். இவருக்கு அடுத்து ஜெயகாந்தனுக்கு இந்த விருது கிடைத்தது. மொத்த தமிழ் எழுத்தாளர்களுள் இவர்கள் இருவர் மட்டுமே இந்த விருதினைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
- ஜெயகாந்தன்:
- விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையையும், மனித உறவுகளின் சிக்கல்களையும், பெண்ணின் கற்பு நெறி குறித்த புதிய பார்வைகளையும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்', 'பாரிசுக்குப் போ!', 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' போன்ற புதினங்கள் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்தார். இவரது புகழ்பெற்ற மேற்கோள்:
"நான் எழுதும் மனிதர்கள் சாமானியர்கள்; ஆனால் அவர்களின் உணர்வுகளும், வாழ்க்கைப் போராட்டங்களும் அசாதாரணமானவை." - ஜெயகாந்தன்.
- தி. ஜானகிராமன்:
- மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளையும், காதலையும், இசையையும் பேசிய 'மோகமுள்', 'செம்பருத்தி' போன்ற புதினங்களைப் படைத்தார்.
- லா. ச. ராமாமிர்தம்:
- மனித மனதின் விசித்திரமான ஆழ் மன ஓட்டங்களையும் உளவியல் சிக்கல்களையும் 'புத்ர' போன்ற புதினங்கள் வழியாகத் தனித்துவமான உரைநடையைத் தமிழ் எழுத்துலகிற்குத் தந்தார்.
வட்டார மற்றும் முற்போக்கு நாவல்களின் எழுச்சி
தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலையும் மொழியையும் அப்படியே கொண்டுவரும் வட்டார புதினங்கள் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய செழுமையைத் தந்தன.
- கி. ராஜநாராயணன் (கி.ரா.):
- கரிசல் பூமியின் யதார்த்த வாழ்வியலைக் கொண்ட மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் தனித்துவமான மொழியையும் 'கோபல்ல கிராமம்', 'கோபல்லபுரத்து மக்கள்' போன்ற புதினங்கள் மூலம் எழுதி வட்டார இலக்கியத்தின் ’முன்னத்தி ஏராக’ விளங்கினார்.
- ஆர். சண்முகசுந்தரம்:
- கொங்கு வட்டார வழக்கில் 'நாகம்மாள்' என்ற புதினத்தைப் படைத்து வட்டார புதினங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தார். இன்றும் இவரது இந்தப் புதினத்தைப் பற்றி கதையாடாத பேச்சாளர்கள் இருக்க முடியாது.
- தோப்பில் முகமது மீரான்:
- குமரி மாவட்ட இசுலாமியப் பின்னணியில் 'ஒரு கடலோரக் கிராமத்தின் கதை', 'சாய்வு நாற்காலி' போன்ற புதினங்களைப் படைத்தார்.
- சு. சமுத்திரம்:
- சமுதாயத்தில் இருக்கும் ஆண்டான் - அடிமை, ஏழை-பணக்காரன், இருப்பவன் - இல்லாதவன் என்பதான முரண்களையும், ஒடுக்குமுறைகளையும் மையமாகக் கொண்டு அக்கொள்கைகளுக்கு எதிரான முற்போக்கு புதினங்களான 'வேரில் பழுத்த பலா' போன்ற புதினங்களை எழுதினார்.
- பொன்னீலன்:
- உலகளாவிய பிரச்னைகளுக்குத் தீர்வாய் அமைந்த மார்க்சிய சிந்தனைகளின் பின்னணியில் 'புதிய தரிசனங்கள்' என்ற மிக நீண்ட சமூக புதினத்தைப் படைத்தார்.
பெண்ணியப் படைப்பாளர்கள்
சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் தன்மானம் மற்றும் சம உரிமை சார்ந்த பெண்ணிய புதினங்கள் பரவலாக எழுதப்பட்டன.
- இராஜம் கிருஷ்ணன்:
- உழைக்கும் மக்களின் யதார்த்த வாழ்க்கையை நேரில் சென்று கள ஆய்வு செய்து, அவர்களது வாழ்வியலை அப்படியே வாசம் மாறாமல் புதினங்களாக மாற்றினார். இவரது 'குறிஞ்சித்தேன்' (படுகர் இன மக்கள் வாழ்வியல்), 'வேருக்கு நீர்' போன்ற நாவல்கள் மிகவும் புகழ்பெற்றவை.
- அம்பை :
- பெண்களின் உள்ளார்ந்த உலகையும், அவர்களுக்குண்டான சமூகச் சிக்கல்களையும் யதார்த்தமாகத் தன்னுடைய புதினங்களில் பிரதிபலித்தனர்.
நவீன எழுத்தாளர்கள்
1980-களுக்குப் பிறகு தமிழ் புதின உலகம் புதிய உத்திகளையும், மொழியையும் கையாண்ட நவீன எழுத்தாளர்களின் வருகையால் பன்னாட்டுத் தரத்திற்கு உயர்ந்தது.
- சுந்தர ராமசாமி:
- ஒரு புளியமரத்தை மையமாக வைத்துச் சமூக மாற்றத்தைப் பேசிய 'ஒரு புளியமரத்தின் கதை' மற்றும் 'ஜே.ஜே. சில குறிப்புகள்' போன்ற இவரது புதினங்கள் நவீன புதின உலகிற்குப் புதிய பாதையை உருவாக்கித் தந்தது.
- அசோகமித்திரன்:
- சென்னை நகரத்து நடுத்தர மக்களின் எளிய வாழ்வையும், அவர்களின் சொல்ல முடியாத துயரங்களையும் 'கரைந்த நிழல்கள்', 'தண்ணீர்', 'பதினெட்டாவது அட்சக்கோடு' போன்ற புதினங்களில் மிக எளிமையான மொழியில் விவரித்தார்.
- நாஞ்சில் நாடன்:
- நெல்லைக்குத் தெற்கே உள்ள நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்வியலையும் சில மனிதர்களின் சுயநலத்தையும் 'தலைகீழ் விகிதங்கள்', 'எட்டுத்திக்கும் மதயானை' போன்ற புதினங்களில் எள்ளல் சுவையோடு சுட்டிக் காட்டி மாற்றங்கள் நிகழ வேண்டும் என்ற நோக்கில் எழுதினார்.
- ஜெயமோகன்:
- தமிழின் மிக நீண்ட, பிரம்மிப்பூட்டும் புதினங்களைப் படைத்தவர். இவரது 'விஷ்ணுபுரம்', 'கொற்றவை' மற்றும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'வெண்முரசு' புதின வரிசை ஆகியன தமிழ் இலக்கியத்தின் மைல்கற்கள் ஆகும்.
- எஸ். ராமகிருஷ்ணன்:
- தேர்ந்த கதைசொல்லியாகவும் தனித்துவமான கதைக்களத்தைக் காட்டும் புதுமையான உரைநடைக்குச் சொந்தக்காரர். இவரது 'உப பாண்டவம்', 'நெடுங்குருதி', 'யாமம்', 'சஞ்சாரம்' போன்ற புதினங்கள் வரலாற்றையும் யதார்த்தத்தையும் இணைத்துப் பேசுகின்றன.
- சாரு நிவேதிதா:
- தமிழில் பின்நவீனத்துவ இலக்கிய வகையை அறிமுகப்படுத்தியவர்களுள் குறிப்பிடப்பட வேண்டியவர். இவரது 'ஸீரோ டிகிரி' போன்ற புதினங்கள் உலக அளவில் பேசப்பட்டவை.
- பெருமாள் முருகன்:
- கொங்கு நாட்டு கிராமிய வாழ்க்கையைத் கண்முன்னே காட்சிப்படுத்தியும் பாத்திரங்கள் நம் முன்னே இயல்பாகப் பேசும் 'ஏறுவெயில்', 'மாதொருபாகன்', 'பூனாச்சி' போன்ற உலகப் புகழ்பெற்ற புதினங்களை எழுதியுள்ளார்.
விளிம்புநிலை புதினங்கள் :
- பாமா:
- ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களின் வலிகளையும், போராட்டங்களையும் 'கருக்கு', 'சங்கதி' போன்ற புதினங்கள் வாயிலாகத் தலித் இலக்கியத்தின் முக்கியக் குரலாகப் பதிவு செய்தார்.
- பூமணி:
- கிராமிய வாழ்வின் உழைப்பையும் வலியையும் பேசும் 'வெக்கை' (அசுரன் திரைப்படத்தின் கதைக்களம்), புதினத்தைப் படைத்துக் காட்டியவர்.
- ஈழத்து எழுத்தாளர்கள்:
- இலங்கைப் போர்ச் சூழலையும், அகதி வாழ்வின் துயரங்களையும் முத்துலிங்கம், ஷோபாசக்தி ('கொரில்லா') போன்ற எழுத்தாளர்கள் தங்களின் நவீன புதினங்கள் மூலம் உலகிற்கு உரக்கச் சொன்னார்கள்.
முடிவுரை
தமிழில் தொடக்கக் காலப் புதினங்கள் என்பது நீதிபோதனைச் சாதனமாகவும், பொழுதுபோக்கு வடிவமாகவும் இருந்தன. காலப்போக்கில் தமிழ்ச் சமூக மாற்றத்திற்கான மிக வலிமையான ஆயுதமாக மாறியது.
வேதநாயகம் பிள்ளையின் ஒழுக்க நெறியில் தொடங்கி, கல்கியின் வரலாற்றுப் பெருமிதம், ஜெயகாந்தனின் சமூக யதார்த்தம், சுந்தர ராமசாமியின் நவீனத்துவம் என பயணித்து வந்த இந்த இலக்கிய வகை, இன்று பன்முகத்தன்மையுடன் உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளது. சமூகத்தின் கண்ணாடியாகவும், காலத்தின் பதிவாகவும் விளங்கும் புதினங்களைப் படிப்பது, வாசகனின் சிந்தனைத் திறனை வளர்ப்பதோடு, சமுதாயத்தைப் பற்றிய புரிதலையும் விரிவு செய்யும்.
----------------------------------------------------------------------------------------------------------------------