’ஏசல்’ என்னும் தற்காப்புக் கலை: சங்க இலக்கியப் பரத்தையரின் எள்ளல் மொழி!
சங்க காலச் சமூகம்
பழமையை விரும்புபவர்களின் பார்வையில்
சங்க காலம் என்பது, ”ஒரு உயர்நிலை வாழ்வியலைக் கொண்ட பண்பட்ட சமூகம்” என்ற நிலைப்பாடு
இருக்கின்றது. ஆனால் அந்த இலட்சியச் சமூகத்திலும் ஆணாதிக்க மனோநிலை இருந்து வந்துள்ளதை
அக்காலப் பாடல்கள் பல எடுத்தியம்புகின்றன.
அவள் எழுதிய புதிய சுவடி
சரித்திரத்தின் பக்கங்களை
மறந்தும் புரட்டிப் பார்க்காதே பெண்ணே...
அங்கே மை தீர்ந்துபோன பேனாக்களால் அல்ல,
உன் குருதி சிந்திய
கண்ணீர் துளிகளால் மட்டுமே
ஆண்களின் வீரம் எழுதப்பட்டிருக்கிறது!
அன்று...
வேட்டையாடி வந்த மிருகத்தின் தோலில்
ஆண்களின் வீரத்தைப் பாடிப் பழகிய சமூகம்,
அதே தோலின் மென்மையில்
உன் சுதந்திரத்தைச் சுருட்டி வைத்தது.
அவன் வாள் வீசி வென்ற தேசங்களில் எல்லாம்
சிறைபிடிக்கப்பட்ட தேவதைகள்
உன் முன்னோடிப் பெண்கள்தான்!
மதங்களின் பெயராலும்
மனுநீதியின் பெயராலும்
புனிதப் பசுக்களாய் உங்களை மாற்றி,
தொழுவத்துக் கயிறுகளுக்கு
'மாங்கல்யம்' என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
அவன் எழுதிய காவியங்களில் எல்லாம்
நீ ஒன்று அழுகின்ற சீதையானாய்,
இல்லை எனில்
அடைக்கலம் புகுந்த திரௌபதியானாய்!
உன் சிலம்பின் ஒலியை விட
உன் சிலையான கற்புக்கே
இங்கே சிம்மாசனங்கள் தரப்பட்டன.
ஆனால்...
வரலாறு என்பது எப்போதும்
அவர்கள் மட்டுமே எழுதும் டைரி அல்ல!
இப்போது,
உன் சமையலறைப் புகையிலிருந்து
புறப்பட்டிருக்கின்றன சில புரட்சிக் கவிதைகள்.
அவன் நெறித்த புருவங்களுக்கு நேராக
இன்று நிமிர்கிறது உன் விழித்திரை!
விலங்கொடித்த கைகளோடு
நீ எழுதத் துவங்கியிருக்கும்
இன்றையப் பக்கங்களில்...
அவன் ஆதிக்கத்தின் 'முற்றுப்புள்ளி'களுக்கு மேல்
உன் சுதந்திரத்தின் 'ஆச்சரியக்குறிகள்'
முளைத்து நிற்கின்றன!
இன்றைய பெண்ணியக் கவிஞரின்
மேற்சொன்ன வரிகளில் உள்ள வரலாற்று வரிகள் தோறும் ஆணாதிக்கச் சமூகத்தின் வல்லிய
நகக்கீறல்கள் வடுவாக நிற்பதைக் காண முடியும்.
சங்க
இலக்கியத்தில் ஒரு ஆணின் செயலைப் பாருங்களேன். ஊரார் முன் கைபிடித்த மனைவியை
விட்டுப் பிரிந்து பரத்தையிடம் சில காலங்கள் வாழ்கின்றான்.(கோவலனைப் போல)
பரத்தையிடமும் தான் பெற்ற சுகங்களைத் தள்ளி, (குரங்கு மனம்) மீண்டும் மனைவியிடம்
வருகின்றான். அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஒரு விவரிப்புகளாகக்
காட்சிப்படுத்துகின்றேன் உங்கள் கண்களுக்கு………………… இதற்குப் பாணனைத் தூதாக வேறு
அனுப்ப வேண்டியது(கருமம்…… கருமம்……)
ஓடிப் பொய்டுடா…. படவா ராஸ்கல்…………
பரத்தையிடமிருந்து பிரிந்து தன் மனைவியிடம்
சென்ற தலைவன், மீண்டும் பரத்தையை நாடி வரத் துணிகிறான். அதற்கு முன்னதாகத் தன் தூதனான
பாணனை (இசைப் பாடகனை) பரத்தையிடம்
தூது அனுப்புகிறான். தலைவனின் பொய்களைத் தாங்கி வரும் பாணனைப் பார்த்ததும், பரத்தைக்குக்
கோபம் தலைக்கேறுகிறது. அவனைக் கதவடைத்து ஏசும் பாடல் இது:
"நெடியது மொழிந்து, பாண!
நீயும், நிற் புறம் செய்யுமவனும்,
கடியர்; கள்வர்; கயவர்; என்று, யான்
வடியுறு வாள் கண் நீர் வார்ந்து உறைப்ப,
‘அடியுறை ஆக!’ என, யாரிடை மொழிவல்?
விடு, இனி; பாண! நினது யாழே; கிடந்த
கள்ளின் ஆலை கள் ஆர் மாக்கள்
ஒளிறு வாள் பழிச்சி, ‘கடன் இறுத்தனம்’ என,
மடிவாய்த் தண்ணுமை இன்றி ஆடும்
வண்டு மூசு நெய்ம் மணல் தண் முன்றுறை,
‘வண்டல் பாவை வௌவிக் கொண்டோன்
கொண்டல் மா மழை வரவறிந்து, நுவலும்
கார் காலத்தினும் கொடியன்’ என்று, யான்
யார்க்கு நொந்து உரைப்பல்? விடு, இனி, நினது யாழே!"
(அகநானூறு -
186)
"ஏலேய் பாணா! போதும் போதும்... லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது, முதல்ல உன் வாயை மூடு! பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசி இங்க வந்து காதுல ‘ரீல்’ சுத்தாதே. எனக்கு நல்லாத் தெரியும்……… உனக்கும், உன் பின்னாடி நின்னு சீன் போடுற உன் தலைவனுக்கும் மனசாட்சியே கிடையாது. நீங்க ரெண்டு பேரும் அக்மார்க் Red Flags! பெரிய ஏமாத்துக்காரங்க, நயவஞ்சகருங்க!
இதை கேக்குறப்பவே எனக்கு கண்ணுல கண்ணீர் வருது தெரியுமா? நல்லா சொல்லுறடா டயலாக்கு,
போணுமாம் போயி அவன் கால்ல போய் விழணுமாம், அவன் ரொம்ப நல்லவனாம்…… ஹும்! இங்க வந்து அவனுக்கு வக்காலத்து வாங்குறியே... உனக்கு வெட்கமா இல்ல???? நெஞ்சு பொறுக்குதில்லையே! நெஞ்சு பொறுக்குதில்லையே!! நான் யாரிடம் போய் என் தலையெழுத்த சொல்லி அழுவேன்? ஐயோ!!!!!!! போடா! போ!! முதல்ல உன் கையில் இருக்குற அந்த கித்தாரை (யாழை) பாக்ஸ்ல வச்சுப் பூட்டிட்டு, இங்கிருந்து கிளம்புற வழியப் பாரு!
அவன் என்ன பெரிய உத்தமனா? பார்ட்டில ஃபுல்லா தம் அடிச்சுட்டு, கள்ளு கடையில குடிச்சுட்டு, ‘நாங்க கடமைய முடிச்சுட்டோம்’னு கத்தியைத் தூக்கிட்டு ஆடுற ஒரு லோக்கல் கிராக்கி பையன் அவன்! கடற்கரையில சின்னப் பசங்க ஆசையா செஞ்சு விளையாடுற மணல் பொம்மைய, இரக்கமில்லாம அடிச்சுட்டுப் போற சுனாமி வெள்ளத்தை விடக் கொடூரமானவன் டா உன் ஃபிரண்ட்! எத்தனைப் பெண்களோட லைஃபை இப்படித்தான் அவன் ஸ்பாயில் பண்ணுவான். இதை நான் யாரிடம் போய் சொல்லிப் புலம்புறது? உன் இன்ஸ்ட்ருமென்ட்டை எடுத்துட்டு முதல்ல இடத்தை காலி பண்ணு பாஸ்!"
இதே போன்று, கலித்தொகையில், பரத்தையிடம் இன்புற்ற
தலைவன், திடீரெனத் தன் மனைவியின் மீதும், மகனின் மீதும் பாசம் பொங்குவது போல நடிக்கிறான்.
அவனது இந்தத் திடீர் 'நல்ல பிள்ளை' வேடத்தைக் கண்டு, பரத்தை தன் தோழியிடம் அவனைப் பழித்து
ஏசும் பாடல் வரிகள் இவை:
"கண்டாரை நெஞ்சு பிணிக்கும்
கவவுக் கடும் திண் தேர்,
தண் தார் அவிழ்ந்தார்த் தகை மைந்தன்; எம்மனை,
வண்டு ஆர் கதவம் திறப்பத் தவிர்ந்தானை,
‘கண்டீரே, தோழி!’ எனச் செப்ப, ‘அஃது ஆக;
குண்டுகண் நீர் உறை குதிரை குடித்த பின்,
மண்டு நீர் மாண் குளம் காலால் கலக்கினாங்கு,
உண்டி உவகை தணிய, எமக்கு உற்ற
சண்ட மா முந்நீர் சாய்ந்து உறைந்தான்றே!"
"அடியேய் தோழி! இங்க பாரு புள்ள... கார்ல (தேர்ல) கெத்தா வந்து, கழுத்துல பிராண்டட் செயின் (குளிர்ந்த மாலை) எல்லாம் போட்டுக்கிட்டு, நம்ம வீட்டு வாசல்ல வண்டுகள் மொய்க்கிற அழகிய கதவைத் திறந்துட்டு உள்ளே வரப் பார்த்தான் டி……இந்தாளு! நான் அப்படியே நைஸா ‘நோ-என்ட்ரி’ போர்டு மாட்டி வெளிலயே ஸ்டாப் பண்ணிட்டேன்!
அதுக்கு இந்த ஆளு இப்ப எப்படி ‘சென்டிமென்ட் சீன்’ போடுறான் தெரியுமா? 'ஐயோ... நான் என் பையனைப் பார்க்கப் போறேன், என் வைஃபைத் தேடிப் போறேன்'னு திடீர்னு அக்மார்க் நல்ல பையனா மாறி பாசம் பொங்குற மாதிரி பேசுறான்.
இவனப் பாரேன்! ஆளும் மூஞ்சும்.... பெரிய டிராமா ஆர்டிஸ்ட் போல பேசுறான். இவன் பேசுறது எப்படி இருக்குத் தெரியுமா? ஒரு குதிரை நல்லா புல்லை மேஞ்சுட்டு வந்து தாகத்துல குளத்துத் தண்ணியை மொடக்கு மொடக்குணு குடிச்சுச்சாம். பொறகு.... அந்தக் கொளத்துத் தண்ணியையே தன் காலுட்டு குழப்பிட்டுப் போச்சாம்...... அந்தக் கதை போல தான் இவனும். என்னிடம் அவனோட ஆசை தீருற வரைக்கும் ஜாலியா இருந்துட்டு, இப்ப கிளம்புறப்ப என்னை ரொம்ப ‘கேவலமாப்’ பேசி, என் மைண்டையே டோட்டலா அப்சட் பண்ணிட்டுப் போறான்!"
மேற்சொன்ன இந்த இரண்டு ஏசல்களில் உள்ள நயமும் சிறப்பும் சங்க இலக்கியத்தின் மிகச் சிறந்த நையாண்டித் தொணிக்குத் தக்க சான்றாகும். பெண்ணின் உள்ளார்ந்த மனநிலையில் ஆண்களின் சுயநலத்தை இதைவிட அழகாக எள்ள முடியாது. "தேவை இருக்கும் போது காலில்
விழுவதும், தேவை முடிந்தவுடன் காலால் மிதித்துக் கலக்குவதும் தான் உங்கள் தலைவனின்
குணம்" என்று பரத்தை ஏசும்போது, அவளது கோபத்தின் பின்னே ஏமாற்றப்பட்ட ஒரு பெண்ணின்
நியாயமான வாதம் ஒலிக்கிறது.
சங்கப் பரத்தையரின் ஏசல் என்பது வெறும் சண்டையல்ல;
அது ஒரு தார்மீகக் கேள்வி. தங்களைப் போகப் பொருளாக மட்டுமே கருதும் ஆடவர் சமூகம், தங்களுக்கு
இழைக்கும் துரோகத்தைக் கவித்துவமாகத் திருப்பித் தாக்கும் ஆயுதம் அது. அந்தத் தார்மீகக் கோபம் தொடர்ந்து இன்று வரை இருந்து வருகின்றது. ஆண்கள் திருந்துவதாய் இல்லை.....
பாஸ்!!! இவனுங்க இப்படித் தான் பேசிட்டே இருப்பாணுங்க.... நாம செய்யுறத செய்வோம்ணு எவனோ சொல்லுற மைண்ட் வாய்ஸ் இங்க வர கேட்குது!!!!!
என்னா மைண்ட்வாய்ஸ் டா இது.... நாற மையிண்ட் வாய்ஸ்..........