மீள்பதிப்புக் குறிப்பு:

உலகப் பாட்டாளிகளின் விடிவெள்ளியாகத் திகழ்ந்த தோழர் லெனின் மற்றும் தமிழகத்தின் சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் ஆகிய இரு மாபெரும் ஆளுமைகளின் சிந்தனைகளையும், உழைப்பையும், அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளையும் மிக நுட்பமாக ஒப்பிட்டாயும் உன்னதமான வரலாற்றுச் சமூகப் பதிவு இது. 1947-ஆம் ஆண்டு ஜூலை தேதியிட்ட 'தோழன்' இதழில் 'அவன்' என்ற புனைப்பெயரில் எழுதப்பட்ட இக்கட்டுரை, ரசியாவில் ஜார் மன்னராட்சியையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க லெனின் கையாண்ட பலாத்காரப் போர்முறைக்கும், இந்தியாவில் சாதியக் கட்டமைப்பையும் ஆரிய ஆதிக்கத்தையும் ஒழிக்கப் பெரியார் கையாண்ட பகுத்தறிவுப் பிரசார முறைக்கும் உள்ள ஆழமான ஒற்றுமை-வேற்றுமைகளை விவரிக்கிறது. கால ஓட்டத்தில் மறைந்து போகக்கூடிய இத்தகைய அரிய முற்போக்கு ஒப்பிடட்டுக் கட்டுரைகளை இன்றைய இணையத் தலைமுறையினர் படித்துப் பயன்பெறும் நோக்கோடும், சமூக, அரசியல் மற்றும் வரலாற்று ஆவணப் பணிக்காகவும் இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன். இது தமிழகத்தில் பொதுவுடைமை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகள் வேரூன்றிய வரலாற்றைத் தற்காலச் சமூகம் விரிவாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு சிறந்த வரலாற்று இலக்கிய ஆவணமாகும்.

பெரியாரும் லெனினும்
அவன்
ஒரு கள்ளன்' 'ஜர்மானியரின் ஒற்றனையா அவன், அவனை நம்பாதே!"
லெனினைக்குறித்து அவரது வாழ்நாளில் இப்படிப்பட்ட பேச்சைத்தான் கேட்கமுடிந்தது பல இடங்களிலே. ஆனால், இன்று அதே லெனின், ஆர்க்டிக் முதல் அண்டார்க்டிக்வரை போற்றப் படுகிறார். பாட்டாளிகளுக்கு முன்னேற்றப் பாதையை வகுத்துத்தந்த வீரரென மதிக்கப்படுகிறார். முதலாளித்தத்துவத்தை, ஜாரின் ஆணவத்தை ஆழக் குழி தோண்டிப் புதைத்த புனிதரெனப் புகழப்படுகிறார்.
பெரியார் இராமசாமி யவர்களைக் குறித்து பலர் தவறாக எண்ணியும் பேசியும் வருவதை நாம் பார்க்கிறோம். தேசத்துரோகி, நாஸ்திகர் என்ற இரண்டு பட்டங்களும் தாராளமாக கிடைக்கின்றன. அறியாமையும் பேதமையும் லெனினைக் கள்ளனென்றும், ஜர்மானிய ஒற்றனென்றும் பழித்தன, அவைதான் பெரியாரையும் பழிக்கின்றன. அவர்களது உயர்ந்த குறிக்கோள், நோக்கம், உழைப்பு ஆகியவை அதிகமாயிற்றே ஒழிய, இந்தப் பழிச் சொற்களால் அவை குறைந்துவிடவில்லை.
வெறுக்கத்தெரிந்தவனே வெற்றி பெறுவான் என பெரியார் அடிக்கடிச் சொல்வதுண்டு. அக்கிரமத்தை, ஆணவத்தைச், சூழ்ச்சியை, வெறுக்கத்தெரிந்தவர் பெரியார். லெனின் ஜாரின் ஆணவத்தை, ரஸ்புட்டீன் சூழ்ச்சியை வெறுத்தார். சைபீரியாவில் சிலகாலம், சுவிட்சர்லாந்தில் சிலகாலம், அப்படியே அவருடைய வாழ்க்கையின் பெரும்பகுதி கழிக்கவேண்டியதாயிற்று, தான்வெறுத்தது மட்டுமல்லாமல், மக்களும், அக்கிரமத்தை வெறுக்குமாறு செய்தார்.
மதம் ஒழிக்காலொழிய மக்கள் முன்னேற முடியாது என்ற கருத்துக் கொண்டவர் பெரியார். இந்து மதம் திராவிடருடையதல்ல வென்பதும் ஆரியன் சதியென்பதும், சாமிகளெல்லாம் ஆரியரின் படைப்புகளென்பதும் அவரது முடிந்த முடிவு. பாதிரிகளுக்கு லெனின் பரிவு காட்டவில்லை. புரட்சியை அடக்க, புல்லர்களைக் காப்பாற்ற இரஸ்புடீன் செய்த தந்திரம் லெனினுக்கு ஆத்திரமூட்டியது.
இயந்திரத்தைப் பயன் படுத்திப் பாருலகை பாட்டாளிகளின் இன்ப புரியாக்க வேண்டுமென்பது லெனின் ஆசை. இரஷ்யாவில் இயந்திரங்கள் பெருக்கத்துக்குப் பாடு பட்டார். இயந்திரங்களின் சக்கரங்களின் சுழற்சியிலே சுகத்தைக் காண விரும்பினார். இராட்டையின் சுழற்சியிலே சுகத்தைக்காணும் காந்தியாரைப் போலல்ல! கைராட்டையும் உலக்கையும் காட்டு மிராண்டி காலத்துச் சின்னங்கள் என்பது பெரியாரின் கொள்கை. லெனினைவிட கடுமையான வேலை பெரியாருக்கு. காரணம், கைராட்டையே பீரங்கியாகக் கொண்ட உலக்கைதாசர்கள் மிகுந்த நாட்டில் வேலை செய்கிறார். விஞ்ஞானத்தின் வீழ்ச்சியில் விடுதலைகாணும் வீணர்களிடை வாழ்ந்துவருகிறார். இயந்திரத்தை பூதமென்று நம்பும் காந்தீயர்களிடை வேலை செய்கிறார்.
கலை, பாட்டாளிகளுக்கு பயன்பட வேண்டுமென்பதும், புரட்சிக்கருத்துக்களை பரப்பும் கருவியாக அமையவேண்டுமென்பதும் லெனினது உள்ளக் கிடக்கை. இந்தக் காரணத்துக்காகவே புஷ்கினைப் புகழ்ந்தார். கடவுளையும் கோவிலையும் அடியார்களை ையும் எத்தும் கலை, இனத்தை கொலை செய்யும் கருவியென்பது பெரியாரின் கருத்து. இனத்தை இழிவு படுத்தும் கம்ப இராமாயணம், பெரிய புராணம் போன்ற ஏடுகளைத் தீயிடவேண்டுமென விரும்புகிறார். இத்தகைய நூல்களை ஏற்கனவே இரஷ்யாவில் கொளுத்தினர்.
கொச்சைத் தமிழும் பாமரமக்களது வழக்காறுகளும், ஆடம்பரமற்ற முறையும், பெரியாரின் அம்சங்கள் இதே போல் லெனினும் தயவு தாட்சண்ணிய மில்லாத முடிவுகளையும், பாமரர்களது பேச்சு முறையையும் கொண்டிருந்தார். டால்ஸ்டாய் காந்தியாரின் குரு அகிம்சைக் கொள்கையை இரஷ்யாவில் பரப்பியவர். டால்ஸ்டாயின் கொள்கை காட்டைக்குட்டிச்சுவராக்கியதோடு முதலாம் புரட்சி (1905) தோற்றதற்கு முக்கிய காரணமென்பது லெனின் கருத்து. காந்தியத்தைக் குறித்து பெரியார் கொண்டுள்ள கருத்து அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆயிரக்கணக்கான இளைஞரை பலிபீடத்தில் சாய்த்து, பணியாக்களைப் பாராள வைத்தது காந்தியம். கதர்த்திட்டத்தின் மூலம் காட்டு மிராண்டிக்காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்வது காந்தீயம், நாடு பற்றி எரியும் போது "இராமாநாமமே கற்கண்டு" என்று திரியும் காந்தியாரின் போக்கும், சீடர்களிடையே அகிம்சைக் கொள்கை பரவியிருக்கும் ‘அழகும்' அனைவரும் அறிந்ததே. பெரியார் 'குடி அரசு' 'விடுதலை' வாயிலாகவும் இதை எடுத்துக் காட்டியுள்ளார்.
லெனின் ஒவ்வொரு வேலையையும் மிக அக்கரையுடன் கவனித்து வந்தார். அவருடைய கண்ணுக்கு எதுவும் அனாவசியமாகப் பட்டதில்லை. உதாரணமாக, காற்றாடிகளைக் குறித்துக் கூட அவர் குறிப்புகள் தயார் செய்தார். பெரியாரும் அப்படியே, அச்சகத்தின் எல்லா அம்சங்களையும் தெரிந்தவர். சட்டைக்கு பித்தான் தைப்பது முதல் ஆரியத்திற்கு அறைகூவல் விடும் வரை எல்லா வேலையும் திறம்பட செய்து முடிக்கிறார், இயக்கத்திலுள்ள எல்லாத் தொண்டர்களைக் குறித்தும் வியக்கத்தக்க முறையில் தெரிந்து வைத்திருக்கிறார். எத்தனையோ ஆயிரம் பேர்களைப் பற்றிய நினைவுகள் ! பெரியார் 10, 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் ஊருக்குச் சென்றால் கூட, முதல் தடவை தாம் வந்த நேரத்தில் நடந்தவற்றைப் பூரா சொல்லுவார். அவருடைய ஞாபக சக்தி அபாரமானது.
உழைப்பில் லெனின் மிக சமர்த்தர். அதிகம் உழைத்த காரணத்தாலேயே அவர் இறந்தார். பெரியார் உழைப்பின் உருவம். இந்த வயதிலும், காடு, மேடு, பட்டி, தொட்டிகளில், மிகவும் சவுகரியக் குறைவு இருந்த போதிலும், பிரசாரம் செய்து வருகிறார். உழைப்பில் பெரியார் லெனினைக் கூட தோற்கடிக்கப் போகிறார் என 'ஜோஸியம்' கூறலாம்.
லெனின் பட்ட தொல்லைகள் வீண் போகவில்லை. இன்று சோவியத்தின் சோபிதத்தை அறியாதார் அறியாதாரே. இருளும், இன்னலும், இடரும் மிகுந்திருந்த தன் நாட்டை 'உலக வல்லரசாக மாற்றிய பெருமை லெனினுக்குண்டு. முதலாளிகளின் முரட்டுத் தனத்துக்குப் பலியாகி, பச்சை இரத்தம் பரிமாறி, பசாரிகளாய் மாறிய பாட்டாளிகள் லெனினுடைய பெயரைக் கேட்டவுடன் உவகை கொள்ளுவர்!
பெரியாருக்கு இருக்கும் பிரச்னைகள் லெனின் பிரச்னைகளையும் தோற்கடிக்கக் கூடியன. 2000 ஆண்டுகளாக நடந்த ஆதிக்கத்தினின்றும் திராவிடத்தை விடுவிப்பது எளிதல்ல. 100-க்கு 95 அறியாதவர்களும், துரோகிகளும் இருக்கும் சமூகத்தை முன்னேற்றுவது எவ்வளவு கடினம்? எதிர்ப்பு கொஞ்ச நஞ்சமா? காந்தீயம் பல டால்ஸ்டாய்களின் சக்தியைக் கொண்டது. பார்ப்பனப்பீயப் புராண பீரங்கிகளும் கட்டுக் கதை டாங்கிகளும், சாரின் பீரங்கி, டாங்கிப் படையை விட வல்லமை பொருந்தியவை. பிறப்பினாலேயே முதலாளியாகிவிடுகிற வர்க்கம் உலகில் வேறு பகுதிகளில் காண முடியாத ஒன்று. இனத்தின் பெருமையை இயம்ப வேண்டிய இசை வல்லுனர்களும், பேராசிரியர்களும், தலைவர்களும் ஆரியக்கலைகளுக்கு ஆகாவு காட்டுகின்றனர். கல்லில் காரை உரிப்பது போன்ற வேலையை, பாலை வனத்தைப் பழத் தோட்டமாக்குவது போன்ற வேலையை மேற்கொண்டுள்ளார் பெரியார். ஆயினும் அவர் வெற்றி யடைவது உறுதி.
பல ஆண்டுகளுக்கு முன்னரே, பொது வுடமை A B C யை தமிழகத்துக்குக் கற்றுக் கொடுத்த முதல் ஆசிரியர் பெரியார். இரஷ்யாவிற்குச் சென்று, அங்கிருக்கும் வளர்ச்சியைக் கண்டு, தமிழகத்துக்குப் பாட்டாளி உலகின் செய்தியை எடுத்துச் சொன்னார். சர்க்காரின் கணைகளுக்கு இலக்கானவர்-இந்தக் காரணத்தால்.
லெனினுக்கு மார்க்ஸின் தத்துவம் என்ற ஆயுதம் கிடைத்தது. மார்க்ஸ் பாதையைப் பின் பற்றிச் சென்றார். மார்க்ஸ் திட்டம் லெனினுக்கு ஊன்று கோலாயிற்று. பெரியாருக்கு அத்தகைய உடனே கையாளக்கூடிய (Ready Made) கருவி கிடையாது. திராவிடத்தின் நோய் இன்னதெனக் கண்டு பிடித்ததோடமையாது, உதவி ஏறக் குறைய இல்லாமலேயே, அந்த நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் சிரமமும் கூட சேர்ந்து கொண்டது. எனவே பெரியார் புராணப் புதர்களை விலக்கி, மூட நம்பிக்கை மேடு பள்ளங்களை தூர்த்து, சூழ்ச்சிப் பாறைகளை அப்புறப்படுத்தி, பாதை போடும் பணியினை மேற் கொண்டுள்ளார். லெனினுக்காவது மார்க்ஸின் ஒற்றை யடிப்பாதை வழி காட்டியது. பெரியாருக்கு அதுவும் இல்லை! இரட்டைத் தொல்லை!!
பெரியாருக்கும் லெனினுக்கும், இலட்சியத்தை அடைவதில் கையாளும் முறையில் அடிப்படையிலேயே முக்கியமான வேற்றுமை உண்டு. லெனின் பலாத்காரத்தைக் கையாண்டார். பெரியார் பிரசார முறையைக் கையாளுகிறார். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. இருவருடைய பகைவரும், களங்களும் வேறு வேறு, பகைவருக் கேற்ற ஆயுதமும், களத்திற்கேற்ற போர் முறையும் அமைத்துக் கொள்வது தான் அறிவுடைமை. லெனினுடைய பகைவன் பீரங்கிப் படையை நம்பிய ஜார்ஜ் மன்னன், பெரியார் எதிர்ப்பது சூழ்ச்சியைத் தந்திரத்தை, பாமரரது அறியாமையை நம்பிய ஆரியத்தை. ஆரியத்தை எதிர்க்க அதிர்வெடி தேவையில்லை. உண்மையை எடுத்துரைத்து மக்கள் மனதை மாற்றுவது தான் சிறந்த முறை. லெனின் பலாத்காரத்தை எதிர்க்க பலாத்காரத்தைக் கையாண்டார். பார்ப்பனர் களம் புகுவதில்லை, பாமரரது உள்ளங்களில் சாதி வேற்றுமையைப் புகுத்தி அவர்களைப் பிளவு படுத்தி காரியத்தை நடத்துவர். பாமரரது உள்ளங்களில் புகுந்துள்ள நச்சுக் கருத்துக்களை அகற்ற பீரங்கி தேவையில்லை-ஆபத்தானது கூட, பகுத்தறிவு மருந்து தந்தால் போதும், பெரியார் பகுத்தறிவு மருந்து நல்ல வேலை செய்து வருகிறது.
நன்றி
தோழன் இதழ்(ஜூலை,1947)