கடவுளும் சோதிடமும் தன்னை மீறிய அல்லது தான் எதிர்பாராத ஒரு செயல் தன் வாழ்க்கையில் நடந்துவிட்டால், உடனே கிரகநிலை சரியில்லை என்று சோதிடம் பார்க்கக் கிளம்பி விடுவர். இந்தச் சோதிட பைத்தியம் இன்று ஏஐ- காலத்திலும் நவீன முகமூடியில் உள்ளே நுழைந்து விட்டது. சமூக ஊடகங்களில் நவீன முறையில் உங்கள் பெயரை மட்டும் சொல்லுங்கள்; உங்கள் ராசியை மட்டும் சொல்லுங்கள்; உங்கள் பிறந்த தேதியை மட்டும் சொல்லுங்கள் என்று ஏமாற்று வடிவங்கள் புதுமையாகப் பிறந்து வருகின்றன. சோதிடப் புரட்டு என்று நான் சொன்னால் என்னை நாத்திகன் என்றும், இறை நம்பிக்கையின் மீது கல்லெறிபவன் என்றும் சொல்லுவர்.
அன்றைய காலகட்டத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் நடுத்தர மக்கள் தங்களின் ஏழ்மைக்கும், நிலப்பிரபுக்களின் (மிராசுதார்களின்) சுரண்டலுக்கும் தங்களின் 'தலைவிதி' மற்றும் 'கிரக நிலைகளே' காரணம் என்று ஜோதிடர்களால் நம்ப வைக்கப்பட்டனர். உழைக்கும் மக்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராடாமல் முடக்குவதற்குச் சோதிடம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டதை உடைக்க, இத்தகைய கட்டுரைகள் திராவிட மற்றும் பகுத்தறிவு இயக்கங்களால் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
சுருக்கமாகச் சொல்வோமாயின், "இராகு காலமும் சோதிடமும்" கட்டுரை, ஆத்திகத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையே உள்ள மோதல் அல்ல; மாறாக, மனித அறிவிற்கும் (Reason) மூடநம்பிக்கைக்கும் (Superstition) இடையே நடைபெற்ற வரலாற்றுப் போரின் ஒரு உன்னதமான இலக்கியப் பிரதிபலிப்பாகும்.
இராகு காலமும் சோதிடமும்
[உண்மையை யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும்; பொய்யையும் தீமையையும் எவர் கூறினாலும் கண்டிக்க வேண்டும். இது தான் அறிவியல் வாதிக்கு அழகு. இக்கட்டுரை பல ஆண்டுகட்கு முன்பு "கல்கி" (திரு. ரா. கிருஷ்ணமூர்த்தி) யினால் எழுதப்பட்டதாகும்.]
'ராகு' வென்றால் என்ன என்பது நீங்கள் எல்லோரும் அறிந்த விஷயமே. ராகு என்பது ஒரு கிரகம் அல்லது ஒரு பாம்பு. அல்லது ஓர் இராட்சதன், அல்லது இராட்சதப் பாம்புக் கிரகம். இராகுவுக்குச் சில சமயம் திடீரென்று அகோரமான பசி உண்டாய் விடும்! பின்னர் அது என்ன செய்யும் தெரியுமல்லவா? பகலாயிருந்தால் சூரியனையும், இரவாயிருந்தால் சந்திரனையும் அப்பம் என்றெண்ணி விழுங்கி விட முயலும்! ஆனால் சூரியன் என்றால் இலேசா என்ன? சூரியனுடைய குறுக்களவு 1,00,00,00... மைல். (எவ்வளவு பூஜ்யம் என்பது நினைவில்லை. பூஜ்யம் எவ்வளவு போட்டால்தான் என்ன? இதே முறையில் எல்லாக் கிரகங்களின் அளவையும் கணக்காகச் சொல்லிவிடலா மென்பதை மட்டும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்!) பூமியிலிருந்து சூரியனுடைய தூரமோ ஒன்று போட்டுப் பதினாறு பூஜ்யம் மைல் என்று நினைக்கிறேன். இவ்வளவு தூரத்திலிருக்கும் சூரிய பகவான், வருடந்தோறும் நாம் கொடுக்கும் பொங்கல், வாழைப்பழம் முதலியவைகளைச் சாப்பிட்டுக் கொண்டிக்கும் போதே வெய்யில் மண்டை வெடிக்கின்றது. இப்படிப்பட்ட சூரிய பகவானை விழுங்க முயலுபவனின் கதி என்னவாகு மென்று சொல்ல வேண்டியதில்லை.
இப்படியாக, ராகு சூரியனையோ, சந்திரனையோ விழுங்கப் பார்த்து முடியாமல் திரும்பக் கக்கி விடுவதற்குத்தான் சூரிய சந்திர கிரகணங்கள் எனப் பெயர் என்பதை நாமெல்லோரும் அறிவோம். வாசகர்களின் காதோடு ஒரு சமாசாரம். இந்தக் கதையில் உண்மையாக உங்களுக்கு நம்பிக்கை கிடையாது; எனக்கும் நம்பிக்கை கிடையாது. முறையே, பூமி, சந்திரன் இவற்றின் நிழலினால் எப்படி சூரிய-சந்திர கிரகணங்கள் உண்டாகின்றன வென்பதை நாலாம் வகுப்பிலேயே நாம் படித்திருக்கின்றோம் அல்லவா? ஆனால் கிரகண தினத்தன்று மட்டும் இந்த விஞ்ஞான அறிவெல்லாம் நமக்கு மறந்து போய்விடுகிறது. அன்று, கடல் நீரிலோ குளங்குட்டையிலோ தலை முழுகித் தர்ப்பணம் முதலியவைகள் செய்ய நீங்களும் நானும் தவறுவதில்லை. இது குறித்து நாம் வெட்கப் படவேண்டிய அவசியமுமில்லை. வான சாத்திரத்தில் தேர்ச்சி பெற்ற எம். ஏ. பட்டதாரிகள் கூட அப்படித்தான் செய்கிறார்கள்! இது நிற்க.
எனது சோதனை
இராகுவைப் பற்றியும், கிரகணங்களைப் பற்றியும் இப்பொழுது நமக்கு நன்றாக உண்மை விளங்கிவிட்டது. ஆனால் இந்த ராகு காலம்: அதன் இரகசியம்தான் எனக்குப் பிடிபடவில்லை. ராகுவுக்கும் காலத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்? காலத்திலும், ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் வரும் ராகு காலம் மிகப் பொல்லாததாம்! ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு காரியத்துக்காக நான் புறப்பட்டுச் சென்றேன். புறப்படும் போதே "ராகு காலத்தில் கிளம்புகிறோம்!" என்று நெஞ்சு அடித்துக்கொண்டது. அதற்கேற்றாற்போல் காரியமும் நடக்கவில்லை. சரி, சரி, ராகு காலப்பலன் தான் என்று தீர்மானித்துவிட்டேன்.
ஆனால் நான் கொஞ்சம் சந்தேகப் பிக்கிருதி என்பது உங்களுக்குத் தெரியுமே. மறுபடியும் யோசனை வந்து விட்டது. நான் புறப்பட்ட நேரத்திற்கும் நான் பார்க்கச் சென்றவர் ஊரில் இல்லாததற்கும் என்ன சம்பந்தம் இருக்கக் கூடும்? ராகு காலத்திற்கு முன்னால் போயிருந்தாலும் அவர் இருந்திருக்க முடியாது. இவ்வாறு எண்ணி வேறொரு நாள் வேண்டுமென்றே ராகு காலத்தில் கிளம்பிச் சென்றேன். அன்று வேலை திருப்திகரமாய் நடந்தது. அதற்குப் பிறகு பல முறை ராகு காலத்தில் காரியம் தொடங்கிப் பார்த்தேன். சில முறை நடந்தது; சிலமுறை நடக்கவில்லை. ஆகவே காரிய சித்திக்கும் கிளம்பும் நேரத்திற்கும் சம்பந்தம் ஒன்றுமில்லை என்பது விளங்கிற்று. இக் கட்டுரையையும் நான் துணிந்து ராகு காலத்தில்தான் எழுதத் தொடங்குகிறேன்!
இதற்குள்ளாக, நேயர்களில் பாதிப்பேர் என்னை 'நாஸ்திகன்' என்றே தீர்மானித்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். உண்மையில் நான் கடவுள் கட்சியில் சேர்ந்தவன் தான். நான் பிறந்ததிலிருந்து கடவுளுடைய கட்சியில் இருந்துவிட்டு இப்போது அவருக்கு ஆபத்து வந்திருக்கும் சமயத்தில், அவரைக் கைவிட்டு விடுவதென்றால் என் மனம் இடம் கொடுக்கவில்லை. அது நம்பிக்கைத் துரோகமாகும் அல்லவோ? எனக்கு வயதோ இந்திய மக்களின் சராசரி வயதை விட அதிகமாய்விட்டது. இன்னும் எத்தனை காலம் உயிர்வாழப் போகிறேனோ தெரியாது. (ஜோதிடர்கள் 60 வயது என்று சொல்லி இருக்கிறார்கள் என்றாலும், என்னுடைய நண்பர்கள் சிலருடைய ஜோதிட அனுபவம் அவ்வளவு நம்பிக்கை யூட்டுவதாக இல்லை.) மனித காயம் அநித்யம். இன்றைக் கிருப்பாரை நாளைக்குக் காணோம். இந்த நிலையில் ஏதோ இருக்கும் வரையில் கடவுள் கட்சியிலேயே இருந்துவிட்டு உயிரை விடலாம் என்று உறுதியாகத் தீர்மானித்திருக்கிறேன் - ஆகையால் "நாஸ்திகன்" என்னும் பழியைத் தயவு செய்து என் பேரில் போட வேண்டாம்.
"அப்படியானால் நீர் ராகு காலத்தைப் பற்றிக் குறை சொல்கிறீரே! சொல்லலாமா?" என்று சிலர் கேட்கலாம். அப்படிக் கேட்பவர்கள் ராகு காலத்துக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்பதை முதலில் தெரிவித்தல் நலம். சம்பந்தம் எதுவும் இருப்பதாக நான் நினைக்க வில்லை. கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்து நிற்பவரென்று பொருள். எனவே, அவர் அறியாத் தனத்தையும் கடந்து நிற்க வேண்டுமல்லவா? ஆகையினால்தான் மனிதனுக்கு ஆண்மையையும் அறிவையும், ஊக்கத்தையும் உறுதியையும் அளித்த பகவான், இவ்வளவும் பயன்படாமற்போக நடுவில் நாளையும் கிழமையையும் 'ராகு காலத்தையும் வாரசூலையையும் வைத்திருப்பார் என்று என்னால் நம்ப முடியவில்லை.
சோதிட பலன்
கடவுள் விஷயத்தை இவ்வளவு திருப்திகரமாகத் தீர்த்துவிட்டபடியால், இனிமேல் சோதிடத்தைப் பற்றி என்னுடைய அனுபவங்கள் சிலவற்றைத் தைரியமாகச் சொல்லலாமென எண்ணுகிறேன். "ஒரு ரூபாய்க்கு ஒரு வருஷ பலன்" விளம்பரங்களைப் பற்றி நேயர்களுக்குத் தெரிந்திருக்கலாம். என்னுடைய நண்பர் ஒருவர் இத்தகைய விளம்பரம் ஒன்றைக் கண்டு ஒரு ரூபாய் பணம் அனுப்பி வைத்தார். அதில் ஜோதிடம் கேட்ட மாதத்திலிருந்து பன்னிரண்டு மாதங்களையும் எழுதி ஒவ்வொரு மாதத்திற்கும் நேராக "நன்மை" "தீமை" "நிஷ்பலன்" என்று இவ்விதமாகப் பலன் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கடிதத்தை அப்படியே பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டு ஒரு வருஷம் கழித்துப் பரிசோதிக்கலாமென்று நான் அந்த நண்பருக்கு யோசனை கூறினேன்.
அவ்வாறே ஒரு வருஷம் சென்ற பிறகு ஒருநாள் அக்கடிதத்தைக் கொண்டுவந்தார் நண்பர். பலன்களைப் படித்துவிட்டுப் "பலே ஜோதிடம்! அவ்வளவும் சரியாயிருக்கிறது!" என்று அவர் கூறினார். "என்ன? என்ன?" என்று நான் ஆவலுடன் வினாவிளேன். அவர் கூறியதாவது:- "நிஷ்பலன்” என்று இதில் காணப்படும் மாதத்தில் நான் 104 டிகிரி சுரம் அடித்து வைகுண்டத்தை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். "நன்மை” என்று இதில் காணப்படும் மாதத்தில் பரீட்சையில் தவறிப்போனேன். "தீமை” என்று இதில் போட்டிருக்கும் மாதத்தில் எனக்குக் கலியாணம் நடந்தது."
இவ்வாறு சொல்லி அவர் சிரித்தார். நானும் நகைத்தேன். ஆனால் சற்று யோசித்துப் பார்த்ததில் சோதிடம் சரி யென்றே தோன்றியது. எப்படியென்றால், முதலில் "நிஷ்பலன்" மாதத்தை எடுத்துக்கொள்ளுவோம். அம்மாதத்தில் என் நண்பருக்குச் சுரம் அடித்தது உண்மையே. ஆனால் அது காரணமாக அவர் வைகுண்டத்தை எட்டிப் பார்த்தாரே ஒழிய வைகுண்டம் போய்ச் சேரவில்லை அல்லவா? அங்கே போயிருந்தால் அல்லவா சுரம் பலன் தந்ததாகும்? ஆதலின், அது 'நிஷ்பலன்' தான்! பின்னர் 'நன்மை' என்ற மாதத்தில் என் நண்பர் பரீட்சையில் தவறினார்! எனவே, உத்தியோகத்திற்கு அலையும் கவலை இன்னும் ஒரு வருஷத்திற்கு அவருக்கு இல்லாமற்போயிற்று. இது நன்மை அல்ல வென்றால் வேறு எதை நன்மை என்று சொல்லுவது? கடைசியாகக் கலியாணம்... கலியாணம் நன்மையா, தீமையா என்பதைப் பற்றி என் அபிப்பிராயத்தை இங்கே நான் எழுதப்போவதில்லை. நேயர்களில் கலியாணமானவர்கள் எல்லாருக்கும் அது தெரிந்த விஷயமே! பிரம்மசாரிகளாயிருக்கும் பாக்கியசாலிகள் தயவு செய்து தனித்தனியே கலியாணமானவர்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும்!
"சப்தரிஷி வாக்கியம்" என்று சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். இது ஒரு பிரம்மாண்டமான சாஸ்திரம்! இவ்உலகிலே ஆதிகாலத்திலிருந்து இன்றுவரைக்கும் இருந்தவர்கள், இப்போது இருப்பவர்கள், இனிமேல் பிறக்கப் போகிறவர்கள் ஆகிய எல்லாருடைய ஜாதகங்களுக்கும் பிரதிகளும் அவற்றிற்கு மிக நுட்பமான ஆயுள் பலனும் இந்த சாத்திரத்தில் உண்டாம்! என்னுடைய மாமன் ஒருவர் கொடியதொரு நோயினால் வருந்திக் கொண்டிருந்தார். அவர் மேற்படி சாஸ்திரம் வைத்திருந்த ஒருவரிடம் சென்று ஏழு ரூபாய் கொடுத்துப் பலன் கேட்டார். ஒரு அறையில் கட்டுக்கட்டாகக் கிடந்த ஓலைச் சுவடிகளை மூன்று நாள் புரட்டிப் புரட்டித் தேடிய பிறகு அவருடைய ஜாதகத்தைப் போன்ற ஜாதகமும் 200 பாட்டுகளில் அந்த ஜாதகத்தின் பலன்களும் அடங்கிய சுவடிக் கட்டும் கிடைத்தது. மேற்படி பாட்டுகளுக்கு நகல் எடுத்துக்கொண்டு அவர் திரும்பிவந்து சேர்ந்தார். அதில் அவருடைய ஊர், பெயர் முதற்கொண்டு அன்றுவரை அவருடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் எல்லாம் சிறிதளவும் மாறாமல் கூறப்பட்டிருந்தன. இது குறித்து, எல்லாம் மிக்க ஆச்சரியமடைந்தார்கள்.
ஆனால் எனக்கு வேறொரு விஷயம், அதைவிட ஆச்சரியமாயிருந்தது. "சப்தரிஷி வாக்கியம்" பண்டைக் கால ரிஷிகளால் அருளிச் செய்யப்பட்டதாம். அதாவது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அது எழுதப்பட்டிருக்க வேண்டும். அதற்குப் பின் இன்றுவரை உலகத்தில் எவ்வளவோ கோடானுகோடி மனிதர்கள் பிறந்து இருக்கிறார்கள். அவ்வளவு பேருடைய ஜாதகப் பயன்களும் எழுதப்படுவதற்கு எத்தனை சுவடிகள் வேண்டும்? அந்தச் சுவடிகளை யெல்லாம் வைப்பதற்கு எவ்வளவு பெரிய இடம் வேண்டும்? ஆனால் என்னுடைய மாமனார் ஒரு சிறு அறையில் கிடந்த சுவடிகளிலிருந்து தம்முடைய ஜாதகத்தைத் தேடிப் பொறுக்கி எடுத்ததாகக் கூறினார். இது சந்தேகத்துக்கு இடமென்பதாக எனக்குத் தோன்றிற்று. பின்னால் சந்தேகமும் நீங்கிவிட்டது. சாஸ்திரம் பார்த்துவிட்டு வந்ததற்குப் பிறகு ஒன்றாவது அதில் கூறியபடி நடக்கவில்லை. முப்பத்தினாலாவது வயதில் அவர் நோய் நீங்கிக் குணம் பெறுவாரென்றும், அதன் பின்னர் அவருக்குச் சர்க்கார் உத்தியோகம் கிடைக்கும் என்றும், இரண்டு பெண் குழந்தைகள் பிறக்குமென்றும், ஐம்பத்தைந்தாவது வயதில் துவாதசி திதியில் காலை பத்து நாழிகைக்கு அவர் காலமாவார் என்றும் சாஸ்திரம் சொல்லிற்று. நல்ல வேளையாக அவர் இந்த விபத்துக்களுக்கெல்லாம் தப்பி, சாஸ்திரம் பார்த்த நாலாவது வருடத்தில் முப்பத்தி மூன்றாம் வயதில் அமாவாசையன்று இரவு பன்னிரண்டு மணிக்கு மரணமடைந்தார். அந்த வயதிலே ஒரு சிறு கண்டமிருப்பதாகக் கூட சப்தரிஷி வக்கியத்தில் சொல்லப்படவில்லை!
"சப்தரிஷி வாக்கியத்தைக் காவல் புரிந்த கனவான் கவிபாடத் தெரிந்தவராய் இருக்கலாம் என்பது என்னுடைய ஊகம். சாஸ்திரம் பார்க்க வருவோர் ஏழு ரூபாயைக் கொடுத்துவிட்டு ஓலைச் சுவடிகளைப் புரட்டிக் கொண்டிருக்கும் போது இவர் அவர்களுடைய வரலாறுகளை விசாரித்து அறிந்து கவிபாடிச் சுவடியில் எழுதிக் கும்பலில் சேர்த்துவிடுகிறார் போலும்! ஆனால் அவர் பேரில் நான் குற்றஞ் சொல்லுவதாக நினைக்க வேண்டாம். தமிழ் நாட்டில் தற்போது கவிகள் பிழைப்பதற்கு வேறென்ன வழி இருக்கின்றது? கவிகளுக்கு மனமுவந்து பணம் கொடுப்போர் யார் இருக்கிறார்கள்? ஒரு பாரதியின் பாடே எவ்வளவோ திண்டாட்டமாக இருந்தது. ஆகவே மேற்படி "சப்தரிஷி வாக்கியக்காரர்" மீது தவறு இருப்பதாக நான் சொல்ல மாட்டேன்!
மேலும் இரண்டொன்று!
இன்னும் இரண்டோர் அனுபவங்களைச் சொல்லுகிறேன். எங்கள் ஊரில் ஜோசியர் ஒருவர் வெகு காலமாகப் பிரபலமடைந்திருந்தார். தூர தூர இடங்களிலிருந்து அவரிடம் சோதிடம் கேட்கவும், கலியாணப் பொருத்தங்கள் பார்க்கவும் ஜனங்கள் வருவார்கள். அவருக்கு அருமையாக ஒரு பெண் இருந்தாள். அவளுடைய கலியாணத்தை மிகச் சிறப்பாக நடத்தினார் ஜோசியர். கலியாணத்தின் நாலாம் நாள் இரவு மாப்பிள்ளைக்குக் காலரா வந்து மறுநாள் காலையில் பெண் விதவையானாள். இந்தப் பரிதாப சம்பவம் நடந்ததற்கு அடுத்த மாதத்தில் ஜோசியர் எங்கள் ஊரைவிட்டே போய் விட்டார்!
இதன் பிறகு மற்றொரு பிரபல ஜோசியர் தற்காலிகமாக எங்கள் ஊருக்கு வந்திருந்தார். அவரிடம் விதை விதைப்பதற்கு நல்ல நாள் கேட்டுக்கொண்டு பெரிய மிராசுதார் பலர் சாகுபடிக்கு விதை தெளித்தார்கள். பதினைந்து நாளைக்கெல்லாம் கொள்ளிடம் உடைப்பெடுத்துக் கொள்ளவே நாற்றுக்களெல்லாம் அடியோடு நாசமாயின. பல நிலங்கள் மண் மேடிட்டுப் போயின. சர்க்கார் கிஸ்திகூட வஜா செய்யப்பட்டது என்றால், மகசூல் எத்தனை லட்சணமாய் இருக்குமென்று நீங்களே ஊகித்துக்கொள்ளலாம்!
லாபமென்ன?
ஒருக்கால் வாசகர்களின் சிலருடைய அநுபவம் வேறுவிதமாக இருத்தல்கூடும். அவர்கள் கேட்ட ஜோதிடம் ஒருவேளை பலித்திருக்கக் கூடும். எனினும், அதனால் அவர்கள் அடைந்த பலன் என்னவென்பதைச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். சோதிட சாஸ்திரமே பொய் என்பதாக நான் சொல்லவில்லை. அந்த சாஸ்திரத்தில் எனக்கு ஆராய்ச்சி கிடையாது. எனவே அது பொய்யென்றோ நிஜமென்றோ நான் சொல்லத் தயாராய் இல்லை. அது உண்மையாகவே இருந்தாலும் அதிகப் பயனில்லை என்றுமட்டுமே தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைக்குப் பத்து வருஷத்திற்குப் பிறகு ஒரு தீமை வரப்போவதாக வைத்துக்கொள்ளுவோம். அதை இப்போதே தெரிந்து கொள்ளுவதால் நாம் அடையும் பயன் என்ன? தீமையைத் தடுத்துவிட முடியாது. முடியுமென்றால் ஜோசியம் பொய்யாகிவிடுகின்றது. ஆகவே அத்தீமையைப் பற்றி இப்போதிருந்தே எண்ணி எண்ணி வருந்துவதைத் தவிர வேறு லாபம் என்ன? வரப்போவது நன்மையாய் இருந்தாலும் அதை அறிந்து கொள்ளவும் நான் விரும்ப மாட்டேன். திடீரென்று எனக்கு ஒரு புதையல் கிடைத்தால், அது ஒரு சிறு தொகையாய் இருந்தாலும் சந்தோஷப்படுவேன். புதையல் கிடைக்கப் போகும் விஷயம் முன்னமே தெரிவித்துவிட்டால் "சீ! இவ்வளவுதானா?" என்று வருத்தப்படுவேன். ஆகவே முன்கூட்டித் தெரிந்துகொள்ளுவதில் பயன் என்ன?
கடைசியாக ஜோதிடர்களுக்கு ஒரு வார்த்தை. இதைப் போல நான் இன்னும் 9999 கட்டுரைகள் எழுதினாலும் உங்களுடைய பிழைப்புக்கு யாதொரு ஆபத்தும் வராது. ஆகையால் கவலையற்று இருங்கள்! இந்தக் கட்டுரை ராகு காலத்தில் தொடங்கி எங்கெல்லாமோ சுற்றி, ஜோதிடத்தில் வந்து முடிந்திருக்கிறது. ராகு காலத்தில் ஆரம்பித்ததன் பயனைப் பார்த்தீர்களா?
(“கல்கி”-எழுதிய “ஏட்டிக்குப் போட்டி" என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.)
நன்றி - குத்தூசி இதழ்