மீள்பதிப்புக் குறிப்பு:
    இந்திய வரலாற்றையே உலுக்கிய மாபெரும் துயரச் சம்பவமான மகாத்மா காந்தியடிகளின் படுகொலை நிகழ்ந்த அன்று, தமிழகத்தின் திராவிட இயக்கப் பார்வையில் எழுதப்பட்ட மிக முக்கிய இதழியல் வரலாற்றுக் கட்டுரை இது. 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30 தேதியிட்ட 'முரசொலி' நாளிதழில் வெளியான இத்தலையங்கம், காந்தியாரின் தியாகம், உழைப்பு மற்றும் கொள்கைகள் குறித்துப் பாராட்டுவதோடு, அவரது அசாத்தியமான வாழ்வை முடிவுக்குக் கொண்டு வந்த மௌடீக மதவெறியையும், சதிப் பின்னணிகளையும் மிக வீரியமாகச் சாடுகிறது. தந்தை பெரியார் அவர்களின் தீர்க்கதரிசனக் கருத்துக்கள் மற்றும் சுதந்திர இந்தியாவின் தொடக்க கால அரசியல் நகர்வுகள் குறித்து அன்றைய சூழலில் நிலவிய காரசாரமான சமுதாய விவாதங்களை இப்பதிவு துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. கடந்த நூற்றாண்டுத் தமிழகத்தின் சமூக-அரசியல் இதழியல் போக்குகளையும், வரலாற்றுத் தரவுகளையும் இன்றைய இணையத் தலைமுறையினர் நடுநிலையோடு படித்துத் தெரிந்துகொள்ளும் நோக்கோடும், கல்வி மற்றும் வரலாற்று ஆவணப் பணிக்காகவும் இக்கட்டுரையை இங்கு தட்டச்சு செய்து மறுபதிப்பு செய்துள்ளேன்.

இந்திய உபகண்டத்தின் வரலாற்றில் இரத்தக்கரை படிந்த நாள்! 
மக்கள் உகுத்த இரத்தக் கண்ணீர் அருவியென ஓடி அரபிக்கடலில் கலந்து... வங்காளக் குடாக்கடலில் வழிந்தோட... "காந்தி மாண்டாரா"? என்ற கேள்விக்குமுன் கிளம்பிய பெருமூச்சு இமயத்தை அசைக்க இப்படி ஒரு சோக பூகம்பம் 30-1-48ல்!

திரு. காந்தியார் சுடப்பட்டார். மும்முறை சுடப்பட்டார்! ஐயகோ! சுடப்பட்டார்! பிரார்த்தனைக்குத்தான் வந்தாராம்... வேலும் வாளும் ஏந்தி வேற்றார் படை எங்கே என்று அவர் அதட்டலாக கேட்ட நேரத்தில் அல்ல! அன்பு தவழும் மொழிகளில் பிரார்த்தனைக்கு மக்கள் வந்துவிட்டனரா என்று வினவிய நேரத்தில் சுடப்பட்டார்! கனல் கக்கும் கண்களோடு... கட்டாரியை எறிந்து காட்டானையைப் போல் எதிரியின்மேல் மோதிய வேளையில் அல்ல- கருணை பொங்கும் கண்களால் தன் உபதேசங்கேட்க வந்திருந்த மக்களைக் கண்டானந்தித்த வேளையில் சுடப்பட்டார்!
சுடப்பட்டார்.... சுடப்பட்டார்.... சுக்கு நூறாக்கப்பட்டார்.... 30ந்தேதி மோகனப் புன்னகையார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!... 31ந்தேதி அய்யய்யோ... முறிந்தும் எரிந்தும் போன எலும்புத் துண்டுகள்!... ஒரு முட்டாள் வீசிய மூன்று குண்டுகள் முரட்டுத் தனத்தையும்- மௌடீக மதவெறியையும் போக்குவதற்கு முயன்ற ஒரு தியாகியின் வாழ்வை முடித்தன:
"ஏ! துப்பாக்கிக் குண்டே!... அந்த துன்மார்க்கன் செய்த துரோக வேலைக்கு நீயும் துணையா?... எப்படித்தான் அண்ணல் காந்தியின் அன்புகனியும் இருதயத்தைப் பிளந் தெறிந்தாயோ?" என்று இந்தக் கண்டம் அழுகிறது. உலகமே அழுகிறது.
காந்தியாரின் உயிரை உறிஞ்சியவன் ஒரு பார்ப்பனன். ஆம்... சாம்ராஜ்யங்களை சாய்த்த பரம்பரை! மன்னாதி மன்னர்களை மண்கவிழச்செய்த மரபு!... அந்த இனம் கக்கிய ஒரு துளி விஷம் காந்தியார் உயிரை சூறையாடிற்று. அந்த வைதீகம் வீசிய ஒரு வஞ்சக வாள் வார்தா உத்தமரின் வாழ்வை வெட்டித்தள்ளிற்று, அந்த மதவெறி செய்த சதி ஒரு மாபெரும் வீரருக்கு மரணத்தீர்ப்பு வழங்கிற்று.
பெரியார் அவர்கள் 'தீர்க்கதரிசனம்' போல் பால் சொன்னார்கள்; "காந்தியாரைக் கொன்றது மதமும், வைதீகமும்" என்று! மறுநாள் செய்தியாக வந்தது; காந்தியாரைக் கொன்றது ஒரு மராட்டிய பார்ப்பனன் என்று! மதத்திற்கு சவக்குழி வெட்டியவரல்ல காந்தியார் ஆனாலும் மரணம் அவருக்குப் பரிசாகக் கிடைத்தது.
இந்தியா கண்ணீர் விடுகிறது, இந்து மகாசபை இனிப்பு வழங்குகிறதாம். ஆச்சரியப்படவில்லை நாம்! ஓமான் கடலில் சர். செல்வத்தின் வாழ்வு சிதைந்த போது சர்க்கரை வழங்கிய ஆரியக்கூட்டம் வாழ்கிற திராவிடத்தில் நாமும் வாழ்வதால்! காந்தியாரின் கொள்கைகளில் நமக்கு கருத்து வேற்றுமையுண்டு. ஆனால் நாம் கல் நெஞ்சர்களல்ல!.... காந்தியாரின் தியாகத்தையும் ...அவர் மேலான உழைப்பையும்... அவர் ஊக்கத்தையும் ... நாம் பாராட்டியவர்கள்!... அதே நேரத்தில் காந்தியாரின் தொண்டு பல பதவி வேட்டைக்காரர்களுக்கும் பனியா-பார்ப்பனர்களுக்கும் பயன்படுகிறது என்றும் சொல்லத் தவறாதவர்கள்!......
காந்தியார்-பெரியார் தொடர்பு வெறும் மின்னலல்ல!... ஈரோட்டு ராமசாமியையும், நாகம்மாவையும் கேட்டுச் செய்யுங்கள் என்று தமிழ்நாட்டுக் காங்கிரசுக்கு காந்தியார் புத்தி சொல்லிய காலம் கூட ஒன்று இருந்தது. அந்தக் காலத்தை மலையேறச் செய்ததும் பார்ப்பனீயம். இன்று இந்த மாபெரும் சதியைச் செய்ததும் பார்ப்பனீயம்- அட! பாம்பினுங் கொடிய பார்ப்பனியமே!... காந்தியாரைப் பரந்தாமன் அவதாரம் என்று கூறியதும் நீதான்! அவரைப் பாடையில் ஏற்றியதும் நீதான். இது உனக்கு அடுக்குமா?....
எத்தனையோ சுத்த வீரர்களை- சூரர்களை உன் சூறாவளி வேக சூழ்ச்சியால் சுடுகாட்டில் தள்ளி மகிழ்ந்தாயே உன் கோரப்பசி..... சுத்த சன்மார்க்கரையும் சுவை பார்த்துத்தான் தணிவேன் என்றதா? அநீதி! அநீதி !! பெருத்த அநீதி !!!
காந்தியாரே!.... தங்கள் உழைப்பின் பெரும் பகுதியைக் கூலியாகக் கொடுத்து . இக்கண்டத்திற்கு ஓரளவு விடுதலை வாங்கித் தந்தீரே!... விடுதலை... உண்மை விடுதலையாக மாறுவதற்குமுன் - பட்டேலிசத் தர்பாரும் பதவி வேட்டையும் ஓய்வதற்கு முன்- தேசீயத்தில் தெகிடுதத்தம் கலந்துவிட்டது என்று தாங்கள் எழுதி ... அந்த அறிவுரை ஆட்சியாளரை நல்வழிப்படுத்துவதற்கு முன், நாசத்திற்காளானீரே! ......
'சுதந்திரம்' கிடைத்த ஆறாவது மாதத்தில்.. இந்த அகால சாக்காடா?...... அதுவும் தங்களுக்கா? ... தாங்கள் என்ன மதவெறியை வளர்த்தீர்களா?.... அமைதியைக் குலைத்தீர்களா? அராஜகத்திற்கு காரண கர்த்தாவாயிருந்தீர்களா?... இல்லையே! ...பிறகேன் இந்தப் படுகொலை! மதவெறி! .. பதவி வெறி! பார்ப்பனீய வெறி! இதுதான் பதிலா? ... ஆகஸ்டு 15 .... துக்க நாள் என்றாரே பெரியார் ...... அதை பட்டேலிசமும் பார்ப்பனீய ஆட்சியும் மெய்ப்பித்ததைவிட அதிகமாக மதோன்மத்தன்!.. சுதந்திர 'இந்தியா'வில் ... யாருக்காக பாடுபட்டீர்களோ அந்த சமுதாயத்தின் ஒரு மலைப்பாம்பால் விழுங்கப்பட்டீர்கள் என்பது... அவமானம் ... வெட்கக்கேடு ... இந்த உபகண்டத்திற்கேற்பட்ட மாறாத இழிச்சொல்!.
30-1-1948! ..ஆமாம் ... வரலாற்றை வீணாக்கிய நாள்!